யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!
1 பொ.ச. 33, நிசான் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று, திரளான கூட்டத்தினர் குருத்தோலைகளைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டு யெகோவாவின் முதற்பேறான குமாரன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, ‘யெகோவாவின் நாமத்தில் ராஜாவாக வருகிறவர்’ என்பதாகப் போற்றினர். (லூக். 19:38, NW; எபி. 1:6) திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை, நிசான் 10, 11 அன்று, இயேசுவுடைய பூமிக்குரிய வாழ்க்கையை மிகவும் சுறுசுறுப்பாக்கின அந்தக் கடைசி நாட்களில், அவர் தம்முடைய பொது ஊழியத்தில் தீவிரமாக மூழ்கியிருந்தார்.
2 இன்று, அதைவிட திரளான கூட்டத்தினர் அடையாளப்பூர்வமான குருத்தோலைகளைத் தங்களுடைய கையில் பிடித்துக்கொண்டு, “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக,” என்று மகா சத்தமாய் ஆர்ப்பரிக்கின்றனர். (வெளி. 7:9, 10) மார்ச் 26-ல், கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதற்காக நாம் கூடிவருவோம். அந்தத் தேதி நெருங்கிவருகையில், ஊழியத்தில் நம்முடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, அதன்மூலமாக இந்த உலகளாவிய துதியின் சத்தத்தை நாம் அதிகரிக்கச்செய்ய முடியுமா?
3 ஊழிய நடவடிக்கையை அதிகரியுங்கள்: அநேக பிரஸ்தாபிகள் மார்ச்சில் துணைப் பயனியர்களாகச் சேவைசெய்ய ஏற்கெனவே பெயர்கொடுத்திருக்கின்றனர். நீங்கள் அவர்களுடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், தாமதிக்காமல் உங்களுடைய விண்ணப்பத்தைச் சமர்ப்பியுங்கள். அந்த வேலையைக் குறித்து உங்களுக்கிருக்கிற எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கு மூப்பர்களில் ஒருவர் மகிழ்ச்சியுள்ளவராய் இருப்பார்.
4 உங்களால் துணைப் பயனியராகச் சேவைசெய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும், மார்ச் மாதத்தில் ஊழியத்தில் முழுமையான ஒரு பங்கைக் கொண்டிருக்க நீங்கள் விரும்புவீர்கள். அந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் தொகுதியாகச் சாட்சிக்கொடுப்பதற்காக சபையானது ஒருவேளை ஏற்பாடுசெய்யக்கூடும். அந்த நோக்கத்திற்காகப் போதியளவு பிராந்தியம் ஒதுக்கி வைக்கப்படவேண்டும்.
5 எல்லா சபைகளும் மார்ச் 26, சனிக்கிழமை அன்று ஒரு விசேஷித்த வெளி ஊழியத்திற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்யவேண்டும். நினைவு ஆசரிப்புக்கு தயார்செய்வதற்காக அதிக வேலைகள் இருந்தபோதிலும், அவ்விதமாகச் செய்யக்கூடிய ஒவ்வொருவரும் சனிக்கிழமை காலை வெளி ஊழியத்தில் ஈடுபடும்படி சிபாரிசுசெய்யப்படுகிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதோடுகூட, நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகும்படி நீங்கள் அழைத்திருக்கிறவர்கள் போக்குவரத்து வசதியைக் கொண்டிருப்பதைக் குறித்தும் கூட்டம் நடக்கக்கூடிய நேரத்தையும் இடத்தையும் அவர்கள் தங்களுடைய மனதில் தெளிவாகக் கொண்டிருப்பதைக் குறித்தும் நிச்சயமாயிருங்கள்.
6 மற்றவர்களை அழையுங்கள் மற்றும் உற்சாகப்படுத்துங்கள்: இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (1 கொ. 11:24) இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகையில், யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும் நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகி, அதை அனுசரிக்க அழைக்கப்படுகின்றனர். மற்றவர்களோடுகூட, பைபிள் மாணாக்கர்கள், உறவினர்கள், உங்களோடு பைபிள் கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருந்தவர்கள், விசுவாசத்திலில்லாத துணைவர்கள், வேலைசெய்யுமிடத்தில் உங்களுக்கு அறிமுகமானவர்கள் ஆகியோரை நீங்கள் அழைக்கவேண்டும். ஒருவரையும் தவற விட்டுவிடாதபடிக்கு ஒரு பட்டியலை தயார்செய்யுங்கள்.
7 அக்கறையுள்ள மக்களை நினைவு ஆசரிப்பிலேயே உற்சாகப்படுத்துவதற்கு கூடுதலான வாய்ப்புகள் அங்கு இருக்கும். முதல் முறையாக ஆஜராகிற புதியவர்களை நீங்கள் வரவேற்கும்படி, முன்கூட்டியே வருவதற்கு நிச்சயமாயிருங்கள். உங்களுடைய பைபிள் மாணாக்கர்களில் பலர் ஆஜராவார்களானால், கூட்டத்தின்போது அவர்களில் சிலருடன் மற்றொரு பிரஸ்தாபி உட்காருவது நடைமுறையானதாயிருக்கலாம். புதியவர்கள் சபையின் வழக்கமான பொதுக் கூட்டத்துக்கு ஆஜராகும்படி அழையுங்கள். பொதுப்பேச்சைக் கொடுப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்ட மூப்பர், தூண்டுதலளிக்கும் பேச்சை அளிப்பதற்கு நன்கு தயார்செய்தவராக இருக்கவேண்டும்.
8 நினைவு ஆசரிப்பின் முடிவில், “யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!” என்ற 105-வது பாடலைப் பாடுவதில் நம்முடைய குரல்களைச் சேர்த்துக்கொள்கையில், யெகோவாவின் துதிக்கான தேவராஜ்ய நடவடிக்கையின் சுறுசுறுப்பான மாதத்தின்பேரில் திருப்தியுடன் பின்னோக்கிப் பார்க்கக்கூடியவர்களாய் இருப்போமாக!