முழு இருதயத்தோடு சேவை செய்தல்
1 முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும் காரியத்தில் தாவீது சிறந்த முன்மாதிரி வைத்தான். அவனுடைய வழிநடத்துதல் முழு இஸ்ரவேல் தேசத்தார் மீதும் ஆழமான பாதிப்பையுடையதாக இருந்தது. யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்காக அவர்களும்கூட மனமுவந்து முழு இருதயத்தோடு காணிக்கை அளித்தார்கள். அவர்களுடைய இந்த மனசிந்தையை “என்றைக்கும்” காத்தருளும்படி தாவீது பிற்பாடு ஜெபித்தான். 1 நாளா. 29:9, 18.
2 பண்டைய இஸ்ரவேலில் இருந்ததைப்போலவே இன்றும் யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது? எளிதாக சொல்லவேண்டுமானால், முழு இருதயத்தோடு தம்மை சேவிக்கக்கூடிய ஆட்கள் மீது யெகோவாவின் தயவு இருக்கிறது. சேயீர் அனானி ராஜாவாகிய ஆசாவிடம் சொன்னதாவது: “தம்மைப்பற்றி உத்தம [முழு] இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய [யெகோவாவுடைய] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”—2 நாளா. 16:9.
ராஜ்ய வேலையை ஆதரியுங்கள்
3 பூமி முழுவதிலும் நடைப்பெற்றுவரும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் நாம் முழு இருதயத்தோடு சேவை செய்யலாம். (மத். 24:14) இந்த வேலைக்கு நிதி ஆதரவு கொடுப்பது முக்கியமானது, ஆனால் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்குப் பரப்புவதில் நம்முடைய பலம், நேரம், திறமைகள், பேச்சுத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அதைக் காட்டிலும் அதிக மதிப்புவாய்ந்தது. (2 கொரி. 9:7) யெகோவாவின் மாபெரும் வேலையில் முழு இருதயத்தோடு சேவை செய்வதிலிருந்து வரும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்கிறீர்களா?
4 ஆகஸ்ட் மாதத்தின்போது மெய்ச்சமாதானம் பாதுகாப்பு பற்றி பேசுகையிலும் பழைய புத்தகங்களை அல்லது அதற்கு பதிலாக நமது பிரசுர அளிப்பில் உட்பட்டிருக்கும் ஏதாவது ஒரு புரோஷூரை அளிக்கையிலும் நீதியின் மனச்சாய்வுகொண்ட ஆட்களுக்கு இதயப்பூர்வமான அழைப்பைக் கொடுக்க நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். உலக முழுவதிலும் வன்முறை அதிகரிக்கையில் மெய்ச் சமாதானம் பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்பைக் குறித்து ஜனங்கள் அதிகமதிகமாய் அக்கறையுள்ளவர்களாக ஆகின்றனர். வெளி ஊழியத்தில் முழு பங்கை கொண்டிருப்பதன் மூலமும் சாந்தமுள்ள ஆட்களை சமாதானத்தின் மெய்யான ஊற்றுமூலத்திடம் வழிநடத்துவதன் மூலமும் யெகோவாவிடம் நம்முடைய இருதயம் முழுமையாக இருக்கிறது என்பதை காண்பிக்கும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.
நீங்கள் சீக்கிரமாக பயனியர் செய்யக்கூடுமா?
5 உங்களுடைய வெளி ஊழிய நேரத்தை அதிகரிப்பதற்கு பகல்வெளிச்சமிருக்கும் சமயத்தில் கூடுதலான மணிநேரத்தை பயன்படுத்திக்கொள்ளக்கூடுமா? பயனியர் சேவைக்காக தகுதிபெறுவதற்காக வெளி ஊழியத்தில் உங்கள் மணிநேரத்தை அதிகரிப்பதற்கு ஆகஸ்ட் மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கக்கூடும்.
6 செப்டம்பரில் துவங்கும் புதிய ஊழிய ஆண்டின் ஆரம்பத்தில் ஒழுங்கான பயனியராக வேண்டும் என்ற குறிகோளுடன் அநேகர் தங்களுடைய வெளி ஊழியத்தை அதிகரிக்கின்றனர். நீங்கள் அதைக் குறித்து யோசித்தீர்களா? ஓர் ஒழுங்கான பயனியராவதற்கு நீங்கள் உங்களுடைய அட்டவணையில் சரிமாற்றங்களைச் செய்யக்கூடுமா? யெகோவாவின் சேவையில் அதிக நேரத்தைச் செலவழிப்பதற்காக, அவசியமானால் உங்கள் வாழ்க்கை முறையை எளிமையான ஒன்றாக ஆக்கிக்கொள்வதற்கு மனமுள்ளவர்களாக இருப்பீர்களா? (மத். 6:22) அதைச் செய்வதற்கு நீங்கள் உண்மையிலே விரும்பினால் மற்றும் பயனியர் சேவை செய்ய முடியும் என்று உணர்ந்தால், யெகோவா தேவனை ஜெபத்தில் அணுகுங்கள். அவருடைய உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் கேளுங்கள். (நீதி. 16:3) ஒழுங்கான பயனியர் சேவையில் ஈடுப்படுவதற்காக உங்கள் சாத்தியத்தைக் குறித்து மூப்பர்களிடம் பேசுங்கள். உங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை ஒழுங்கான பயனியர் செய்ய அனுமதிக்கிறது என்பதைக் காண்பீர்களேயானால் நீங்கள் ஆரம்பிப்பதற்குக் குறைந்தது 30 நாட்களுக்கு முன் உங்கள் விண்ணப்ப நமூனாவை கொடுக்க நிச்சயமாயிருங்கள்.
7 சிறியவரோ பெரியவரோ நாமெல்லாருமே முழு இருதயத்தோடு யெகோவாவை சேவிக்கிறோம் என்பதைக் காண்பிப்போமாக. நம்முடைய இருதயம் பிளவுபட்ட ஒன்றாக இருக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. (மாற்கு 12:30) ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு நாம் கொடுக்கும் வைராக்கியமுள்ள ஆதரவு யெகோவாவிடம் முழு இருதயத்தைக் காத்துக் கொள்வதற்கு நம்மை வழிநடத்தும்.