அக்கறையுள்ளவர்களுக்கு உதவ மகிழ்ச்சியோடு திரும்பச் செல்லுங்கள்
1 வீட்டுக்கு-வீடு வேலையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அக்கறையுள்ளவர்களுக்கு உதவ விரும்புகின்றனர். இப்படிப்பட்ட உதவியை அளிப்பதன் மூலம் நாம் ஆழமான மகிழ்ச்சியையும் திருப்தியையும் அனுபவிக்கிறோம். (சங்கீதம் 126:5, 6 ஒத்துப்பாருங்கள்.) இது நாம் தயாராயிருப்பதை அவசியப்படுத்துகிறது.
2 தயாரிப்பு, விவரங்களடங்கிய விஷயங்களை நம்முடைய வீட்டுக்கு-வீடு பதிவில் (House-to-House Record) எழுதிவைத்திருப்பதோடு துவங்குகிறது. வீட்டுக்காரரிடம் காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-வின் எந்த இதழை அளித்தீர்கள், அவர் சந்தாவை எடுத்தாரா இல்லையா ஆகியவற்றை இது உள்ளடக்கக்கூடியதாயிருக்கும். முதல் சந்திப்பில் பேசப்பட்டப் பொருளையும் வீட்டுக்காரருடைய பிரதிபலிப்பையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். திரும்பச் செல்லும்போது சம்பாஷணையை எவ்வாறு துவங்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதையுங்கூட குறித்துவைத்துக்கொள்ள நீங்கள் விரும்பலாம்.
3 உதாரணமாக, முதலில் சென்றிருந்தபோது கர்த்தருடைய ஜெபத்தைக் குறித்துப் பேசி “அரசாங்கம்” சிற்றேட்டை அளித்திருந்தீர்களென்றால், நீங்கள் சுருக்கமாக இதுபோன்று ஏதோவொன்றை சொல்லலாம்:
◼ “கடந்த முறை நான் சந்தித்தபோது, கடவுளுடைய சித்தம் பூமியில் எவ்வாறு செய்யப்படும், வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் சமாதானம் அடையப்பட்டிருக்கும் என்பவற்றை நாம் கலந்து பேசினோம். நான் உங்களிடத்தில் விட்டுச்சென்ற சிற்றேட்டில், 29-ம் பக்கத்தில் மனிதவர்க்கத்துக்குக் கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரும் மற்ற ஆசீர்வாதங்களைக் குறித்து என்ன சொல்கிறது என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.”
4 அந்த நபர் இந்துவாக இருந்தால், இதுபோன்று ஏதோவொன்றை சொல்லுங்கள்:
◼ “முன்பு நான் வந்திருந்தபோது, நாம் தானியேல் 2:44-ல் உள்ள தீர்க்கதரிசனத்தைப் பற்றியும் அது எப்போது நிறைவேறும் என்பதைப்பற்றியும் கலந்து பேசினோம்.” திரும்பவும் அந்த வசனத்தை வாசித்து, முன்பு நீங்கள் பேசி நிறுத்திய பிரசங்கத்திலிருந்து திரும்பவும் துவங்கி நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? சிற்றேட்டில் 12 முதல் 17 பக்கங்களைக் குறிப்பிட்டுப் பேசுங்கள். இந்த மாற்றம் வரக்கூடிய காலப்பகுதியைக் குறித்து பைபிள் எவ்வித சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை என்ற உண்மைக்கு வீட்டுக்காரருடைய கவனத்தைத் திருப்புங்கள். நடைமுறையாயிருந்தால், அவரிடம் உள்ள சிற்றேட்டைக் கொண்டுவரும்படி சொல்லுங்கள், பின்பு இருவருமாக சேர்ந்து விஷயங்களைச் சிந்தியுங்கள்.
5 வீட்டுக்காரர் ஒருவேளை பொருளாதார விதத்திலோ மற்ற காரியங்களிலோ மனநிறைவுள்ளவராக தோன்றினால், அவரிடமிருக்கும் பத்திரிகையில் உள்ள உற்சாகமூட்டும் படத்தின்பேரிலோ வாக்கியத்தின்பேரிலோ குறிப்புகள் சொல்லும்படி அவரைக் கேட்கலாம். அல்லது அவர் ஒருவேளை ஒரு துண்டுப்பிரதியை மட்டும் எடுத்திருந்தால், நீங்கள் திரும்பவும் சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியைக் குறிப்பிட்டுக் காட்டி 3, 4 பக்கங்களில் கூறப்பட்டிருப்பதை வாசித்துக் காட்டுங்கள். ஓர் அழகான பரதீஸிய பூமியில் வாழ விரும்புகிறாரா என்று வீட்டுக்காரரைக் கேளுங்கள். பக்கம் 4-ல், ‘உங்களுக்கு இது எப்படிக் கூடியதாயிருக்கும்’ என்ற உபதலைப்பின் கீழுள்ள பொருளை அவரோடு சம்பாஷியுங்கள்.
6 நீங்கள் காவற்கோபுரத்திலோ விழித்தெழு!-விலோ சம்பாஷித்த ஒரு கட்டுரைக்குங்கூட இதே அடிப்படை மாதிரியான அணுகுமுறையை உபயோகிக்கலாம். முதல் சந்திப்பின்போது நீங்கள் சிறப்பித்துக் காட்டிய கட்டுரையைக் குறிப்பிட்டப் பின்பு, உங்களிடமிருக்கிற அதே கட்டுரையின்பேரிலோ வேறொரு இதழிலுள்ள கட்டுரையின்பேரிலோ அக்கறைக்குரிய மற்றொரு குறிப்பைச் சொல்லுங்கள். கூடுமானால், ஒரு வசனத்தை இருவருமாக சேர்ந்து வாசித்து வீட்டுக்காரரிடம் குறிப்புகளைக் கேளுங்கள்.
7 வீட்டுக்காரர் ஒருவேளை நீங்கள் முதல் முறை அவரைச் சந்தித்தபோது ஒரு சந்தாவை எடுக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் திரும்பவும் சென்று சந்திக்கும்போது அந்தப் பத்திரிகைகளில் ஒன்றினுடைய அடுத்த இதழைக் கொண்டிருந்தால், வெளிவந்திருக்கிற அக்கறையூட்டும் புதிய கட்டுரைகளை அவரிடம் காட்டி ஒரு சந்தாவை அளிப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கக்கூடும்.
8 ஒரு பைபிள் படிப்பைத் துவங்கவேண்டும் என்ற உங்களுடைய இலக்கை நினைவிற்கொள்ளுங்கள். சாதாரணமாக அந்த அளவுக்கு அக்கறையை வளர்ப்பதற்கு அநேக சந்திப்புகளைச் செய்யவேண்டும். வீட்டுக்காரரைக் கூடிய மட்டும் சீக்கிரத்தில் திரும்பவும் சென்று சந்திப்பதன் மூலம் அவரிடம் உங்களுக்கு இருக்கிற தனிப்பட்ட அக்கறையைக் காட்டுங்கள்.
9 நாம் யாவரறியச் செய்யும் இந்த நற்செய்தி மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. (லூக். 2:10) நம்முடைய முயற்சிகளுக்கு அக்கறையுள்ள ஆட்கள் பிரதிபலிக்கும்போது, இது உண்மையிலேயே களிகூரும் சமயமாக இருக்கிறது. (பிலி. 4:1) வெளி ஊழியத்தில் காணக்கூடிய அக்கறையுள்ள ஆட்களுக்கு உதவ, திரும்பவும் சென்று சந்திப்பதன் மூலம் நாம் இத்தகைய மகிழ்ச்சியை அறுவடை செய்வோமாக.