யெகோவா என்ற பரிசுத்த பெயரைக் குறிக்கும் எபிரெய நான்கெழுத்துக்கள். இதை வலது பக்கத்திலிருந்து வாசிக்க வேண்டும்
மிகச் சிறிய எபிரெய எழுத்து–நமக்குத் தரும் நம்பிக்கை
கடவுள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறும் என்று நம்பலாமா? அவை நிச்சயம் நிறைவேறும் என்று இயேசு உறுதியாக நம்பினார். இதே நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அன்றிருந்த மக்களுக்கு இயேசுவின் போதனைகள் உதவின. மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்ன ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்: “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்தில் இருக்கிற ஒரு சின்ன எழுத்துகூட அழிந்துபோகாது, சொல்லப்போனால் ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது; அதில் எழுதப்பட்டிருக்கிற எல்லாமே நிறைவேறும்.”—மத்தேயு 5:18.
எபிரெய எழுத்துக்களில் י (யோத்) என்ற எழுத்துதான் மிகச் சிறியது.a யெகோவா என்ற பரிசுத்த பெயரைக் குறிக்கும் எபிரெய நான்கெழுத்துக்களில் இதுதான் முதல் எழுத்து. வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கடவுளுடைய சட்டத்திலிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்தையும் முக்கியமாக நினைத்தார்கள். சொல்லப்போனால், “ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட” முக்கியம் என்று நினைத்தார்கள்.
வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்தில் இருக்கும் ஒரு சின்ன தகவல்கூட நிறைவேறாமல் போகாது என்று இயேசு அந்த வசனத்தில் சொல்லியிருந்தார். ஆனால், வானமும் பூமியும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று வேறு சில வசனங்கள் சொல்கின்றன. (சங்கீதம் 78:69) அப்படியிருக்கும்போது, இயேசுவின் வார்த்தைகள் எதைக் குறிக்கிறது? திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சின்ன தகவல்கூட நிறைவேறாமல் போகாது என்பதைக் குறிக்கிறது.
சின்னச் சின்ன தகவல்களைக்கூட யெகோவா முக்கியமாக நினைக்கிறாரா? கண்டிப்பாக. இந்த உதாரணத்தைப் பாருங்கள். பஸ்கா ஆட்டுக்குட்டியின் ஒரு எலும்பைக்கூட முறிக்கக் கூடாது என்று இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. (யாத்திராகமம் 12:46) இது ஒரு சின்ன தகவல்தான். ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்ற காரணம் இஸ்ரவேலர்களுக்குத் தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இது மேசியாவின் வாழ்க்கையில் நிறைவேறவிருந்த ஒரு தீர்க்கதரிசனம். சித்திரவதைக் கம்பத்தில் இயேசு இறக்கும்போது அவருடைய எலும்புகளில் ஒன்றுகூட முறிக்கப்படாது என்று யெகோவாவுக்குத் தெரியும்.—சங்கீதம் 34:20; யோவான் 19:31-33, 36.
இயேசு ஆரம்பத்தில் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? கடவுள் கொடுத்த எல்லா வாக்குறுதிகளும்... அதிலிருக்கும் சின்னச் சின்ன தகவல்களும்... நிச்சயம் நிறைவேறும் என்று நாம் உறுதியாக நம்பலாம். எப்பேர்ப்பட்ட நம்பிக்கையை அந்த எபிரெய சின்ன எழுத்து நமக்குக் கொடுத்திருக்கிறது!
a கிரேக்க எழுத்துக்களில் இருக்கும் ஐயோட்டா என்ற எழுத்து, י (யோத்) என்ற எழுத்தைப் போலவே மிகச் சிறியது. மோசேயின் திருச்சட்டம் ஆரம்பத்தில் எபிரெய மொழியில்தான் எழுதப்பட்டது. அதனால், “திருச்சட்டத்தில் இருக்கிற ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட” என்று இயேசு சொல்லும்போது அவர் யோத் என்ற எபிரெய எழுத்தை மனதில் வைத்து சொல்லியிருக்கலாம்.