3 பிரச்சினைகளைச் சகிக்க உதவி
இன்று சில பிரச்சினைகளை நம்மால் தவிர்க்கவும் முடியாது, சரிசெய்யவும் முடியாது. உதாரணத்துக்கு, உங்கள் அன்பானவர் ஒருவரை நீங்கள் மரணத்தில் இழந்திருக்கலாம். அல்லது தீராத வியாதியால் நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கலாம். இப்போது, உங்கள் வலியையும் வேதனையையும் சகித்திருப்பதுதான் நல்லது! இதற்கு பைபிள் உதவுமா?
தீராத வியாதி
“மரபணு கோளாறுனால எனக்கு எப்பவும் தாங்க முடியாத வலி இருக்கும். அதனால, என்னோட வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு” என்று ரோஸ் சொல்கிறாள். பைபிளைப் படிக்கவும், மற்ற ஆன்மீக விஷயங்களில் ஈடுபடவும் கவனம் செலுத்த முடியவில்லை என்பதுதான் அவளுக்கு ரொம்ப கவலையாக இருந்தது. ஆனால், “கடவுளால் எல்லாமே செய்ய முடியும்” என்று மத்தேயு 19:26-ல் இருக்கிற இயேசுவின் வார்த்தைகள் அவளுக்கு ரொம்பவே ஆறுதலாக இருந்தன. படிப்பதற்கு வேறொரு வழியும் இருக்கிறது என்பதை ரோஸ் புரிந்துகொண்டாள். அவளுக்கு இருந்த வலியால், சில சமயங்களில், அவளால் பைபிளை வாசிக்க முடியவில்லை. அதனால், பைபிள் மற்றும் பைபிள் பிரசுரங்களின் ஆடியோ பதிவுகளை அவள் கேட்க ஆரம்பித்தாள்.a “இதெல்லாம் இல்லாம, என்னால கடவுள்கிட்ட நெருங்கி போயிருக்கவே முடியாது” என்று அவள் சொல்கிறாள்.
முன்பு செய்த விஷயங்களை இப்போது செய்ய முடியவில்லையே என்று கவலைப்படும்போதெல்லாம், 2 கொரிந்தியர் 8:12-ல் இருக்கிற வார்த்தைகள் ரோஸுக்கு ஆறுதலாக இருந்தன. “கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தன்னிடம் இருப்பதற்கு ஏற்றபடி எதைக் கொடுத்தாலும் அதைக் கடவுள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை” என்று இது சொல்கிறது. தன்னால் செய்ய முடிந்த விஷயங்களை நினைத்து கடவுள் சந்தோஷப்படுகிறார் என்பது ரோஸுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஏனென்றால், தன்னுடைய குறைபாட்டின் மத்தியிலும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் ரோஸ் செய்கிறாள்.
மனவேதனை
முன்பு குறிப்பிடப்பட்ட டெல்ஃபின் இப்படிச் சொல்கிறார்: “என்னோட 18 வயசு மகள் இறந்ததுக்கு அப்புறம், எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. என்னால வாழவே முடியாதுனு தோணுச்சு. எதுவுமே பழையபடி இருக்காதுனு நினைச்சேன்.” ஆனால், சங்கீதம் 94:19-ல் இருக்கிற வார்த்தைகள் அவருக்கு ஆறுதலாக இருந்தன. “கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்” என்று சங்கீதக்காரன் கடவுளிடம் சொன்னார். “என்னோட வலியயும் வேதனையயும் சமாளிக்க எனக்கு உதவி செய்யுங்கனு யெகோவாகிட்ட கெஞ்சினேன்” என்று டெல்ஃபின் சொல்கிறார்.
வாலண்டியர் வேலை செய்வதில் அவர் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். பிள்ளைகள் கலர் அடிப்பதற்குப் பயன்படுத்தும் “க்ரேயானோடு” (crayon) தன்னை ஒப்பிட்டார். அந்த க்ரேயான்கள் உடைந்துபோனாலும் அவை கலர் அடிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல, தான் உள்ளத்தில் உடைந்துபோயிருந்தாலும், தன்னாலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை அவர் கற்றுக்கொண்டார். “பைபிளை பயன்படுத்தி நான் மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்றப்போ, யெகோவா என்னை ஆறுதல்படுத்துறாருனு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். ரொம்ப காலமாகத் துக்கத்தில் மூழ்கியிருந்த சில பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி அவர் படித்தார். அவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக ஜெபம் செய்திருக்கிறார்கள் என்பதை அவர் தெரிந்துகொண்டார். “பைபிளை மூடி வைச்சிருந்தா நமக்கு எந்த பதிலும் கிடைக்காது” என்பதையும் அவர் தெரிந்துகொண்டார்.
பைபிளைப் படிப்பது டெல்ஃபினுக்கு வேறொரு விஷயத்தையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதாவது, கடந்த காலத்தைப் பற்றி யோசிக்காமல், எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று அப்போஸ்தலர் 24:15-ல் கொடுக்கப்பட்டிருக்கிற நம்பிக்கை அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. தன்னுடைய மகளை யெகோவா உயிரோடு கொண்டுவருவார் என்பதில் டெல்ஃபின் எந்தளவு உறுதியாக இருக்கிறார்? அதைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “எதிர்காலத்துல நான் என்னோட மகள பார்ப்பேன். என் மகள பார்க்கப்போற அந்த நாளை யெகோவா ஏற்கெனவே குறிச்சுட்டார். நானும் என்னோட மகளும் ஒரு தோட்டத்துல இருக்கோம். அவ பிறந்த அன்னைக்கு அவள ரொம்ப நேசிச்சேன்; அதே மாதிரி இப்பவும் அவள நேசிக்குறேன்.”
a இது போன்ற ஆடியோ பதிவுகள் jw.org என்ற வெப்சைட்டில் இருக்கின்றன.
நீங்கள் மனவேதனையில் தவித்துக்கொண்டிருந்தாலும், பைபிள் உங்களுக்கு உதவும்