கவனம் சிதறாமல் யெகோவாவைச் சேவியுங்கள்
1 “யெகோவாவைக் கடவுளாகக் கொண்டுள்ள ஜனம் மகிழ்ச்சியுள்ளது!” (சங். 144:15, NW) அரசன் தாவீதினுடைய இந்த வார்த்தைகள், இந்தப் பொல்லாத காலங்களின்போதுங்கூட, இன்னும் உண்மையாக உள்ளனவா? (எபே. 5:16) ஆம்! கிறிஸ்தவர்கள் யெகோவாவைச் சேவிப்பதில் இன்னும் மகிழ்ச்சியைக் கண்டடைகின்றனர். காரியங்கள் நமக்கு எளிதாக எப்போதும் இருக்கிறதில்லை. இந்தக் ‘கொடிய காலங்களில்’ சாத்தான் நமக்கு இக்கட்டுகளை உண்டுபண்ணுகிறான், எனினும் நாம் இருதயத்தில் சோர்வடைகிறதில்லை. (2 தீ. 3:1, 2) நிலைமைகள் மோசமாகிக்கொண்டிருப்பதானது, கேடடைந்துகொண்டிருக்கும் இந்தப் பழைய உலகத்தைக் கடவுளுடைய ராஜ்யம் முற்றிலுமாக அழித்தகற்றி அதனிடத்தில் சுத்தமான ஒரு புதிய உலகத்தை வைக்கவிருக்கும் அந்தக் காலம் சமீபித்துவிட்டதென்பதற்கு மேலுமான நிரூபணமாக உள்ளன. (2 பே. 3:13) இந்த உலகத்தின் இருள், நம்முடைய மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கையின் சுடரொளியை மங்கவைப்பதோ அணைத்துப்போடுவதோ இல்லை; மாறாக, நம்முடைய ராஜ்ய நம்பிக்கை என்றும் மேன்மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இந்த இருள்நிறைந்த உலகத்தில் வெளிச்சம் காட்டுபவராக யெகோவாவைச் சேவிப்பதில் மகிழ்ச்சியுடையோராக இருக்கிறீர்களல்லவா?—பிலி. 2:14, 15.
2 தனி நபர்களாக, நாம் யெகோவாவை எவ்வாறு சேவிக்கிறோமென்பதை இடைவிடாமல் கவனிக்க வேண்டும். ஏன்? ஏனெனில் சர்த்தான், கவனம் சிதறச் செய்விக்கிற மகா மோசடிக்காரன். “கவனத்தைச் சிதறடி” என்பதற்கு “ஒரு பக்கமாகத் திருப்புவது,” “ஒரேசமயத்தில் (ஒருவருடைய கவனத்தைப் போன்றதை) வேறொரு காட்சிப்பொருளுக்கு அல்லது வேறு திசைகளில் இழுப்பது அல்லது வழிநடத்துவது” மற்றும் “முரண்பாடான உணர்ச்சிவேகங்கள் அல்லது நோக்கங்களைக்கொண்டு தூண்டிவிடுவது அல்லது குழப்பிவிடுவது” என்பதாக ஓர் அகராதி விளக்கமளிக்கிறது. இந்தப் பூமிக்குத் தள்ளப்பட்டது முதற்கொண்டு சாத்தான், மனிதவர்க்கத்தை ‘மோசம்போக்குவதில்’ சித்திப்பெற்றிருக்கிறான். நம்முடைய நாளுக்குரிய மெய்யான விவாதங்களிலிருந்து மனிதனின் கவனத்தைத் தூரமாய் சிதறடிப்பதற்குப் பல சூழ்ச்சிமுறைகளைப் பயன்படுத்துகிறான். (வெளி. 12:9) யெகோவாவின் சாட்சிகள் கடந்த நூறு ஆண்டுகளாக ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதில் தங்களை ஊக்கமாய் ஈடுபடுத்தியிருக்கிறபோதிலும், கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவதையும் அவருடைய அரசாதிகாரம் சரியென நிரூபிக்கப்படுவதையும் பற்றிய இந்த மிக முக்கியமான விவாதங்களை எத்தனை ஆட்கள் மதித்துணர்கின்றனர். ஒப்பிட்டுக் காண்கையில் ஒருசிலரே. (1 யோ. 5:19) பூமியிலுள்ள கோடிக்கணக்கான ஆட்களின் கவனத்தைச் சாத்தான் சிதறடிக்கக் கூடுமெனில், நாம் யெகோவாவின் சேவையை விட்டுவிடும்படி அவன் நம்முடைய கவனத்தைச் சிதறடிக்க அல்லது நம் கவனத்தைக் கவர்ந்துகொள்ளக் கூடுமென்ற ஆபத்து எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. விசனகரமாய், நம் சகோதரர் சிலர், கவனத்தைச் சிதறவைக்கும் சாத்தானின் சூழ்ச்சிகளால் குழப்பமடைந்திருக்கின்றனர். தங்கள் மனம் வெவ்வேறுபட்ட திசைகளில் இழுக்கப்படுவதற்கு அவர்கள் அனுமதித்திருக்கின்றனர். இன்று கவனத்தைச் சிதறடிக்கும் எல்லா வகைகளான சாதனங்களும் உள்ளன. அவற்றில் ஒருசிலவற்றைக் கவனியுங்கள்.
3 பொருளாதாரப் பிரச்னைகளும் பொருளாசையும்: பூமியின் பெரும்பான்மையான நாடுகளில், வேலையில்லாமையும் விலைவாசி உயர்வும் கவலைகளை உண்டுபண்ணுகின்றன. நமக்கும் நம்முடைய குடும்பங்களுக்கும் உணவும், உடையும், தங்குமிடமும் நாம் அளிக்கவேண்டுமென்பது உண்மையே. ஆனால் வாழ்க்கையின் தேவைகளைப்பற்றி மட்டுக்குமீறிய கவலையுள்ளோராகும்படி நம்மை அனுமதிப்போமானால், இந்த அக்கறைகளே நம்முடைய சிந்தனையை முதன்மையாக அடக்கியாளும். இராஜ்ய விவாதத்துக்கு நாம் ஆதரவளிப்பதைப் பார்க்கிலும் நம்முடைய உடல் பிழைத்திருப்பதே நமக்கு மிக அதிக முக்கியமானதாகிவிடக்கூடும். இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் எபிரெயர் 13:5, 6-ல் அறிவுரை கொடுத்தார். இராஜ்யத்தை முதலாவதாகத் தேடுவோர் கவலைப்பட வேண்டியதில்லையென இயேசு கிறிஸ்து நமக்கு உறுதியளிக்கிறார்; நமக்கு உண்மையில் தேவைப்படுவதை யெகோவா அளிக்கிறார். (மத். 6:25-34) உலகமுழுவதிலும் பயனியர்களும் மற்ற முழுநேர ஊழியர்களும் இது உண்மையென உறுதிகூற முடியும்.
4 சாத்தானின் உலகம் பொருளாசையை முன்னேற்றுவிக்கிறது. மேலுமதிகமான உடைமைகளைச் சம்பாதிப்பதே அல்லது அவற்றைப் பாதுகாப்பதே லட்சக்கணக்கானோரின் வாழ்க்கைகளில் உந்தும் சக்தியாக உள்ளது. கவனத்தைச் சிதறடிக்கும் இவற்றைப்போன்ற காரியங்கள் இயேசுவின் நாளில் இருந்தன. செல்வந்தனான ஓர் இளம் அதிபதி, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு தான் என்ன செய்யவேண்டுமென இயேசுவைக் கேட்டான். இயேசு பதிலளித்ததாவது: “நீ பூரண [அல்லது, முழு] சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா.” (மத். 19:16-23) இவனுடைய பல பொருளுடைமைகள், கடவுளை முழு ஆத்துமாவோடும் சேவிப்பதிலிருந்து இந்த இளைஞனின் கவனத்தைச் சிதறடித்ததெனத் தோன்றுகிறது. அவனுடைய இருதயம் அவனுடைய ஐசுவரியங்களினிடமாகத் திரும்பினது. கவனத்தைச் சிதறடிக்கும் இந்தப் பொருட்களின் பாரத்தை அவன் நீக்கிவிட்டால் அந்த இளைஞனுக்கு நன்மையாயிருக்குமென இயேசு அறிந்திருந்தார். கடவுளுக்கு முழு பக்தியும் செலுத்துவதிலிருந்து அவை இவனைத் தடுத்தன. உங்களைப் பற்றியதென்ன? நீங்கள் பழக்கப்பட்டுள்ள வாழ்க்கை நடைமுறையைக் காத்துக்கொள்ள வேண்டுமென்ற வெறும் நோக்கத்திற்காக, வாழ்க்கைச் சம்பாத்திய வேலைகளில் நீண்டநேரம் உழைப்பவராக உங்களைக் காண்கிறீர்களா? யெகோவாவுக்குச் செய்யும் உங்கள் சேவையை இது பாதித்திருக்கிறதா? இராஜ்ய அக்கறைகளுக்கு நேரமிராதபடி உங்கள் பொருளுடைமைகள் செய்கின்றனவா? (மத். 6:24) ஆவிக்குரிய அக்கறைகளுக்கு மேலுமதிக நேரத்தைச் செலவிடும்படி உங்கள் வாழ்க்கையை நீங்கள் எளிதாக்கக்கூடுமா?
5 அன்றாட வாழ்க்கையின் சாதாரண விவகாரங்கள்: நாம் கவனமாக இராவிடில் வாழ்க்கையின் சாதாரண விவகாரங்களில் அவ்வளவு அதிகமாய் மூழ்கியவராவதால் ஆவிக்குரிய காரியங்களைக் கவனியாது நெகிழவிடத் தொடங்குவோம். நோவாவின் நாட்களிலிருந்த ஜனங்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் சமுதாய விவகாரங்களிலும், சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் மணம் செய்வதிலும் தங்கள் பிள்ளைகளை மணம்செய்து கொடுப்பதிலும் மூழ்கியிருந்ததால், வரவிருந்த ஜலப்பிரளயத்தைப்பற்றிய நோவாவின் எச்சரிக்கை செய்திக்குக் கவனத்தைச் செலுத்தவில்லை. அவர்கள் உணருவதற்கு முன்பாக, ஜலப்பிரளயம் வந்து அவர்கள் எல்லாரையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. மனதை மற்றக் காரியங்களில் திரும்பவிடச் செய்தது அவர்களுக்கு அழிவைக் குறித்தது. இயேசு சொன்னதாவது: “அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.” (மத். 24:37-39) நிச்சயமாகவே, இன்று பெரும்பான்மையான ஜனங்கள், நாம் அவர்களுக்குக் கொண்டுசெல்லும் எச்சரிப்புச் செய்திக்குக் கவனம் செலுத்துவதற்கு மனமில்லாமல் தங்கள் சொந்த வாழ்க்கைகளில் மட்டுக்குமீறிய முறையில் மூழ்கியுள்ளனர். ஆவிக்குரிய காரியங்களுக்கு திடுக்கிடச் செய்யும் அக்கறையற்றத் தன்மையைக் காட்டுகின்றனர்.
6 பொழுதுபோக்கு கூட்டுறவு நடவடிக்கைகளால் உங்கள் வாழ்க்கை அவ்வளவு நெருக்கப்பட்டிருப்பதால் ஆவிக்குரிய காரியங்கள் மேலும் மேலும் குறைந்த கவனத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனவா? ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு, மார்த்தாளும் மரியாளும் இருந்த வீட்டிற்கு விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார். மரியாள் அவர் சொல்வதை ஊக்கமாய்ச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். மறுபட்சத்தில், மார்த்தாள் ‘பல வேலைகளைச் செய்வதில் மனதைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.’ நல்ல உபசரணை செய்பவளாக இருப்பதைப் பற்றியதில் மார்த்தாள் மீறிய அக்கறையைக் கொண்டிருந்தாள். இயேசுவுக்குச் செவிகொடுத்துக் கேட்பதற்கு நேரமெடுக்க வேண்டிய தேவையை அவள் மதித்துணரத் தவறினாள். பெரும்படியான உணவுப்பொருட்கள் தேவையில்லை என்பதை அவர் மார்த்தாளுக்குத் தயவாய்க் குறிப்பிட்டுக் காட்டினார்; ஆவிக்குரிய காரியங்களுக்கே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நீங்கள் இந்த அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்த வேண்டியதாக உள்ளதா? (லூக். 10:38-42) நாம் மட்டுக்கு மீறி சாப்பிட்டும் குடித்தும் நம் உணர்வுகளை மந்தமாக்காதபடி நமக்கு நாம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இயேசு எச்சரித்தார். மனித சரித்திரத்தின் இந்தத் திரும்புகட்ட நேரத்தில், நாம் முற்றிலும் விழிப்புடையோராக இருப்பது அவசியம்.—லூக். 21:34-36.
7 இன்பங்களை நாடித்தொடருதல்: இராஜ்ய விவாதத்திலிருந்து கவனத்தைத் தூர விலக்கச் செய்யும்படி கவர்ந்திழுப்பதற்குச் சாத்தான் பயன்படுத்துகிற மிகப் பெரிய கவனமாற்று சூழ்ச்சிகளில் ஒன்று இன்பத்தை நாடித்தொடரச் செய்வதாகும். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள லட்சக்கணக்கானோர் கடவுளுக்குரிய இடத்தில் இன்பத்தை வைத்துள்ளனர். கடவுளுடைய வார்த்தையில் கருத்தார்ந்த அக்கறையைச் செலுத்துவதைப் பார்க்கிலும் வேறு ஏதாவதொன்றில் இன்பமூட்டப்படுவதையே விரும்பித் தெரிந்துகொள்கின்றனர். (2 தீ. 3:4) நிச்சயமாகவே, ஆரோக்கியமான விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு அவற்றில்தாமே தவறானவையாக இல்லை. ஆனால், தொலைக்காட்சி, திரைப்படங்கள், வீடியோக்கள், போட்டிவிளையாட்டுக்கள், உலகப்பிரகாரமான புத்தக வாசிப்பு, அல்லது ஓய்வுநேர விருப்பத் தொழில்கள் போன்றவற்றில் வாரந்தோறும் மட்டுக்கு மீறிய நேரம் செலவிடுவது, திருக்குள்ள ஓர் இருதயத்தை வளரச் செய்து நம்மை யெகோவாவிடமிருந்து தூர விலகும்படி இழுக்கக்கூடும். (எரே. 17:9; எபி. 3:12) இது எவ்வாறு நேரிடும்? கிறிஸ்தவக் கூட்டங்களின்போது, உங்கள் மனம் அலைவதாகக் காண்பீர்கள்; இன்பங்களை நாடித்தொடருவதற்குத் திரும்பப் போய்ச் சேரும்படி கூட்டம் சீக்கிரம் முடிவடையும்படியுங்கூட நீங்கள் விரும்புவீர்கள். கூட்டங்களுக்கு ஆஜராவதை அல்லது வெளி ஊழியத்தில் ஈடுபடுவதைப் பார்க்கிலும் வீட்டில் தங்கியிருப்பதையே மேலாக நாடி, அதற்காகக் காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பவராக நீங்கள் சீக்கிரத்தில் உங்களைக் காணக்கூடும். நாடித்தொடரும் இந்தக் காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் கவனத்தைச் சிதறடிக்கும் இடையூறுகளாகியிருந்தால் திட்டமாய்த் தீர்மானிப்பதற்கு இப்போதே காலமாயுள்ளது. (லூக். 8:14) பொழுதுபோக்கு எடுத்துக்கொள்ளும் மதிப்புமிகுந்த இந்த மணிநேரங்களில் சிலவற்றை ஆவிக்குரிய முன்னேற்றத்துக்காக மேம்பட்ட முறையில் பயன்படுத்தலாமல்லவா?
8 நேரத்தை வீணாக்கும் மற்றப் பிரச்னைகள்: நவீன சமுதாயத்தில் பொதுவானப் பிரச்னைகளைத் தீர்க்கும்படியான முயற்சிகளில் சிலர் சிக்கிக்கொண்டிருக்கின்றனர். சமுதாயப் பிரச்னைகளின்பேரில், இந்த உலகத்தின் முடிவற்ற வாக்குவாதங்களில் அல்லது அநீதிகளைத் திருத்துவதற்கான அதன் வீணானப் போராட்டங்களில் உட்படுவதைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். (யோவா. 17:16) பைபிளின் அறிவுரையிலிருந்தும், கடவுளுடைய ராஜ்யமாகிய இந்த ஒரே நீடித்தத் தீர்வே உள்ளதென்ற இந்த முக்கிய உண்மையிலிருந்தும் கவனத்தைச் சிதறும்படி இதெல்லாம் சாத்தானுடைய சதித்திட்டத்தின் பாகமாயிருக்கிறது. தனிப்பட்டவராக நாம் தீங்கையோ அநீதியையோ அனுபவித்திருந்தால், நாம் யெகோவாவின் சாட்சிகள் என்பதை மறந்துவிடுமளவாக, நம்மைச் சரியெனக் காட்டுவோராக அல்லது உணர்ச்சிவசமாய் மனக்கொந்தளிப்படைவோராக மாறுவதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவுக்கே தவறு செய்யப்பட்டுள்ளது, அவருடைய பெயரையே நாம் பரிசுத்தப்படுத்த வேண்டும்.—ஏசா. 43:10-12; மத். 6:9.
9 ஓரளவு நல்ல சுகாரோக்கியத்தைக் காத்துவைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகையில், அளிக்கப்படும் முடிவற்றதாகத் தோன்றும் கருத்துக்கூறுகளுக்கும் பரிகாரங்களுக்கும் உடல்நலக் காரியங்களில் வெறிகண்ட முறையில் மூழ்கியிருக்கும்படி ஒருவரைச் செய்யக்கூடும். உடல்நல மற்றும் உணர்ச்சிவசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு விரிவான பல்வேறு திட்ட உணவுகளையும் சிகிச்சைகளையும் நோய்நீக்கல் முறைகளையும் சிபாரிசுசெய்யும் ஆட்கள் எத்தனையோ பலர் உள்ளனர், இவற்றில் பல ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. உடல்நலக் காரியங்களில் ஒருவர் செய்வது, பைபிள் நியமங்களுக்கு முரணாக இல்லாத வரையில், அவரவருக்குரிய தனிப்பட்ட தீர்மானமாகும். மனிதவர்க்கத்தின் நோய்களுக்கு உண்மையான பரிகாரமாகக் கடவுளுடைய ராஜ்யத்தில் நம் முழு நம்பிக்கையை எப்பொழுதும் காத்துவருவோமாக.—ஏசா. 33:24; வெளி. 21:3, 4.
10 உறுதியுள்ளோராயும் அசைக்கக்கூடாதவராயும் ஆகுங்கள்: முடிவு நெருங்கி வருகையில், யெகோவாவுக்குச் செய்யும் உங்கள் சேவையிலிருந்து உங்களைத் திருப்பிவிடுவதற்கானத் தன் முயற்சிகளைச் சாத்தான் அதிகரிப்பான். “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.” (1 பே. 5:9) எவ்வாறு? கடவுளுடைய எண்ணங்களைக் கொண்டு உங்களை நீங்கள் போஷிக்க வேண்டும். (மத். 4:4) கடவுளுடைய வார்த்தையின்பேரில் தியானித்து திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவர உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தை இந்த உலகத்தின் கவர்ச்சிகள் உங்களிடமிருந்தும் உங்கள் குடும்பத்திடமிருந்தும் பறித்துச் செல்ல அனுமதியாதீர்கள். குடும்ப சாப்பாட்டு வேளைகளில், கட்டியெழுப்பும் அனுபவங்களையும் மற்ற ஆவிக்குரிய காரியங்களையும் ஒன்றுசேர்ந்து கலந்தாலோசியுங்கள். தனிப்பட்ட படிப்புகளுக்கும் கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்கும் நிலையான ஒரு திட்டத்தை விடாமல் கடைப்பிடியுங்கள்.
11 உங்கள் மனதின் அமைதியைக் கெடுக்கும்படி கவலைகள் பயமுறுத்துகையில் ஜெபத்தில் உங்கள் சுமையை யெகோவாவின்மீது போட்டுவிடுங்கள். அவர் உங்களைக் கவனித்து ஆதரிக்கிறாரென்று உறுதியாயிருங்கள். (1 பே. 5:7) கடவுளுடைய சமாதானம் உங்கள் இருதயத்தையும் மன சக்திகளையும் பாதுகாக்க விடுங்கள். (பிலி. 4:6, 7) கவனத்தைச் சிதறடிப்பவை உங்கள் ஆவிக்குரிய பார்வையை மங்கலாக்க விடாதீர்கள். இயேசு செய்ததைப்போல், யெகோவாவை உங்கள் முன் இடைவிடாமல் வைத்திருங்கள். (அப். 2:25) நீதிமொழிகள் 4:25-27 ஊக்குவிக்கிறபடி, உங்கள் பார்வையை உங்கள் இலக்கின்மீது முன்னாக, நேரே ஒருமுகப்படுத்துங்கள்: “உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது. உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே. உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.”
12 எல்லா கூட்டங்களுக்கும் உண்மையுடன் ஆஜராகுங்கள், கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் போதனைக்குக் கவனம் செலுத்தும்படி உங்களைக் கட்டுப்படுத்துங்கள். (எபி. 2:1; 10:24, 25) இந்தச் சீர்கெட்ட உலகம் அளிக்க முன்வரும் இன்பங்களுக்காக நோக்குவதைப் பார்க்கிலும் பலன்தரும் ஊழியத்தைக் காத்துவருவதை உங்கள் இலக்காக்குங்கள். இதுவே நிலையான மகிழ்ச்சியையும் மனத்திருப்தியையும் கொண்டுவருகிறது. (1 தெ. 2:19, 20) கடைசியாக, உங்கள் பரிசுத்த சேவையிலிருந்து உங்களை வேறுபுறமாகத் திருப்ப எதையும் அல்லது எவரையும் அனுமதியாதீர்கள். “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”—1 கொ. 15:58.