உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 12/15 பக். 27-31
  • மணத்துணையின் இழப்பைச் சமாளிக்க...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மணத்துணையின் இழப்பைச் சமாளிக்க...
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீங்கா வேதனை
  • அந்தந்த நாளைச் சமாளித்தல்
  • உயிர்த்தெழுதல் நம்பிக்கை —ஆறுதலின் உறைவிடம்
  • நம்பிக்கைக்கு அச்சாணி
  • துணையை இழந்தவர்களுக்கு என்ன தேவை? நீங்கள் எவ்வாறு உதவலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • “அழுகிறவர்களோடு அழுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • மற்றவர்கள் எப்படி உதவலாம்?
    நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது...
  • “கடைசி எதிரி” வீழ்த்தப்படும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 12/15 பக். 27-31
[பக்கம் 27-ன் படம்]

மணத்துணையின் இழப்பைச் சமாளிக்க...

கணவன் “தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்”, மனைவியும் “தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.” அதோடு, அவர்கள் ‘ஒரே மாம்சமாயிருந்து’ தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது. (எபே. 5:33; ஆதி. 2:23, 24) காலம் செல்லச்செல்ல அவர்களுக்கிடையே இருக்கும் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கிறது. அருகருகே வளரும் இரு மரங்களின் வேர்களைப் போல மணவாழ்வில் இணையும் இரு உள்ளங்களின் உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விடுகின்றன.

ஆனால், கணவனோ மனைவியோ இறந்துவிடும்போது இந்தப் பலமான பிணைப்பு அறுந்துவிடுகிறது. துணையை இழந்தவர் மனவேதனையாலும் தனிமை உணர்வாலும் தத்தளிக்கலாம்; ஏன், ஒருவித கோபமும் குற்றவுணர்வும்கூட அவருக்கு ஏற்படலாம். டான்யெலா தன்னுடைய 58 வருட மணவாழ்வில், துணையைப் பறிகொடுத்த எத்தனையோ பேரை பார்த்திருக்கிறார்.a ஆனால், அவருடைய கணவர் இறந்தபோதோ “இது எந்தளவுக்கு வேதனையானதுனு இப்பதான் புரிஞ்சிக்க முடியுது. அனுபவிக்கிறவங்களுக்குதான் அந்த வேதனை தெரியும்” என்று சொன்னார்.

நீங்கா வேதனை

துணையை இழக்கும்போது ஏற்படுகிற மன வேதனைதான் மற்ற எல்லா வேதனைகளையும்விட கொடூரமானது என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். துணையை இழந்த அநேகர் இதை ஒத்துக்கொள்கிறார்கள். மில்லியின் கணவர் இறந்து பல வருடங்கள் ஆகின்றன. 25 வருட பந்தம் முறிந்துவிட்ட வேதனையில் தவிக்கும் அவர், “நான் முடமான மாதிரி உணர்றேன்” என்கிறார்.

‘கணவரை இழந்தவங்க பல வருஷமாகியும் ஏன் அதையே நினைச்சு நினைச்சு கவலைப்படுறாங்க’ என்று சூசன் யோசித்ததுண்டு. ஆனால், 38 வருடங்களாக தன்னோடு வாழ்ந்த ஆருயிர் கணவர் இறந்தபோதுதான் அந்த வேதனை அவருக்கு புரிந்தது. 20 வருடங்கள் உருண்டோடிய பிறகும் “அவரை நினைக்காத நாளே இல்ல” என்கிறார் சூசன். கணவர் தன்னோடு இல்லை என்பதை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு அழுகை முட்டிக்கொண்டு வரும்.

துணையை இழப்பது கொடுமையிலும் கொடுமை; அந்த வேதனை எளிதில் நீங்காது. இதை பைபிளும் ஒத்துக்கொள்கிறது. உதாரணத்திற்கு, சாராள் இறந்தபோது, ஆபிரகாம் ‘சாராளுக்காகப் புலம்பி அழுதார்.’ (ஆதி. 23:1, 2) உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருந்தபோதிலும், தன் அன்பு மனைவி இறந்தபோது ஆபிரகாம் தாளா துக்கத்தில் தவித்தார். (எபி. 11:17-19) யாக்கோபின் அருமை மனைவி ராகேல் இறந்தபோது, அவர் எப்போதும் அவளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார். அதனால்தான் தன்னுடைய மகன்களிடம் அவளைப் பற்றிப் பேசினார்.—ஆதி. 44:27; 48:7.

இந்த பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்? மணத்துணையை இழந்தவர்கள் வருடக்கணக்கில் அதன் வேதனையைச் சுமக்கிறார்கள். அவர்களுடைய கண்ணீரும் துயரமும் பலவீனத்தின் அடையாளம் அல்ல; பேரிழப்பின் விளைவே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்முடைய அனுதாபமும் அரவணைப்பும் நீண்ட காலத்திற்குத் தேவைப்படலாம்.

அந்தந்த நாளைச் சமாளித்தல்

துணையை இழந்தவர் தனிமரமாக வாழ்வது சுலபமல்ல. சோகமாகவோ விரக்தியாகவோ இருக்கும் மனைவியை எப்படி உற்சாகப்படுத்துவது, எப்படி ஆறுதல்படுத்துவது என்பது அவளோடு பல வருடங்கள் வாழ்ந்த ஒரு கணவருக்குத்தான் தெரியும். அவரை இழக்கும்போது, அதே போன்ற அன்பையும் அரவணைப்பையும் வேறு எங்கிருந்து பெற முடியும்? அதுபோலவே கணவனை எப்படிச் சந்தோஷமாக வைத்துக்கொள்வதென காலம் செல்லச்செல்ல ஒரு மனைவி தெரிந்துகொள்கிறாள். அவளின் அன்பான ஸ்பரிசம், மனதை வருடும் வார்த்தைகள், அவருடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் அவள் காட்டும் கவனிப்பு என இதற்கெல்லாம் ஈடிணை ஏது? அவள் இறக்கும்போது வாழ்க்கையே சூனியமாகிவிட்டதுபோல் அவர் உணரலாம். எனவே துணையை இழந்த சிலருக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது, பயமும் கவ்விக்கொள்கிறது. பயத்தையும் கலக்கத்தையும் விரட்டியடிக்க என்ன பைபிள் நியமங்கள் அவர்களுக்கு உதவும்?

[பக்கம் 28-ன் படம்]

அந்தந்த நாளுக்கான கவலையைச் சமாளிக்க கடவுள் உதவுவார்

“நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்.” (மத். 6:34) பொருளாதார தேவைகளைப் பற்றியே இயேசு இங்கு சொல்லியிருந்தாலும், அன்பானவர்களைப் பறிகொடுத்தவர்களின் வலியைப் போக்கும் அருமருந்தாக இந்த வார்த்தைகள் இருந்திருக்கின்றன. தன் மனைவியை இழந்த சில மாதங்களில் சார்ல்ஸ் இவ்வாறு எழுதினார்: “மோனிக்கை நான் இன்னும்கூட ரொம்பவே மிஸ் பண்றேன், சில சமயங்கள்ல என்னால தாங்கிக்கவே முடியறதில்ல. இருந்தாலும், இது சகஜம்தான், ஒவ்வொரு நாளும் போகப்போக என்னோட கவலையெல்லாம் கொஞ்சமாவது குறைஞ்சுடும்னு நினைக்கிறேன்.”

ஆம், சார்ல்ஸ், அந்த ‘ஒவ்வொரு நாள்’ கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இது எப்படி முடிந்தது? “யெகோவாவோட உதவியால அந்தந்த நாளுக்கான பாடுகள சமாளிச்சேன்” என்கிறார் சார்ல்ஸ். அவருடைய வேதனையெல்லாம் ஒரே நாளில் மாயமாய் மறைந்துவிடவில்லை; அதே சமயம், அவர் ஒரேயடியாக சோகத்தில் மூழ்கிவிடவுமில்லை. நீங்கள் மணத்துணையை இழந்து தவிப்பவரென்றால், அந்தந்த நாளுக்குரிய வேதனைகளை மட்டும் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். யாருக்குத் தெரியும், நாளை என்பது உங்களுக்கு ஒரு புதிய விடியலாக, தெம்பளிக்கும் புதிய நாளாக அமையலாம்!

சாக வேண்டும் என்ற நோக்கத்தோடு யெகோவா மனிதனைப் படைக்கவில்லை. இது ‘பிசாசின் செயலே.’ (1 யோ. 3:8; ரோ. 6:23) சாத்தான், சாவையும் பயத்தையும் தூண்டிலாகப் பயன்படுத்தி அநேகரைத் தனக்கு இரையாக்கிக்கொள்கிறான், அவர்களுடைய எதிர்கால நம்பிக்கையையும் தவிடுபொடியாக்குகிறான். (எபி. 2:14, 15) கடவுளுடைய புதிய உலகில்கூட உண்மையான சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் கிடைக்குமா என ஒருவர் நினைத்தால், அதுவே சாத்தானுக்கு கொண்டாட்டம்தான். ஆக, ஒருவர் வாழ்க்கைத் துணையைப் பறிகொடுப்பதால் படுகிற கடுந்துயரத்திற்குக் காரணம் ஆதாம் செய்த பாவமும், சாத்தானுடைய சூழ்ச்சிகளும்தான். (ரோ. 5:12) ஆனால், சாத்தான் பயன்படுத்தி வருகிற மரணம் எனும் கொடிய ஆயுதத்தை யெகோவா முறிப்பதோடு, அது ஏற்படுத்துகிற உணர்ச்சிப்பூர்வ வடுக்களையும் சுவடு தெரியாமல் நீக்கிவிடுவார். சாத்தான் தூண்டிவிடுகிற அந்தப் பயத்திலிருந்து வெளிவந்தவர்களில் மணத்துணையை மரணத்தில் பறிகொடுத்த அநேகர் இருக்கிறார்கள்; அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

மனிதர் பூமியில் உயிர்த்தெழுந்து வரும்போது அவர்களுடைய உறவுமுறையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். சற்று யோசித்துப் பாருங்கள்: அம்மா-அப்பா, தாத்தா-பாட்டி, முன்னோர்கள் என எல்லோரும் உயிர்த்தெழுந்து வருவார்கள். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் சேர்ந்து படிப்படியாக பரிபூரணத்தை எட்டுவார்கள். முதுமையின் பாதிப்புகள் தடம் தெரியாமல் மறைந்திருக்கும். அவர்கள் எல்லோருமே இளமை துடிப்புடன் இருப்பார்கள். இளம் தலைமுறையினருக்கும் முன்னோர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அது மனித குடும்பத்தில் ஏற்படவிருக்கும் மாபெரும் மாற்றங்களில் ஒன்றாக இருக்கும்.

உயிர்த்தெழுந்து வருவோரைப் பற்றிய நிறைய கேள்விகள் நம் மனதில் உதிக்கலாம். உதாரணத்திற்கு, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட துணையை இழந்தவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழலாம். கணவரை இழந்த ஒரு பெண், அடுத்தடுத்து மறுமணம் செய்துகொண்ட எல்லோரையுமே மரணத்தில் பறிகொடுத்த நிலையில், உயிர்த்தெழுதலின்போது அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள் என்று சதுசேயர்கள் கேள்வி எழுப்பினார்கள். (லூக். 20:27-33) உயிர்த்தெழுதலின்போது அவர்களுக்கிடையே எப்படிப்பட்ட உறவு இருக்கும்? அதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாததால், வீணாக நம் மனதைக் குழப்பிக்கொள்வதில்... நாமாகவே எதையாவது கற்பனை செய்துகொள்வதில்... எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்: யெகோவா எதிர்காலத்தில் செய்யப்போகிற எதுவும் நன்மையாகவே இருக்கும், அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை, நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.

உயிர்த்தெழுதல் நம்பிக்கை —ஆறுதலின் உறைவிடம்

உயிர்நீத்த நம் அன்பானவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்பது கடவுளுடைய வார்த்தை தரும் தெள்ளத் தெளிவான போதனைகளில் ஒன்று. கடந்த காலத்தில் உயிர்த்தெழுந்தவர்களைப் பற்றிய பைபிள் பதிவுகள், “கல்லறைகளில் உள்ள அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்பதற்கு அச்சாரம் அளிக்கின்றன. (யோவா. 5:28, 29) சாவின் பிடியிலிருந்து விடுதலைபெற்று வருகிறவர்களைக் கண்கூடாகப் பார்ப்பவர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். அதேபோல், உயிர்த்தெழுந்து வருபவர்களும் சந்தோஷத்தில் திளைப்பார்கள்; அவர்களுடைய சந்தோஷம் நம் கற்பனைக்கு எட்டாதது.

மாண்டோர் உயிர்பெற்று வரும்போது பூமியில் மகிழ்ச்சி பந்தலிடும். கோடிக்கணக்கானோர் உயிர்த்தெழுந்து மீண்டும் மனிதரோடு கூடிவாழ்வர். (மாற். 5:39-42; வெளி. 20:13) எதிர்காலத்தில் நடக்கப்போகும் இந்த அற்புதத்தைப் பற்றி தியானித்துப் பார்ப்பது, பாசத்திற்குரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு ஆறுதலின் அருமருந்தாக இருக்கும்.

அற்புதமான இந்த உயிர்த்தெழுதல் நடக்கும்போது இனியும் யாராவது சோகமாயிருக்க அவசியம் இருக்குமா? இல்லை என்றே பைபிள் பதிலளிக்கிறது. யெகோவா “மரணத்தை ஜெயமாக விழுங்குவார்” என்று ஏசாயா 25:8 சொல்கிறது. அதோடு, ‘கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து விடுவார்’ என்றும் சொல்கிறது. அப்படியானால், பிரியமானவர்களின் மரணத்தால் ஏற்படும் அனைத்து அவலங்களையும் அவர் அடியோடு நீக்கிவிடுவார். துணையின் பிரிவால் நீங்கள் சோகக் கடலில் தத்தளிக்கிறீர்கள் என்றால், உயிர்த்தெழுதல் என்ற இந்த நம்பிக்கை உங்களை நிச்சயம் கரைசேர்க்கும்.

புதிய உலகில் கடவுள் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” என்று யெகோவா சொல்கிறார். (ஏசா. 55:9) எதிர்காலத்தில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு கொடுத்த வாக்கு, ஆபிரகாமைப் போல நாமும் யெகோவாமீது நம்பிக்கை வைக்க உதவுகிறது. ஆக, கிறிஸ்தவர்களான நாம் ஒவ்வொருவரும், இப்போதே கடவுள் விரும்புகிறபடி நடக்க வேண்டும்; ‘வரப்போகும் காலத்தில் உயிர்த்தெழுந்து வருவோருடன் வாழத் தகுதியானவர்களாக எண்ணப்பட’ வேண்டும்.—லூக். 20:35.

நம்பிக்கைக்கு அச்சாணி

பயத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். மனித கண்ணோட்டத்தில் பார்த்தால் எதிர்காலம் இருண்டுவிட்டது போலவே தோன்றும். ஆனால், யெகோவா நமக்குள் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைக்கிறார். நம்முடைய தேவைகளையும் விருப்பங்களையும் அவர் எப்படி நிறைவு செய்வார் என்பது நமக்குச் சரியாகத் தெரியாதுதான். ஆனாலும், அதைக் குறித்து நாம் ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது. ஏனென்றால், அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “கண்களுக்குத் தெரிவதை எதிர்பார்ப்பது உண்மையில் எதிர்பார்ப்பே அல்ல. ஒருவன் ஒன்றை நேரடியாய்ப் பார்க்கும்போது அதற்காக அவன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொல்வோமா? கண்களுக்குத் தெரியாததை நாம் எதிர்பார்த்தால்தான், சகிப்புத்தன்மையோடு அதற்காகக் காத்துக்கொண்டிருப்போம்.” (ரோ. 8:24, 25) கடவுளுடைய வாக்குறுதிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வது சகித்திருக்க உதவும். முடிவுவரை சகித்திருந்தால், வரப்போகும் மகத்தான எதிர்காலத்தில் யெகோவா நம் ‘இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார்.’ அவர் ‘தமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்.’—சங். 37:4; 145:16; லூக். 21:19.

[பக்கம் 31-ன் படம்]

சந்தோஷம் பூத்துக்குலுங்கும் புதிய பூமியைப் பற்றிய யெகோவாவின் வாக்குறுதியில் நம்பிக்கை வையுங்கள்

இயேசுவின் மரணம் நெருங்கிய சமயத்தில், அவருடைய அப்போஸ்தலர்கள் மனதளவில் குழம்பிப்போயிருந்தார்கள். “நீங்கள் மனம் கலங்க வேண்டாம். கடவுள்மீது விசுவாசம் வையுங்கள், என்மீதும் விசுவாசம் வையுங்கள்” என்று சொல்லி இயேசு அவர்களைத் தேற்றினார். “நான் உங்களைத் தனியாகத் தவிக்கவிடாமல் கண்டிப்பாக உங்களிடம் வருவேன்” என்றும் உறுதியளித்தார். (யோவா. 14:1-4, 18, 27) இந்த வார்த்தைகள் கடைசிவரை சகித்திருக்கவும் நம்பிக்கையோடிருக்கவும் அவர்களுக்கு உதவியிருக்கும். அதேபோல் தங்களைவிட்டு பிரிந்த அன்பானவர்கள் உயிர்த்தெழுந்து வருவதைக் காண ஏக்கமாய் இருப்பவர்கள் நம்பிக்கையிழந்து தவிக்க வேண்டியதில்லை. யெகோவாவும் அவருடைய மகனும் அவர்களைத் தவிக்கவிட மாட்டார். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

துக்கத்தில் வாடுவோரைத் தேற்றுவது எப்படி?

மணத்துணையை இழந்து தவிக்கும் ஒருவரை ஆறுதல்படுத்தவோ அவருக்கு உதவவோ நிறைய பேர் அவருடைய வீட்டிற்கு வருவார்கள். உதாரணத்திற்கு, துணைவரை இழந்து தனிமையில் வாடும் ஒருவரைப் பார்க்க உறவினர்களும் நண்பர்களும் வருவது மனதுக்கு ஆசுவாசமாக இருக்கும். ஆனாலும், அவருடைய மனதின் ரணங்கள் ஆறுவதற்கு சில காலம் எடுக்கும். அதனால், தொடர்ந்து கொஞ்ச காலத்திற்கு மற்றவர்களின் ஆறுதலும் ஆதரவும் அவருக்குத் தேவைப்படும். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்று பைபிளும் சொல்கிறது.—நீதி. 17:17.

துயரத்தில் தவிக்கும் ஒருவரிடம் நலம் விசாரிப்பது எப்படி? பைபிள் தரும் ஆலோசனை இதுதான்: “நீங்கள் எல்லாரும் ஒரே சிந்தையுடன் இருந்து, அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் மிகுந்த கரிசனையையும் மனத்தாழ்மையையும் காட்டுங்கள்.” (1 பே. 3:8) துணையை இழந்த ஒருவர் சில காலத்திற்கு சோர்வாகத்தான் இருப்பார். அவரிடம், “எப்படி இருக்கீங்க?” அல்லது “நல்லா இருக்கீங்களா?” என்று நாம் அக்கறையோடு கேட்டாலும், ‘என் நிலைமதான் உங்களுக்கு தெரியுமே’ அல்லது ‘கணவரை/மனைவியை இழந்துட்டு நான் எப்படி நல்லா இருக்க முடியும்?’ என்றே அவர் நினைப்பார். அதனால், அப்படிக் கேட்பதைத் தவிர்ப்பதே நல்லது. மாறாக, “உங்கள பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,” அல்லது “சபைல உங்கள பார்க்குறது எனக்கு உற்சாகமா இருக்கு” என்று சொல்வது அவருக்குத் தெம்பளிக்கும்.

துக்கத்தில் வாடுவோரை உங்களுடைய வீட்டிற்கு அழைக்கலாம் அல்லது அவரோடு சேர்ந்து சற்று காலார நடக்கலாம். மனைவியை இழந்த மார்க்கோஸ் என்பவரை அவருடைய நண்பர்கள் வந்து சந்தித்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அவர்கள் எதைப் பற்றி பேசினார்கள்? “என்னோட பிரச்சினைய பற்றி அவ்வளவா பேசாம, என்னை உற்சாகப்படுத்துற விஷயங்கள பேசினாங்க” என்று அவர் சொல்கிறார். கணவரை இழந்த நீனா சொல்கிறார்: “என்னோட ஃபிரெண்ட்ஸ் என் மனநிலைய புரிஞ்சுக்கிட்டு அதுக்கேற்ற மாதிரி பேசினாங்க. சில சமயங்கள்ல அவங்க எதுவும் பேசல, என் கூடயே இருந்தாங்க.”

துணையை இழந்தவர் தன்னுடைய சோகத்தை கொட்ட விரும்பினால், பொறுமையோடு காதுகொடுத்து கேளுங்கள். விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் கேள்விக்குமேல் கேள்வி கேட்காதீர்கள். அவருடைய சூழ்நிலையைக் குறித்து நியாயந்தீர்க்காதீர்கள். ‘இப்படி அழுதுகிட்டே இருக்காதீங்க’ என்றோ ‘நம்பிக்கை இல்லாதவங்க மாதிரி மாசக்கணக்குல அதையே நினைச்சு கவலப்படுறது சரியில்ல’ என்றோ சொல்லி ஆலோசனை கொடுக்காதீர்கள். அவர் தனியாக இருக்க விரும்புவதாகச் சொன்னால், புண்பட்டுவிடாதீர்கள். மற்றொரு சமயத்தில் அவரைச் சந்தித்துப் பேசுங்கள். அன்பை வார்த்துக்கொண்டே இருங்கள்.—யோவா. 13:34, 35.

எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் உங்களுக்கு இருக்கின்றனவா?

யெகோவாவுடைய வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேறும் என்று யோசிப்பது நியாயமானதே. தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று ஆபிரகாமிடம் யெகோவா சொன்னபோது, அதைப் பற்றிய கேள்விகள் அடிக்கடி அவருடைய மனதில் வந்துபோயிருக்கும். யெகோவா சொன்னபடியே பொறுமையோடு இருந்ததால், ஆபிரகாம் ஏமாற்றம் அடையவில்லை.—ஆதி. 15:2-5; எபி. 6:10-15.

யோசேப்பு இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது, மகனை நினைத்து நினைத்து யாக்கோபு மனம் வெதும்பினார். காலங்கள் உருண்டோடிய பிறகும் யோசேப்பு இறந்துவிட்டதாகவே நினைத்து துக்கித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் கொஞ்சங்கூட யோசித்தே பார்க்காத விதத்தில் யெகோவா அவரை ஆசீர்வதித்தார். காலம் கைகூடியபோது, யோசேப்பை மட்டுமல்ல அவருடைய பேரக்குழந்தைகளையும் பார்க்கும் பாக்கியம் யாக்கோபுக்குக் கிடைத்தது. யாக்கோபு இவ்வாறு சொன்னார்: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றார்.—ஆதி. 37:33-35; 48:11.

இந்த இரு சம்பவங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்? முதலாவதாக, சர்வவல்லவரான யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை நாம் நம்ப வேண்டும். இரண்டாவதாக, நாம் ஜெபம் செய்வதோடு, யெகோவாவின் சித்தத்திற்கு இசைய செயல்பட வேண்டும்; அப்படிச் செய்தால், இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அவர் நம்மைக் கண்மணிபோல் பார்த்துக்கொள்வார், நம் ஆசைகளையும் நிறைவாய்ப் பூர்த்திசெய்வார். பவுல் இவ்வாறு எழுதினார்: “நம்மில் செயல்படுகிற அவருடைய வல்லமையின்படி, நாம் கேட்பதையும் நினைப்பதையும்விடப் பல மடங்கு அதிகமாய் எல்லாவற்றையும் செய்ய வல்லவரான அவருக்கே, சபையின் மூலமும் கிறிஸ்து இயேசுவின் மூலமும் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மகிமை சேருவதாக. அப்படியே ஆகட்டும்.”—எபே. 3:20, 21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்