பத்திரிகை நடவடிக்கைக்காக நேரம் ஒதுக்குங்கள்
1 யெகோவா தம்முடைய வழிகளைப் பின்பற்றுவோருக்கு ‘சமாதானம், எதிர்காலம், மற்றும் நம்பிக்கை’ இருக்கும்படி தீர்மானித்திருக்கிறார். (எரே. 29:11) இந்த எதிர்பார்ப்பைப் பற்றிய தகவல் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வில் காலத்திற்கேற்ற முறையில் வழங்கப்படுகிறது. இந்தப் பத்திரிகைகள் அனைத்து சூழ்நிலைமையிலுள்ள எல்லா வகையான மக்களுக்கும் பயனளிக்கும். (1 தீ. 2:4) நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும் பத்திரிகை விநியோகிப்புக்காகத் தவறாமல் நேரம் ஒதுக்குகிறீர்களா?
2 உங்களுடைய பத்திரிகை விநியோகிப்புகள் குறைந்துகொண்டு வந்திருக்குமானால், இந்தப் போக்கை எவ்வாறு சீர்ப்படுத்தலாம்? ஓர் இன்றியமையாத காரியம், நம்முடைய பத்திரிகைகளின் பொருளடக்கத்திற்கான உங்களுடைய போற்றுதலை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதாகும். ஒரு மனிதர் இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய பத்திரிகைகளை வாசிப்பது உண்மையிலேயே மகிழ்வூட்டும் அனுபவம். அவை மலிவான, தரம் குறைவான ‘ஆறுதலளிப்பவை’ அல்ல, ஆனால் வாழ்க்கையை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குவது என்பதன்பேரில் வழிநடத்துதலும் அறிவுரையும் அவற்றில் அடங்கியுள்ளன.” காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! கவனமான ஆராய்ச்சியின் விளைபயன்களாகவும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின்’ ஏற்பாடுகளாகவும் இருக்கின்றன. (மத். 24:45) மக்களுடைய இருதயங்களைச் சென்றெட்டுவதற்கான பலன்தரத்தக்க கருவிகளாக அவை இருக்கின்றன.
3 நீங்கள் அளித்துவருகிற பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளை அறிந்திருங்கள். உங்களுடைய சமுதாயத்திலுள்ள தற்போதைய பிரச்னைகளைக் கலந்தாராய்கிற குறிப்புகளைக் கண்டுபிடியுங்கள். வீடுகளில் அல்லது தெருவில் நீங்கள் சந்திக்கக்கூடிய ஆண்கள், பெண்கள், இளைஞர் ஆகியோருடன் பேசுவதற்காகத் தயார்செய்வது நல்லது. மொத்தமாக தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பத்திரிகைகள் எவ்வாறு தொடர்புடையதாயிருக்கின்றன என்பதைக் காண்பிக்க ஆயத்தமாயிருங்கள்.
4 பத்திரிகை உணர்வுடையோராக இருங்கள்: பத்திரிகை சாட்சிகொடுத்தல் உங்களுடைய வெளி ஊழிய அட்டவணையில் ஒரு முக்கிய பாகம் வகிக்கவேண்டும். பத்திரிகைகளை அளிக்க உங்களுக்கு மிகச் சிறந்த சமயங்கள் யாவை? உங்களுடைய சபை புத்தகப் படிப்பிற்கு முன்பாக பிற்பகல் தாழ்ந்தவேளையில் அல்லது மாலைவேளையில், ஒரு மணிநேரமோ அதற்கு சற்றேறக் குறைவாகவோ வீட்டுக்கு வீடு வேலைசெய்வதற்கு நீங்கள் முயற்சிசெய்திருக்கிறீர்களா? சில இடங்களில் மாலைநேர சாட்சிகொடுத்தல் மிகவும் பலன்தரத்தக்கதாய் இருந்திருக்கிறது. வித்தியாசப்பட்ட வழிகளில் பத்திரிகைகளை விநியோகிப்பதற்கு சனிக்கிழமை ஒரு நல்ல நாளாகும், ஆனால் மற்ற நாட்களையும் இந்த நடிவடிக்கைக்காகப் பயன்படுத்தலாம். வீட்டுக்கு வீடு மற்றும் கடைக்குக் கடை ஊழியமானது பத்திரிகை நாளின் ஓர் ஒழுங்கான பாகமாய் இருக்கவேண்டும்.
5 பத்திரிகைகளுடைய ஒவ்வொரு வெளியீட்டின் விநியோகிப்பவர்களுக்கான பிரதிகளின் ஒரு திட்டமான எண்ணிக்கைக்காக ஒவ்வொருவரும் ஓர் ஒழுங்கான ஆர்டரை வைத்திருக்கவேண்டும். நீங்கள் பழைய வெளியீடுகளை கையில் வைத்திருக்கக்கூடிய சந்தர்ப்பத்தின்போது, பத்திரிகைகளில் அடங்கியுள்ள பல்வகைப்பட்ட தலைப்புப் பொருள்களை வீட்டுக்காரர்களுக்குக் காட்டுவதற்கு இவற்றை பயன்படுத்தலாம். அவ்வப்பொழுது, அனுமதிக்கப்பட்டால், பழைய பிரதிகளின் ஒரு தொகுப்பை ஓய்வுபெற்றவர்களுக்கான விடுதிகள், காப்பகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் விட்டுவரலாம். இத்தகைய அனைத்துப் பத்திரிகைகளையும் விநியோகிப்புகளாக கணக்கில் எடுத்துக்கொண்டு, உங்களுடைய வெளி ஊழிய அறிக்கைத் தாளில் ஒவ்வொரு மாதமும் அறிக்கை செய்யவேண்டும்.
6 மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகிப்பதன்மூலம், நீங்கள் விநியோகிக்கக்கூடிய பத்திரிகைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையிலுள்ள வாழ்க்கையால் நெருக்கப்படுகிற நேர்மை இருதயமுள்ள மக்கள், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வில் காணப்படுகிறது போன்ற புத்துணர்ச்சியளிக்கிற தகவலைப் போற்றுகிறார்கள். இந்தப் பத்திரிகைகள், யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள நாடுகிறவர்களுக்குத் தேவையான ஆவிக்குரிய உணவை உண்மையிலேயே அளிக்கின்றன. ஆகவே, பத்திரிகை உணர்வுடையோராக இருந்து, உங்களுடைய பிராந்தியத்தில் இந்த விலைமதிப்புமிக்க பிரசுரங்களின் விநியோகிப்பை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேடுங்கள்.