உங்களுடைய ஊழியத்தில் திறம்பட்டவர்களாயிருங்கள்
1 பல்வகை, வாழ்க்கையின் ரசனை என்று சொல்லப்படுகிறது. எப்போதும், ஒரு பொருளின்பேரில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையே அதை அதிக சுவாரஸ்யமுள்ளதாக்கக்கூடும். இது நம்முடைய ஊழியத்தைப் பொருத்தவரை உண்மையாகவே இருக்கிறது. நாம் கவனமுள்ளவர்களாக இல்லையென்றால், வீட்டுக்கு-வீடு பிரசங்கிப்புகள் எளிதில் அதே, ஒரேமாதிரியான பிரசங்கமாக ஆகிவிடும். அதே அறிமுகங்களைத் திரும்பத்திரும்ப சொல்வது நமக்கும் வீட்டுக்காரர்களுக்கும் சலிப்பூட்டுவதாக ஆகிவிடும். ஆகவே உங்களுடைய ஊழியத்தில் திறம்பட்டவர்களாயிருங்கள். ஆனால் நீங்கள் இதை எப்படிச் செய்யலாம்?
2 ‘வணக்கம், நாங்கள் ராஜ்ய நற்செய்தியோடு எங்கள் அயலவரைச் சந்திக்கிறோம்’ என்பதுபோல சொல்வதற்கு மாறாக, உங்களுடைய அறிமுக வார்த்தைகளை வித்தியாசமாக சொல்வதற்கான வழிகளை ஏன் யோசித்துப்பார்க்கக்கூடாது? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் அறிமுகங்களைக் குறித்ததில் ஏராளமான தகவலைக் கொண்டிருக்கிறது. பக்கங்கள் 9-15-ல், 18 வித்தியாசப்பட்ட விஷயங்களின்பேரில் அறிமுகங்கள் காணப்படுகின்றன. அநேக விஷயங்களுக்கு இரண்டு, மூன்று, அல்லது அதிக சாத்தியமான அறிமுகங்கள் காணப்படுகின்றன.
3 நீங்கள் “நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?” என்ற சிற்றேட்டை உபயோகித்தால், பக்கம் 13-ல், “உயிர்/மகிழ்ச்சி” என்ற பகுதியிலிருக்கும் இந்த அறிமுகம் உதவியாயிருக்கும்:
◼ “இன்று வாழ்க்கையின் தன்மையைப்பற்றி உண்மையில் அக்கறைகொண்டுள்ள ஆட்களுடன் பேசுகிறோம். உண்மையில் மகிழ்ச்சியுள்ள, பிரச்னையற்ற வாழ்க்கை சாத்தியமாயிருக்கிறதா? என்று பலர் எண்ணமிடுகின்றனர். இந்தச் சிற்றேடு உற்சாகமூட்டும், சிந்தனையைத் தூண்டும் கருத்தை அளிக்கிறது.” பக்கம் 18-க்குச் சிற்றேட்டைத் திறந்து “ஒரு புதிய உலகம்—எவ்வகையில் வேறுபடுகிறது?” என்ற பகுதியிலிருந்து ஓரிரண்டு முக்கிய குறிப்புகளை வாசித்துக் காட்டுங்கள்.
4 சில ராஜ்ய பிரஸ்தாபிகள்—விசேஷமாக இளைஞர்கள், புதியவர்கள், முதியவர்களும் உட்பட—துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி, ஓர் ஆர்வமான அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம் என கண்டிருக்கின்றனர்.
ஓர் இளம் பிரஸ்தாபி “சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை” என்ற துண்டுப்பிரதியை உபயோகித்து சொல்லலாம்:
◼ “கடவுள் எவ்வாறு இந்தப் பூமிக்கு சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருவார் என்பதன்பேரில் சுருக்கமான ஒரு செய்தியை உங்களுக்கு நான் கொண்டுள்ளேன். சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற தலைப்புள்ள இந்தத் துண்டுப்பிரதியை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.” பிறகு, இந்த இளம் நபரோடு வேலைசெய்யும் முதிர்ந்த பிரஸ்தாபி வீட்டுக்காரரின் பிரதிபலிப்பைப் பொருத்து கூடுதலான கருத்துகளையோ குறிப்புகளையோ சொல்வதற்கு தீர்மானிப்பார்.
5 வீட்டுக்காரர் ஆர்வம் காட்டுவாரேயானால், அந்த முதிர்ந்த பிரஸ்தாபி சொல்லலாம்:
◼ “பைபிள் எதிர்காலத்தைக் குறித்து ஒரு மகத்தான நம்பிக்கையை அளிக்கிறது. சீக்கிரத்தில் பூமிமுழுவதும் சமாதானம் ஸ்தாபிக்கப்படும் என்று அது காட்டுகிறது. கடவுளே சர்வலோகத்தையும் அதிலுள்ளவற்றையும் உண்டாக்கின படைப்பாளராகையால், இன்று நாம் எதிர்ப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அவர் மனிதவர்க்கத்தின்மீது போதுமான அக்கறையுடையவராயிருப்பார் என்று நீங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்களா? எதிர்காலத்தைக் குறித்த பைபிள் வாக்கின்பேரில் உங்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்க நான் விரும்புகிறேன்.” பிறகு சங்கீதம் 37:9-11, 29 வாசித்துக் காட்டுங்கள்.
6 என்றும் வாழலாம் புத்தகத்தை நீங்கள் அளித்தால், பக்கங்கள் 156 முதல் 162 வரை சித்தரித்துக் காட்டப்பட்டுள்ள எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையான கருத்தை ஏன் நீங்கள் சிறப்பித்துக் காட்டக்கூடாது? படங்களுக்கு அடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள பைபிள் மேற்கோள்களிடம் கவனத்தைத் திருப்புங்கள். இந்த வாக்குகளைக் கடவுள் நிறைவேற்றுவார் என்பதன்பேரில் நம்பிக்கை வைப்பது மெய்ம்மையாகுமா என்று வீட்டுக்காரரைக் கேளுங்கள். ஏற்கெனவே நிறைவேறியிருக்கிற பைபிள் தீர்க்கதரிசனங்களைப்பற்றி சுருக்கமாகக் கலந்து பேசுவது, மனித இனத்தை ஆசீர்வதிக்கக்கூடிய கடவுளுடைய திறமையின்பேரில் வீட்டுக்காரர் கொண்டுள்ள நம்பிக்கையை பலப்படுத்தவேண்டும்.
7 எல்லா ராஜ்ய அறிவிப்பாளர்களும் தேவராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் பங்குபெற விரும்பவேண்டும். சாத்தியமான இடங்களில் சத்தியத்தின் விதைகளை விதைத்து, காட்டிய ஆர்வத்தை வளர்க்கவேண்டும். நாம் நம்முடைய பாகத்தை செய்தபிறகு, எந்தவொரு பிற்கால வளர்ச்சியையும் நாம் சந்தோஷமாக யெகோவாவுடைய கரங்களில் விட்டுவிடலாம். நம்முடைய அயலவரோடு பகருவதற்கு நாம் மிகச்சிறந்த செய்தியை உடையவர்களாயிருக்கிறோம். எப்போதும் தயாராயிருப்பதன் மூலம், ராஜ்ய செய்தியை அளிப்பதில் நாம் திறம்பட்டவர்களாயும் எந்தப் பிரசுரத்தை அளிப்பது என்பதைத் தெரிந்தெடுப்பதில் பகுத்துணர்வுள்ளவர்களாயுமிருப்போமாக.