“கடைசி எதிரி” வீழ்த்தப்படும்!
நீங்கள் குழந்தையாய் இருந்தபோது இருளைக் கண்டு பயப்படுகிறவர்களாக இருந்திருக்கலாம். அச்சமூட்டும் கதைகளும் மாயக் கதைகளும்கூட உங்களைப் பயத்தினால் நிரப்பியிருக்கலாம். உங்களுடைய அம்மாவோ அப்பாவோ நீங்கள் தூங்கப்போகும்போது விளக்கை அணைக்காமல்விட்டது எந்தளவிற்குப் பயத்தை நீக்குவதாக இருந்தது!
இதைப்போலவே மரணம் அநேகரைப் பயமுறுத்துகிறது. ஆனால் இது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏன்? மரணம் உண்மையில் என்னவாக இருக்கிறது என்பதால்.
உங்கள் எதிரியை அறிந்துகொள்ளுங்கள்
பூர்வ இஸ்ரவேலின் ஞானமுள்ள சாலொமோன் ராஜா இவ்வாறு அறிவித்தார்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) உங்களுடைய சொந்த பைபிளில் காணப்படும் தேவனால் ஏவப்பட்ட இந்தக் கருத்தின்படி வாழ்வின் வெறும் எதிர்ப்பதம்தான் மரணம். மரித்தோர் உணர்வுள்ளவர்களாக வாழ்வதில்லை.
உருவகப்படுத்தும் முறையில் மரணத்தைப் பற்றி கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதுகிறார்: “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?” மரணத்தை உண்டுபண்ணும் கொடுக்கு எது? பவுல் சொல்கிறார்: “பாவமே மரணத்தின் கொடுக்கு.” (1 கொரிந்தியர் 15:55, 56, NW; ஓசியா 13:14) எனவே, இந்த மரணம்தரும் கொடுக்கின் ஆரம்பம் எது? வேதாகமத்தில் மற்றொரு இடத்தில் பவுல் சொல்கிறார்: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) அப்போஸ்தலன் பின்வருமாறு சொல்லும்போது அந்த ‘ஒரே மனுஷன்’ யார் என்பதைச் சந்தேகத்தில் விடவில்லை: ‘ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறார்கள்.’ (1 கொரிந்தியர் 15:22) ஆம், நம் முதல் முற்பிதா ஆதாமின் கீழ்ப்படியாமையினால் நாம் அனைவருமே மரணத்தின் கொடுக்கினால் பாதிக்கப்படுகிறவர்களாய் இருக்கிறோம்.—ஆதியாகமம் 3:1-19.
நல்ல உடல் ஆரோக்கியமும், இன்பகரமான சுற்றுச் சூழலிலுள்ள ஓர் அன்பான குடும்பமும் இருக்கும்போது யாருமே செத்துப்போவதற்குத் தெரிவுசெய்வதில்லை. எனினும் பைபிள் காண்பிக்கிறபடி, “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” உயிரை நம்மிடமிருந்து கொள்ளையடிக்கலாம். (பிரசங்கி 9:11, NW) நாளை நம் உயிருக்கு என்ன நடக்கும் என்பதை நாம் உண்மையில் அறியாமல் இருக்கிறோம். (யாக்கோபு 4:14) ஒரு காரியம் நிச்சயமாய் இருக்கிறது—நாம் அனைவருமே சுதந்தரிக்கப்பட்ட பாவத்தையும் மரணத்தையும் உடையவர்களாக இருக்கிறோம். எனவே, மரணம் நம்மீது வீறாப்போடு செல்வாக்குச் செலுத்தி, ஓர் எதிரியைப்போல் தாக்குகிறது.
அன்பான ஒருவரின் மரணத்தோடு எதிர்த்துச் சமாளித்தல்
அன்பான ஒருவரைத் தாக்கும்போது, விசேஷமாக மரணம் ஓர் எதிரியாக இருக்கிறது. “உங்கள் நிலை மிக மோசமாகுமே” என்று சாவுக்கு ஏதுவாக நோய்ப்பட்டிருந்த மனைவி தான் சாவை எதிர்பார்த்திருந்ததால் தன் கணவனிடம் சொன்னாள். அவள் ஏன் அதைச் சொல்லவேண்டும்? ஏனென்றால் பைபிள் சொல்கிறது: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய், நீ போகிற பாதாளத்திலே [மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக் குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:10) மரித்தவர்கள் இனி துன்பப்படுவதில்லை. ஆனால் கவலை என்ற பாரம், உயிரோடிருக்கும் உறவினர்கள், நண்பர்கள்மீது வருகிறது. இப்படிப்பட்ட துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு ஏதாவது செய்யப்படமுடியுமா?
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் பக்கங்கள், ஆறுதலளிக்கும் பல வார்த்தைகளை உடையதாய் இருக்கின்றன. உதாரணமாக, சங்கீதங்களை வாசிப்பதும் தியானிப்பதும் உண்மையில் ஆறுதலின் ஓர் ஊற்றுமூலமாகும். பின்வரும் வார்த்தைகளைப் போன்றவை உண்மையில் ஆறுதல் அளிப்பதாய் இருக்கின்றன: “நம் சுமைகளைத் தினந்தோறும் சுமந்துசெல்லும், நம் இரட்சிப்பின் உண்மைக் கடவுளாகிய யெகோவா வாழ்த்தப்படுவாராக.”—சங்கீதம் 68:19, NW.
ஆறுதலின் மற்றொரு ஊற்றுமூலம் சபை. அப்போஸ்தலன் பவுல் பொ.ச. முதல் நூற்றாண்டில் எழுதினார்: “உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்கு [அவளுடைய பொருளாதார விஷயத்தில் உதவிசெய்யும்] பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.” (1 தீமோத்தேயு 5:3, 4, 9, 10) இவ்வாறே யெகோவாவின் சாட்சிகள் இன்று அப்படிப்பட்ட உடன் விசுவாசிகளுக்கு உதவிசெய்து ஆறுதலளிக்கின்றனர்.
அன்பானவரை இழந்தவர்கள் செய்யவேண்டிய மிகப் பெரிய சரிப்படுத்துதல் பெரும்பாலும் உணர்ச்சி சம்பந்தமானதாய் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் துணையை மரணத்தில் இழந்த ஒரு மனிதர், “என் மனைவியை நான் இருதயப்பூர்வமாக நேசித்தேன்,” என்று எழுதினார். “இது என் வாழ்க்கையிலேயே அதிக துக்கமான நிகழ்ச்சி, இதைச் சகித்திருப்பதைக் கடினமாக உணர்கிறேன்.” சில காலமாகத் திருமண வாழ்க்கை வாழ்ந்த ஒரு நபர், அவனுடைய அல்லது அவளுடைய வாழ்க்கையோடு மிக அதிக நெருக்கமான மனித உறவில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு திருமணத் துணை மரிக்கும்போது, உயிரோடிருக்கும் வாழ்க்கைத் துணை இயற்கையாகவே அதிக இழப்பை உணர்கிறார். அந்த நபர் யாரிடம் உதவிக்காக நாடலாம்?
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், நல்ல கிறிஸ்தவக் கூட்டாளிகள் பலப்படுத்துபவர்களாக இருக்கலாம். “உண்மை நண்பன் எக்காலமும் நேசிக்கிறான். துன்பத்திலே உதவப் பிறந்த சகோதரனாயும் இருப்பான்,” என்று ஒரு ஞானப் பழமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17, NW) ஒரு விதவைக்கு அல்லது மனையிலிக்கு (மனைவியை இழந்த மறுமணம் செய்யாதவர்)—உண்மையான ஆதரவைத் தரும் நண்பர்கள்—உதவி தேவைப்படுகிறது. ஞானமுள்ள நண்பர்கள் துக்கத்தில் இருப்பவர்களைப் பேசும்படி உற்சாகப்படுத்துகின்றனர், அவ்வாறு செய்வது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தாலும் அப்படிச் செய்கின்றனர். ஒருவேளை துணையை இழப்பதினால் வரும் மனவேதனையையும் இருதய வேதனையையும் ஏற்கெனவே அனுபவித்திருக்கும் ஒரு கிறிஸ்தவன் தயவான உதவியைக் கொடுக்கலாம். “திடனற்றவர்களைத் தேற்றுங்கள்,” என்று பைபிள் ஆலோசனை சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) ஆனால் விதவைகளும் மனையிலிகளும் தங்களுடைய திருமணத் துணைகள் இல்லாத குறையை உணர்கின்றனர் என்பதை நினைவில் வையுங்கள். எனவே அன்பானவரை இழந்தவர், அனைவரும் கற்புள்ள நடத்தையைக் காத்துக்கொள்ளும் சூழமைவில் மட்டுமே மற்றவர்களிடம் முழு நம்பிக்கையோடு சொல்ல வேண்டும்.—1 பேதுரு 2:12.
மரண இழப்புச் சுமத்தும் வேதனைக்கு மிகச் சிறந்த மாற்று மருந்து மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் நம்மை சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்வதாகும்—உதவித் தேவைப்படுபவர்கள் தாங்கள்தான் என்று உணர்கிறவர்களுக்கு இதைச் செய்வது எளிதல்ல! இங்குதான் தன்னலமற்ற தன்மை முக்கிய இடத்தை வகிக்கிறது. மற்றவர்களுக்காகத் தன்னலமற்ற விதத்தில் காரியங்களைச் செய்வது கவலையையும் துக்கத்தையும் அகற்றுவதற்கு உதவிசெய்கிறது. இதன் காரணமாகவே இயேசு இவ்வாறு சொன்னார்: “பெற்றுக்கொள்வதில் இருப்பதைவிட கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியிருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35, NW.
மரணத்தின்மீது வெற்றி
ஒரு தேனீயின் கொட்டு அதிக வேதனை தருவதாய் இருக்கலாம், மரணம்கூட உண்டாக்கலாம். ஆனால், உங்கள் தோலினுள் பதிந்திருக்கும் அந்தப் பூச்சியின் கொடுக்கை வெளியே எடுப்பது பொதுவாக வேதனையைக் குறைப்பதற்கு உதவிசெய்யும். ஆனால் மரணத்தை உண்டாக்கும் கொடுக்கிலிருந்து விடுபடுவதற்கு என்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன?
மரணத்தை உண்டாக்கும் கொடுக்காகப் பாவம் இருக்கிறது என்று விளக்கிய பிறகு பவுல் உணர்ச்சித் ததும்ப இவ்வாறு கூறுகிறார்: “நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு இந்த வெற்றிதரும் கடவுளுக்கு நன்றி!” (1 கொரிந்தியர் 15:57, NW) மரணத்தின்மீதான வெற்றி எவ்வாறு கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது? இயேசு தம்மைப் பற்றி, “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்,” என்று சொன்னபோது இது அவ்வாறுதான் இருக்கிறது என்பதைக் காட்டினார். (மத்தேயு 20:28) ஆம், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும், அவர்மூலமாக யெகோவா ஏற்பாடுசெய்திருக்கும் கிரய பலியையும் விசுவாசிப்பவர்களுக்கு, ஆதாமிடம் இருந்து சுதந்தரிக்கப்பட்ட மரணம், நிரந்தரமாக ஜீவன் இல்லாமல் போவதில் விளைவடையாது.—யோவான் 3:16.
இயேசுவின் வார்த்தைகள் உண்மையில் கிளர்ச்சியூட்டுகின்றன: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.
நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கடவுளுடைய தீர்க்கதரிசி ஏசாயா முன்னறிவித்தார்: “அவர் [யெகோவா தேவன்] மரணத்தை உண்மையில் என்றென்றைக்கும் விழுங்கிவிடுவார், சர்வலோக கர்த்தராகிய யெகோவா எல்லா முகங்களிலுமிருந்தும் கண்ணீரை நிச்சயமாகவே துடைத்துவிடுவார்.” (ஏசாயா 25:8, NW) வெளிப்படுத்துதல் 21:4-ல், பைபிள் மீண்டும் இந்த மகத்தான எதிர்பார்ப்பைக் கொடுக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” மரணத்தில் தூங்குபவர்களைக் குறித்த இந்தப் பைபிள் நம்பிக்கையினால் ஊக்கமளிக்கப்பட்டவர்களாக, அன்பானவரை இழந்தவர்கள் “நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து” இருக்கவேண்டிய தேவையில்லை.—1 தெசலோனிக்கேயர் 4:13.
பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கடவுள் மனிதனுக்கு என்ன செய்ய இருக்கிறார் என்பதை மனதில் காட்சிப்படுத்த முயற்சிசெய்யுங்கள். மிகச் சமீபத்தில் வரப்போகும் “மகா உபத்திரவம்” இன்றைய பொல்லாத ஒழுங்குமுறைக்கு அழிவை அர்த்தப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 7:14, NW) பொய் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அழிக்கப்படுகிறார்கள். பஞ்சத்தையும் யுத்தத்தையும் கொண்டுவந்த பேராசைமிக்க அரசியல், வர்த்தக மூலங்கள் இல்லை. அளவுக்கு அதிகமான மனித மரணங்களைக் கொண்டுவந்த பிசாசாகிய சாத்தானை இயேசு கிறிஸ்து அபிஸ்ஸில் போடுகிறார். பின்பு கிறிஸ்து தம்முடைய ஆயிர வருட ஆட்சியை ஆரம்பிக்கிறார்; இந்தச் சமயத்தில் தம்முடைய கிரய பலியின் மதிப்பை மனித குலத்திற்குப் பொருத்திப் பிரயோகிக்கிறார். மரித்தவர்கள், நம்பிக் காத்திருந்த உயிர்த்தெழுதலில் திரும்ப வருகின்றனர். கடவுளுடைய வார்த்தையிலிருந்து வெளிச்சம் அவ்வளவு பிரகாசிப்பதால், மனிதகுலத்தின் எதிரியாகிய மரணத்தைப் பற்றிய குருட்டுத்தனமான கருத்துக்கள் எல்லாம் இனிமேலும் இல்லாமல் போகிறது. அப்போது உயிரோடிருக்கும் அனைவரும் கடவுளுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, அவருடைய நீதியான தராதரங்களுக்கு இசைவாக வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.—நீதிமொழிகள் 4:18; அப்போஸ்தலர் 24:15; எபிரெயர் 2:14, 15; வெளிப்படுத்துதல் 18:4-8; 19:19-21; 20:1-3.
‘அதன்பின்பு, முடிவு உண்டாகும், அப்பொழுது கிறிஸ்து இயேசு, கடவுளும் பிதாவுமாயிருக்கிறவரிடம் ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். ஏனென்றால் எல்லா எதிரிகளையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும் வரைக்கும் அவர் ஆளுகைசெய்கிறார். கடைசி எதிரியாக மரணம் முடிவிற்கு கொண்டுவரப்படுகிறது,’ என்று பவுல் சொல்கிறார். (1 கொரிந்தியர் 15:24-26) ஆதாமின் பாவத்தினால் உண்டாகும் ஒவ்வொரு குறைபாடும் மறைந்துபோயிருக்கிறது. ஓர் இறுதிச் சோதனை நடக்கிறது, கடவுளை நேசிப்பவர்கள் விசுவாசத்தினால் அதில் வெற்றிகொள்கின்றனர். (வெளிப்படுத்துதல் 20:4-10) பரிபூரணத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட இந்தக் கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள், வெறுமனே எழுபது ஆண்டுகள் மட்டும் அல்ல அல்லது நூற்றுப்பத்து ஆண்டுகளும் அல்ல, ஆனால் என்றும் வாழ்வர். கடவுள் தம்முடைய பிரியமுள்ள குமாரன் மூலமாக கொடுக்கப்போகும் என்னே ஒரு பரிசு!—ரோமர் 6:23.
அப்படியானால், நாம் எவ்வளவு காலத்திற்கு வாழலாம்? உங்களுடைய வாழ்நாட்காலம் முற்றிலும் நிரந்தரமாக நீண்டுகொண்டே போகலாம். உங்களைப்போல், இந்த உலகத்தின் ‘முடிவுகாலத்தில்’ வாழ்ந்து வந்தால் நீங்கள் ஒருபோதும் சாகாமலும் இருக்கக்கூடும். (தானியேல் 12:4; யோவான் 11:25, 26; 17:3) நீங்கள் தெய்வீக சித்தத்தைச் செய்தால், கடவுள் வாக்களித்திருக்கும் புதிய உலகத்தினுள்ளேயே நீங்கள் வாழலாம்.—2 பேதுரு 3:13.
எனினும், நீங்கள் முதிர்வயதினராக இருந்தால், சாகப்போவதைப் பற்றி உண்மையில் யோசித்துப் பார்ப்பது உங்களுக்குத் தேவையாக இருக்கும். உயிர்த்தெழுதல் நம்பிக்கை நிச்சயமாகவே சந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஆனால் அந்தப் புதிய காரிய ஒழுங்குமுறையில் யெகோவா எப்படிக் குடும்ப வாழ்க்கையை ஏற்பாடு செய்வார் என்பதைப் பற்றி நீங்கள் ஒருவேளை நினைத்துப் பார்க்கலாம். இப்படிப்பட்ட விஷயங்கள் உங்களை அலைபாயச்செய்யும்படி அனுமதிக்காதீர்கள்; ஏனென்றால் யெகோவா தமக்கு என்றைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் நிரந்தரமான சந்தோஷத்தைப் பெறும்படி கவனித்துக்கொள்வார்.
சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறையின் இந்தக் கடினமான ‘கடைசி நாள்கள்’ அதன் முடிவை நெருங்கும்போது, மரண பயம், இப்பொழுதுதானே யெகோவாவைச் சேவிக்கும் சிலாக்கியத்தை உங்களிடமிருந்து கொள்ளையடிக்கும்படி அனுமதிக்காதீர்கள். (2 தீமோத்தேயு 3:1) அன்பான ஒருவரை நீங்கள் மரணத்தில் இழந்தால், மரணம் தற்காலிகமானதுதான் என்ற எண்ணத்தினால் உங்களை நீங்களே தேற்றிக்கொள்ளுங்கள். (வெளிப்படுத்துதல் 20:13, 14) உயிர்த்தெழுதல் நம்பிக்கையை உண்மையென்று நம்புங்கள். பின்பு, மகா உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைப்பதன்மூலமோ உயிர்த்தெழுதலின்மூலமோ, நீங்கள் புதிய உலகத்தினுள் பிரவேசிக்க தகுதியடையும்போது, மரணமாகிய கடைசி எதிரி ஒன்றுமில்லாத நிலைக்குக் கொண்டுவரப்படும்படி இருக்கிறது என்ற ஆவியில் ஏவப்பட்ட உறுதிமொழியினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருங்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
[பக்கம் 5-ன் படம்]
நல்ல கிறிஸ்தவக் கூட்டாளிகள் அன்பானவரை இழந்தவர்களைப் பலப்படுத்தலாம்
[பக்கம் 7-ன் படம்]
மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது அன்பான ஒருவரை மரணத்தில் இழந்ததால் வந்த துக்கத்தைக் கம்மியாக்கும்