நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—மெய்யெனக்காட்டி நம்பவைப்பதன் மூலம்
1 ஆட்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படிச்செய்ய நற்செய்தியின் ஊழியக்காரர் அதை மெய்யெனக்காட்டி அவர்களை நம்பவைப்பது பொருத்தமானதா? நிச்சயமாகவே பொருத்தமானது! (அப். 18:4) தீமோத்தேயு ஒரு விசுவாசியாவதற்கு அவன் தாயும் பாட்டியும் அவன் காரியங்களைக் கற்று நிச்சயித்துக்கொள்ளும்படி உதவப்பட்டான் என்பதைப் பவுல் அவனுக்கு நினைப்பூட்டினான். (2 தீமோ. 3:14) ஒருவருக்கு மெய்யெனக்காட்டி நம்பவைப்பது என்பது அவர் மனதைத் தொடும் விதத்தில் பேசி அவரை உந்துவித்தல், ஒரு நம்பிக்கையை, ஒரு நிலையை அல்லது ஒரு செயலின் போக்கைப் பற்றி அவனோடு அதிக ஊக்கத்துடன் நியாய விவாதம் செய்தல் என்றர்த்தப்படும்.
2 அப்போஸ்தலனாகிய பவுல் மெய்யெனக்காட்டி நம்பவைக்கும் இக்கலையை நன்கு பயன்படுத்தினான். அவன் அத்தேனே பட்டணத்தில் இருந்தபோது “அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தான்.” (அப். 17:16) என்றபோதிலும் அவன் மார்ஸ் மேடையில் நின்றபோது அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து அவர்களுடைய விக்கிரக வணக்கம் வீணானது என்பதை அவன் நேரிடையாக சொல்லிவிடவில்லை. அவன் திறமையோடு, உணர்ச்சிவயப்பட்ட எதிர்ப்பைத் தவிர்ப்பவனாய், “அறியப்படாத தேவனுக்கு” என்று ஒரு பலிபீடத்தின்மீது எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தின்பேரில் அவர்களுடைய கவனத்தைத் திருப்பினான். அதைத் தொடர்ந்து நல்ல விளைவுகளுடன் ஒரு சக்திவாய்ந்த சாட்சியை அவன் அவர்களுக்குக் கொடுத்தான்.—அப். 17:23, 28, 29, 34.
பகுத்துணர்வுள்ளவர்களாயிருங்கள்
3 மெய்யெனக்காட்டி நம்பவைப்பதற்கு வெறுமென உணர்ச்சிவயப்பட்ட அல்லது ஏராளமான வார்த்தைகளைக் கொண்ட பிரசங்கத்தைக் கொடுப்பதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது என்பதை பவுல் தெளிவாக நடப்பித்துக் காட்டினான். நாம் எந்த ஆட்களிடம் பேசுகிறோமோ அவர்களுடைய உணர்ச்சிகளை, நம்பிக்கைகளை மற்றும் ஆர்வங்களைப் பற்றிய உட்பார்வையையும் பகுத்துணர்வையும் கொண்டிருக்க வேண்டும். பைபிள் போதனைகளின்பேரில் திறந்த மனதுடன்கூடிய ஒரு கலந்துரையாடலுக்கு வீட்டுக்காரரின் உணர்ச்சி வேகங்கள் எப்பொழுது ஒரு மெய்யான தடையாக இருக்கிறது என்பதை விரைவில் கண்டுணர்ந்துக்கொள்வதற்கு விழிப்புள்ளவர்களாய் இருப்பது அவசியம்.—நீதி. 16:23.
4 உதாரணமாக மரணமடைந்த அன்பார்ந்தவரைப்பற்றிய நினைவின் உணர்ச்சிப் பிணைப்பை கொண்டிருப்பதன் காரணமாக ஓர் ஆள் ஆத்துமா அழியாமைப் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருக்கக்கூடும். சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி உதவுவதற்கு மெய்யெனக்காட்டி நம்பவைக்கும் வழிமுறை எதுவாக இருக்கும்? அவர் நம்புவது தவறு, ஆத்துமா அழிகிறது என்று அவரிடம் நேரிடையாக சொல்லிவிடுவதற்கு பதிலாக, அவர் கொண்டிருக்கக்கூடிய உணர்ச்சி சார்ந்த தடைச் சுவரைத் துளைத்துக்கொண்டுப்போகக்கூடிய மெய்யெனக்காட்டி நம்பவைக்கும் முறையை பயன்படுத்துவது மேம்பட்டதாக இருக்குமல்லவா? நாம் அவர் எவ்வாறு உணருகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது, ஏனெனில், நாமுங்கூட அன்பார்ந்தவர்களை மரணத்தில் இழந்திருக்கிறோம் என்று நாம் சொல்லக்கூடும். நாம் உயிர்த்தெழுதல் பற்றிய வாக்கின் பேரில் நம்பிக்கை வைப்பதன் மூலம் ஆறுதலடைந்திருக்கிறோம். அதாவது, நாம் மரணத்தில் இழந்த அன்பானவர்களோடு மறுபடியும் ஒன்றுசேர்ந்து அவர்களோடு தோழமை அனுபவித்து மகிழக்கூடிய ஒரு காலமாக அது இருக்கும். பின்பு பொருத்தமான வேதவசனங்களை வாசித்து கலந்தாலோசிக்கலாம். நாம் பகுத்துணர்வுள்ளவர்களாக இருந்து, நம்முடைய பேச்சை உப்பால் சாரமேறினதாய் வைத்துக்கொண்டால், நற்செய்தியை அறிமுகப்படுத்துவதில் நாம் மெய்யெனக்காட்டி நம்பவைப்பவர்களாய் இருப்போம்.—நீதி. 16:21; கொலோ. 4:6.
உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்
5 ஜனங்கள் தங்களுடைய சிந்தனைகளைச் சரி செய்துகொள்வதற்கு உதாரணங்கள் மெய்யெனக்காட்டி நம்பவைக்கும் திறம்பட்ட முறையாக இருக்கக்கூடும். குறிப்பிடத்தக்க ஓர் உதாரணம் தாவீதின் இருதயத்தை எட்டுவதற்கு நாத்தான் பயன்படுத்திய பகுத்துணர்வுள்ள ஒருமுறையாகும். (2 சாமு. 12:1-14) நன்கு தெரிவுச் செய்யப்பட்ட உதாரணங்கள் அறிவுத்தினுள்ளவரின் கவனத்தைக் கவருகிறது. உணர்ச்சி சார்ந்த செயல்விளைவுகள் அத்துடன் இணைந்துவிடுகிறது. மக்கள் புதிய கருத்துக்களை கிரகித்துக்கொள்வதை அவைச் சுலபமாக்கிவிடுகிறது. உதாரணமாக, இந்தப் பூமியை ஒரு வீட்டிற்கு ஒப்பிடலாம். அதிலுள்ள மக்களை வாடகைக்குக் குடியிருக்கும் ஆட்களுக்கு ஒப்பிடலாம். வாடகைக்கு குடியிருக்கும் ஆள் அந்த வீட்டை நன்கு பராமரிக்கத் தவறினால் வீட்டின் சொந்தக்காரர் வீட்டை அழிக்கமாட்டார், ஆனால் குடியிருப்பவரை வெளியேற்றுவார். எனவே கடவுள் பூமியை அழிக்கமாட்டார், ஆனால் அவர் கெட்ட ஆட்களையே நீக்கிப்போடுவார்.—ஏசா. 45:18.
6 மெய்யெனக்காட்டி நம்பவைத்தலுக்கும்கூட வரம்பு உண்டு. ஜனங்கள் விசுவாசிக்கவோ தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யவோ விரும்புகிறதில்லை என்றால், அவர்கள் இருக்கும் நிலையிலேயே நிலைத்திருப்பார்கள். (மத். 13:14, 15) என்றபோதிலும், இன்னும் அநேக நேர்மை இருதயமுள்ள ஆட்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ராஜ்ய செய்தி எட்டவேண்டும். அவர்களுக்கு உதவிசெய்ய நம்முடைய ஊழியத்தில் மெய்யெனக்காட்டி நம்பவைக்கும் கலையை விருத்தி செய்து அதைப் பயன்படுத்துவதற்கு நியாயமான முயற்சி அனைத்தையும் எடுப்போமாக.