நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பத்திரிகைகளைக் கொண்டு
1 பிரசங்கி 12:12 குறிப்பிடுவதாவது: “அநேகம் புத்தகங்களை உண்டுபண்ணுவதற்கு முடிவில்லை.” நம்முடைய காலத்தில் இந்த வார்த்தைகள் அதிக உண்மையானதாக நிரூபித்திருக்கிறது. ஏனெனில் அதிவேக அச்சு இயந்திரங்கள் பல இலட்ச பக்கங்களைக் கொண்ட அச்சடிக்கப்பட்ட தகவல்களை வெளியிடுகின்றன. அவை அனைத்தும் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு கடுமையாய்ப் போட்டியிடுகின்றன. அச்சடிக்கப்பட்ட தகவல்கள் மிகத்திரளாக இருப்பதன் காரணமாக ராஜ்ய நற்செய்தியை பிரஸ்தாபிப்பவர்களுக்கு இது ஒரு சவாலை முன்வைக்கிறது. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! இன்று பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளிலேயே அதிக பயனுள்ள பத்திரிகைகள் என்பதை தனி நபர்கள் நம்பும்படிச் செய்வது எப்படி?
மதிப்புவாய்ந்த பத்திரிகைகள்
2 காவற்கோபும் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளிடமாக நம்முடைய தனிப்பட்ட மனநிலையை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. நீங்கள் இந்தப் பத்திரிகைகளை மதிப்புள்ள ஒன்றாக கருதுகிறீர்களா? ஒவ்வொரு புதிய இதழ்களுக்காகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா? எல்லாக் கட்டுரைகளையும் படிக்க நேரத்தை திட்டமிடுகிறீர்களா? தனிப்பட்ட விதத்தில் நாம்தானே பத்திரிகைகளை மதித்துணருவோமானால் நமது உண்மை மனதோடுகூடிய உற்சாகமும் இருதய பூர்வமான உறுதியும் மற்றவர்களுக்கு அதை அளிப்பதில் வெற்றிகரமானவர்களாயிருப்பதற்கு நமக்கு உதவிசெய்யும்.
3 நமக்குத் தேவைப்படுவதைப் போலவே நம்முடைய பிராந்தியத்திலுள்ள ஜனங்களுக்கும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலுள்ள மதிப்புவாய்ந்த தகவல்கள் தேவைப்படுகின்றன. பொய்மதத் தலைவர்களின் துன்மார்க்கத்தை முற்றுமுழுக்க வெட்ட வெளிச்சமாக்கிய கட்டுரைகளிலிருந்தும் மகா பாபிலோன் மீது வந்துகொண்டிருக்கும் அழிவைக் குறித்த தீர்க்கதரிசன எச்சரிப்புகளை விவரித்துக் காண்பித்த கட்டுரைகளிலிருந்தும் நாம் நன்மையடைந்தோம். செப்டம்பர் 15, 1989 ஆங்கில காவற்கோபுரம் “இரட்சிக்கப்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற பொருளின்பேரில் நம்முடைய நடத்தையைக் குறித்தும் வாழ்க்கைப் போக்கைக் குறித்தும் நடைமுறையான உற்சாகமூட்டுதலைக் கொடுத்தது. சமீபகால விழித்தெழு! கட்டுரைகள் மனிதனால் கெடுக்கப்பட்டிருக்கும் இப்பூமியின் சுற்றுபுறசூழலின் பேரிலும் இந்தப் பூமியை பரதீஸாக திரும்ப நிலைநாட்டுவதற்குரிய கடவுளுடைய வாக்குறுதியின் பேரிலும் கவனத்தைத் திருப்பின. தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்கான உணர்வை மக்கள் மத்தியில் தட்டியெழுப்புவதற்காக இந்தப் பத்திரிகைகள் என்னே மிகத்திரளான ஆவிக்குரிய உணவை கொடுக்கின்றன!
உங்கள் பத்திரிகைகளைப்பற்றி அறிந்திருங்கள்
4 காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து அவர் நன்மையடைவார் என்பதை ஒத்துக்கொள்ளச் செய்யும் விதத்தில் ஓர் ஆளிடம் நாம் எப்படிப் பேசக்கூடும்? அதற்கு ஒரு சிறந்த வழியானது ஆர்வத்தைத் தூண்டக்கூடிய மற்றும் அவருக்குப் பொருந்தக்கூடிய திட்டவட்டமான ஒரு குறிப்பைக் காட்டுவதன் மூலமே. இதைப் பலனுள்ள விதத்தில் செய்வதற்கு பத்திரிகைகளிலுள்ளவற்றை முழுவதுமாக அறிந்து வைத்திருக்கவேண்டும், மற்றும் முன்கூட்டியே தயார் செய்யவேண்டும். பத்திரிகையை வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு நாம் தனிப்பட்ட விதமாய் அவற்றைப் படிப்பதிலிருந்து இப்படிப்பட்ட தயாரிப்பு ஆரம்பிக்கிறது. நீங்கள் வாசிக்கையில், ஊழியத்தில் பயன்படுத்தப்படக்கூடிய குறிப்புகளைப் பற்றி விழிப்புடனிருங்கள். உங்களுடைய சொந்த பிரதியில் அதைக் குறித்துக்கொள்ளுங்கள். பின்பு இந்த இதழை வெளி ஊழியத்தில் உபயோகிக்க தயார் செய்கையில் நீங்கள் குறித்து வைத்திருக்கும் குறிப்புகளை ஏன் விமர்சித்துப் பார்க்கக்கூடாது?
5 காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைத் தனிப்பட்ட விதமாய் நீங்கள் வாசிக்கும்போது உங்கள் பிராந்தியத்தில் எந்தக் கட்டுரை யாருக்கு விசேஷ ஆர்வமுள்ளதாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. குறிப்பாக மருத்துவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு அல்லது ஆசிரியர்களுக்கு மனதைக் கவரும் கட்டுரைகள் இருக்கின்றனவா? இவ்விஷயத்தில் அடுத்த வெளியீட்டில் வெளிவரவிருக்கும் கட்டுரைகளைப் பற்றிய அறிவிப்புகளைப் பார்க்க மறக்காதீர்கள், அப்போது நீங்கள் முன்னதாகவே திட்டமிட்டு உங்களுக்குக் கூடுதலான பிரதிகள் தேவைப்படுமானால் அதற்காக ஆர்டர் செய்யலாம். இந்தப் பத்திரிகைகளை யாருக்கு அளிக்க விரும்புகிறீர்களோ அந்தத் தனி நபர்களுடைய பட்டியலை உண்டுபண்ணிக்கொள்வது அதிக உதவியாக இருக்கும்.
6 அநேகம் புத்தகங்களை உண்டுபண்ணுவதைக் குறித்து பேசிய பின்பு பிரசங்கி 12:12 சொல்லுவதாவது: “அதிகப்படிப்பு உடலுக்கு இளைப்பு.” உலகப்பிரகாரமான இலக்கியங்களை வாசிப்பது உடலுக்கு இளைப்பு, ஏனெனில் அது ஆவிக்குரிய புத்துணர்ச்சியை அளிப்பது இல்லை. அதற்கு நேர்மாறாக யெகோவாவை கனப்படுத்தும் மற்றும் அவருடைய பெயரையும் ராஜ்யத்தையும் அறிவிக்கும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை விநியோகிப்பதில் முழு பங்கை கொண்டிருப்பதற்காக ஆ நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—நீதி. 3:9.