ஞானமுள்ளவர்களாயிருங்கள்—கற்றுக்கொள்ளும் காரியங்களைக் கடைப்பிடியுங்கள்
1 சந்தோஷமும் சமாதானமுமுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதே பெரும்பாலான மானிடரின் இலக்காக இருக்கிறது. வெற்றிகரமான விவாக வாழ்க்கையைக் கொண்டிருப்பது எப்படி, பிள்ளைகளை வளர்ப்பது எப்படி, பணசம்பந்தமாய் வெற்றியடைவது எப்படி, நல்ல தேக ஆரோக்கியத்தை அடைவதும் காத்துவருவதும் எப்படி, இப்படியாக மக்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு உதவக்கூடிய அது சம்பந்தப்பட்ட எண்ணிறைந்த பொருளடக்கங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்களும் கட்டுரைகளும் அறிவுரைகளைக் கொடுக்கின்றன. உலகப் பிரகாரமான பிரசுரங்களில் ஒரு சிலவற்றில் நடைமுறையான ஞானம் காணப்படுகிறது என்றாலும் உலகத்திலுள்ள பெரும்பாலான மக்கள் சந்தோஷம் சமாதானமுமில்லாதவர்களாக இருக்கின்றனர். ஏன் அப்படி?
2 இதற்குரிய விடை பைபிளில் நீதிமொழிகள் 1:7-ல் காணப்படுகிறது. அது சொல்வதாவது: “யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.” உண்மையான அறிவுக்கும் ஞானத்துக்கும் ஊற்று மூலமாகிய யெகோவா தேவனை ஒருவன் ஏற்றுக்கொள்ளாமலும் மதிக்காமலும் இருப்பானாகில் அவன் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொண்டிருக்கும்படி எதிர்ப்பார்க்க முடியாது.
3 இந்த உலகமானது ஆவிக்குரிய ஏழ்மையில், கடும் பஞ்சத்தில் இருக்கிறது. சொல்லப்போனால், இந்தப் பரிதாபகரமான நிலையானது சுயமாக ஏற்படுத்திக் கொண்டதேயாகும். ஏனெனில் இந்தப் பூமி முழுவதிலுமுள்ள எல்லாருக்கும் ஆவிக்குரிய உணவு மிகத்திரளாய் இருக்கிறது. மேலும் அது இலவசமாக கிடைக்கிறது. (நீதி. 1:20, 21; வெளி. 22:17) உலகத்திலிருக்கும் ஆட்கள் யெகோவாவிடமிருந்து வரும் ஞானத்தை வெறுப்பதன் காரணமாக அவர்கள் ஆவிக்குரிய இருளில் தொடர்ந்து தடுமாறுகின்றனர். (நீதி. 1:22-32) மறுபட்சத்தில் அவருடைய சட்டங்களை மதிக்கிறவர்களும் அவருடைய கட்டளைகளைப் பின்பற்றக்கூடியவர்களுமான யெகோவாவின் ஜனங்களாக நாம் ஆவிக்குரிய பிரகாரமாய் நன்கு போஷிக்கப்பட்டு சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறோம். (ஏசா. 65:13, 14) மேலும் கடவுளுடைய அமைப்பில் மிகுந்து காணப்படும் அன்பு கிறிஸ்துவின் உண்மை சீஷர்களாக நம்மை அடையாளப்படுத்துகிறது. (யோ. 13:35) ஆம், யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அந்தச் சகோதரத்துவம் பைபிள் போதனைகளைக் கடைப்பிடிப்பதே பின்பற்றுவதற்குரிய ஞானமான போக்கு என்பதற்கு உயிருள்ள நிரூபணத்தைக் கொடுக்கிறது.
4 இருப்பினும் யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவு கொண்டிருக்கும் ஒரு சிலர் தங்களுடையதாக இருக்கக்கூடிய அந்தச் சந்தோஷத்தை அனுபவியாதவர்களாக இருக்கக்கூடும். தாங்கள் பேசக்கூடிய அல்லது செய்யக்கூடிய அந்தக் காரியங்களின் மூலமாய் அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மற்றவர்களுடைய சந்தோஷத்தையும் கடுமையாய் பாதிக்கக்கூடும். இது எப்படி அவ்வாறிருக்கக்கூடும்? சுருங்கச் சொன்னால், கடவுளுடைய ஞானத்தை அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகியாமல் இருப்பதே காரணமாகும். அவர்கள் சபைக் கூட்டங்களுக்கும் வட்டார மாநாடுகளுக்கும், மாவட்ட மாநாடுகளுக்கும் ஆஜராகக்கூடும். சங்கத்தின் பிரசுரங்கள் என்ன சொல்லுகிறதோ அவற்றின் இந்நாள் வரையிலுமான தகவல்களை அவர்கள் அறிந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைப் பாணியும் அவர்கள் மற்றவர்களோடும் உடன் கிறிஸ்தவர்களோடும் நடந்துகொள்ளக்கூடிய முறைகளும் தாங்கள் கற்றுக்கொண்ட சத்தியங்களை அவர்கள் பொருத்திப் பிரயோகிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறதில்லை. எனவே செய்யப்பட வேண்டிய காரியம் என்ன? இப்படிப்பட்ட ஆட்கள் “ஆவிக்கென்று விதைப்பதில்” கவனத்தை ஒருமுகப்படுத்துவது அவசியம். அப்பொழுது அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கைக்கு உண்மையான சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடும். மற்றும் தங்களைச் சூழ்ந்துள்ள மற்றவர்களுடைய சந்தோஷத்துக்கும் உறுதுணையாக இருக்கக்கூடும்.—கலா. 6:7, 8.
எதைப் பொருத்துவது
5 நாம் தனிப்பட்ட விதமாய் கடமையில் தவறுகிறவர்களாய் நமது விழிப்புணர்வை நெகிழவிட்டு சாத்தானுக்கோ இந்த உலகத்துக்கோ அல்லது நமது அபூரண மாம்சத்துக்கோ விட்டுக்கொடுத்து விடுவோமானால் யெகோவா தேவனோடு ஒரு நெருங்கிய உறவை கொண்டிருப்பதன் மகிழ்ச்சியை நாம் இழந்து போவோம். இதற்கு முன்னிருந்த எந்த ஒரு காலத்தைக் காட்டிலும் இப்பொழுது மிக அதிகமாக நமது சபைக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அதோடு அமைப்பினுடைய மற்ற ஏற்பாடுகளின் மூலமாகவும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களைப் பொருத்திப் பிரயோகிக்க விழிப்புள்ளவர்களாக இருப்பது அவசியமாயிருக்கிறது. இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால். மிக ஆபத்தான ஓர் இடமாக இருக்கிறது. யெகோவா தேவன் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்” மூலமாய் அன்புடனே கொடுக்கக்கூடிய அந்த அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிக்க நாம் விழிப்புள்ளவர்களாக இருப்பது அவசியம். மற்றும் ஏற்ற வேளைக்குரிய போஜனமாக அதை அங்கீகரிப்பதும் அவசியம்.—மத். 24:45-47.
6 நமது அடுத்த விசேஷ அசெம்பிளி நாள் நிகழ்ச்சிநிரலின் போது ஒரே மந்தையாக உறுதியுடன் நிலைநிற்பது எப்படி என்பதன் பேரில் மிகுதியான நல்ல தகவல்கள் கொடுக்கப்படும். பலவீனப்படுத்தும் செல்வாக்குகளை அதாவது மனச் சோர்வுண்டாக்கும் சூழ்நிலைமைகளை இந்த உலகத்தின் சுதந்திர ஆவியை மற்றும் நேரத்தை வீணாக்கும் இடையூறுகளை எதிர்த்துப் போராடுவது எப்படி என்பதன் பேரில் நடைமுறையான ஆலோசனைகள் வழங்கப்படும். யெகோவாவின் பேரிலும் அவருடைய வழிகளின் பேரிலும் முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்கும்படியும், தேவ ராஜ்ய அதிகாரத்தை அங்கீகரித்து அதற்குக் கீழ்ப்பட்டிருக்கும்படியும், மனத்தாழ்மையோடும் பணிவடக்கத்தோடும் இருக்கும்படியும், தேவராஜ்ய நடவடிக்கைகளுக்காக நேரத்தை விலைகொடுத்து வாங்கும்படியும் நமக்குக் கொடுக்கப்படும் சிறந்த அறிவுரைகளை நாம் நடைமுறையில் பின்பற்றுகிறோமா? (மீகா 6:8; எபே. 5:15, 16: எபி. 6:10; 13:17) கிறிஸ்தவ வாழ்க்கைப் பாணிக்கு இசைய நடப்பதற்கு குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கொருவர் உதவி செய்கின்றனரா? நாம் தெரிந்துகொள்ளும் பொழுதுபோக்கு, நமது பழக்கவழக்கங்கள், நமது அனுதின வழக்கமான செயல்கள் ஆகிய யாவுமே வேதவசனங்களிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிவுரைகளால் பாதிக்கப்பட வேண்டும். கற்றுக்கொள்ளும் காரியங்களைப் பொருத்திப் பிரயோகிக்க நாம் ஊக்கமான முயற்சி எடுத்தாலொழிய கொஞ்சமான அல்லது எந்த விதமான ஆவிக்குரிய முன்னேற்றமும் இராது. மேலும் நமது மனசமாதானமும் சந்தோஷமும் கடுமையாய் பாதிக்கப்படும்.—பிலி. 4:7-9: யாக். 1:22-25.
7 தனிப்பட்ட மற்றும் குடும்பப் படிப்புகளில் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி அவசியம். காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸ் பைபிளின் நியமங்களின் பொருத்தங்களைக் குறித்த விவரமான தகவல்களிடமாக நம்மை வழிநடத்தக்கூடும். இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகம் இன்றைய மிக சிக்கலான சாத்தானிய உலகத்தை எதிர்த்து சமாளிக்க தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய பெற்றோர்களுக்கான மிகச் சிறந்த உதவி ஏடு. இப்படிப்பட்ட பிரசுரத்தை எடுத்துப் பார்ப்பதன் மூலம், நாம் காரியங்களின் பேரில் யெகோவாவின் நோக்குநிலையை பெறுவோம், நீதியான நியமங்களால் வழிநடத்தப்படுவோம். அவ்வாறு செய்யாமலிருப்பதானது ஒரு வியாதிக்கு நமது கையில் மருந்தை வைத்திருந்து அது நம்மைத் தொல்லைப்படுத்தும் நோக்காட்டை தணிக்கும் என்று நாம் அறிந்திருந்தும் அதை நாம் சாப்பிடாமலிருப்பதற்கு ஒப்பாக இருக்கும். ஒழுங்கான தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பு நமது விசுவாசம் வளரும்படி செய்து சகித்திருப்பதற்கு நமக்குப் பெலனைக் கொடுக்கும். சோதனைக்குரிய ஒரு காலத்தில், நமது விசுவாசம் உள்ளுரம் இழந்து, நம்மை விழுந்துபோகச் செய்யாது.—மத். 13:6; லூக். 8:13: எபி. 2:1.
8 மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்களுடைய குடும்பத்தாரை தலைமைத் தாங்கி வழிநடத்துவதில் முன்மாதிரியை வைக்க வேண்டும். அப்படியானால் இது அவர்கள் தங்கள் மனைவிமாருக்கும் பிள்ளைகளுக்கும் ஆவிக்குரிய பிரகாரமாய் தங்களை பலமுள்ளவர்களாக வைத்துக்கொள்வதற்கு கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அவருடைய அமைப்பிலிருந்தும் அவர்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதற்கு உதவுவதைக் குறிக்கும். இந்த முறையில் முழு குடும்பமும் கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்மாதிரியானவர்களாக இருக்கக்கூடும். மேலும் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் மற்றவர்களுக்கு உற்சாகமூட்டுதலைக் கொடுக்க முடியும்.—எபே. 6:4; 1 தீமோ. 3:4, 12, 13.
யாருக்கு உதவிசெய்வது
9 ஒவ்வொரு ஆண்டும் ஞாபகார்த்த தினத்துக்கு ஆஜராகக்கூடியவர்களுள் தாங்கள் எதைக் கற்றுக்கொள்ளுகிறார்களோ அதைக் கடைப்பிடிப்பதற்கும் அமைப்புடன் அதிக சுறுசுறுப்பாய் கூட்டுறவுகொள்வதற்கும் கூடுதலான ஊக்கமூட்டுதல் தேவைப்படக்கூடிய அநேகர் இருக்கின்றனர். நம்முடைய பைபிள் மாணாக்கர்களுக்கும் அன்பார்ந்த கரிசனைக் காட்டப்படலாம். தங்களுடைய வாழ்க்கையில் பைபிள் நியமங்களை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம், கடவுளுடைய நீதியான கட்டளைகளை எப்படி நிறைவேற்றலாம் என்பதை அவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். விசுவாசத்தில் நமது சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் ஆவதற்காக முன்னேறக்கூடிய ஆட்களுக்கு நாம் அக்கறையை நடப்பித்துக் காட்ட வேண்டும்.
10 ஒழுங்கற்றவர்களாகவும் செயலற்றவர்களாவும் ஆகிவிட்டிருக்கும் எவராகிலும் இருந்தால் அமைப்புடன் ஒழுங்கான நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கான அவசியத்தைக் காணும்படி உதவி செய்ய வேண்டும். யெகோவாவை அதிக முழுமையாக சேவிப்பதனால் முன்னோரு சமயத்தில் அவர்கள் அனுபவித்து மகிழ்ந்த அந்தச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அவர்கள் திரும்ப பெறுவது அவசியம். (யோவான் 13:17) சத்தியத்துக்கான அவர்களுடைய மதித்துணர்வு தூண்டப்படுவதற்கும் “ஸ்தோத்திர பலியை கடவுளுக்குச் செலுத்துவதற்கும்” உதவி அளிப்பதன் மூலம் அவர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களைக் கைக்கொள்ள முடியும், ஜீவனுக்குச் செல்லும் பாதையில் நிலைத்திருக்க முடியும்.—எபி. 13:15: நம் ராஜ்ய சேவை, ஆகஸ்ட் 1979, பக்கம் 3, மற்றும் ஏப்ரல் 1977 பக்கம் 3-ஐ பார்க்கவும்.
11 யெகோவாவின் விரைவாக முன்னேறும் அமைப்புடன் கடவுளுடைய ஜனங்கள் அனைவரும் அதே வேகத்தில் அடியெடுத்து வைத்து முன்னேற வேண்டும். அலட்சிய மனப்போக்கிற்குள் வஞ்சிக்கப்பட்டுப் போவதற்கு நாம் நம்மை அனுமதிக்க முடியாது. நாம் எப்பொழுதுமே நமது ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய அமைப்பின் மூலம் கொடுக்கப்படும் சமீபகால தகவல்களை அறிந்திருப்பவர்களாக அதை உடனடியாக பொருத்திப் பிரயோகிக்க வேண்டும். இது ஊக்கமான முயற்சியையும் சில சமயங்களில் தனிப்பட்ட தியாகங்களையும் உட்படுத்துகிறது. ஆனால் நம்மால் செய்ய இயலாத காரியங்களை யெகோவா நம்மிடமிருந்து கேட்பது இல்லை. அவர் நமது சிருஷ்டிகர், நமக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார். ஆகவே யெகோவாவினால் தொடர்ந்து கற்பிக்கப்படுவதன் மூலமும் கற்றுக்கொண்ட காரியங்களைப் பொருத்தி பிரயோகிப்பதன் மூலமும் நாம் நம்மை ஞானமுள்ளவர்களாக நிரூபிப்போமாக. இது அவருக்குத் துதியைக் கொண்டுவரும், நமக்கு நித்திய நன்மைகளில் விளைவடையும்.—ஏசா. :48:17; 54:13.
5