கவனச்சிதறல்களைத் தவிர்த்து, நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்கிறோமா?
1 இயேசு பின்வரும் ஓர் எச்சரிக்கையைக் கொடுத்தார்: நிச்சயமாக வரவிருக்கும் பேரிடரிலிருந்து ‘தப்ப விழித்திருங்கள்.’ (லூக். 21:36) நாம் மனித சரித்திரத்திலேயே அதிக ஆபத்தான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆவிக்குரிய மந்தநிலைக்கு ஆளாகுபவர்களுக்கு அழிவு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த மனநிலை நம் ஒவ்வொருவருக்கும் ஆபத்தைக் குறிக்கிறது. சாப்பிடுதல், குடித்தல், அன்றாடக வாழ்க்கையின் கவலை ஆகியவற்றைப் பற்றி இயேசு குறிப்பிட்டார். ஏன் குறிப்பிட்டார்? ஏனெனில் இக்காரியங்கள்கூட நம் உள்ளத்தை அவற்றில் முழுவதுமாக ஈடுபடுத்தி, கவனச்சிதறல்களாக மாறி, ஆபத்தான ஆவிக்குரிய மந்தநிலையை தூண்டுவிக்கலாம்.
2 பொதுவான கவனச்சிதறல்கள்: சிலர் அதிகப்படியான அல்லது கேள்விக்குரிய இன்பப் பொழுதுபோக்குகளில் முழுவதும் ஈடுபடுபவர்களாக மாறி, டிவி-க்கு அடிமையாக மாறும் அளவுக்குக்கூட ஆகிவிட்டிருக்கின்றனர். உண்மையில், ராஜ்யத்தை முதலாவது தேடுதல் என்பது நாம் எல்லா வகையான இன்பப் பொழுதுபோக்குகளையும் தவிர்க்கவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. நாம் நியாயத்தன்மையை உபயோகித்து மிதமாக இருக்கையில் இன்பப் பொழுதுபோக்கு பயனளிப்பதாய் இருக்கலாம். (1 தீமோத்தேயு 4:8-ஐ ஒப்பிடுக.) ஆனால் நம்முடைய வாழ்க்கையின் மிக முக்கியமான பாகமாக மாறி, நம்முடைய அதிகப்படியான நேரத்தை, நம்முடைய வள ஆதாரங்களை, அல்லது ராஜ்ய பிரசங்க வேலையில் நம்முடைய பங்கை எடுத்துக்கொள்கையில், இது கவனச்சிதறலாகிறது.
3 தேவையற்ற பொருள் சம்பந்தமான காரியங்களுக்கான ஆசை ஆவிக்குரிய மந்தத்தை ஏற்படுத்துவதற்கான மற்றொரு பொதுவான கவனச்சிதறலாக இருக்கிறது. இது ஒருவர் உலகப்பிரகாரமான வேலையில் அதிக நேரம் செலவழிப்பதை தேவைப்படுத்துகிறது, எனவே ஆவிக்குரிய குறிக்கோள்களிலிருந்து விலகிச்செல்ல வைக்கிறது. அதிக சொகுசான வாழ்க்கை நிலையை அடைய முயன்று, பொருள் சம்பந்தமான காரியங்களைப் பெறுவதற்கு நேரம் முழுவதையும் எடுத்துக்கொள்பவர்களாக மாறுவதன்மூலம் சிலர் ஆவிக்குரிய இலக்குகளை காணாதவர்களாக இருந்திருக்கின்றனர். “உண்ணவும் உடுக்கவும்” நமக்குத் தேவையிருக்கிறபோதிலும் பண ஆசையை வளர்த்துக்கொள்வதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்; இது நம்மை விசுவாசத்தை விட்டு விலகிச்செல்ல செய்யலாம். (1 தீ. 6:8-10) ராஜ்ய அக்கறைகளிடமாக நம்முடைய கண்களை ஒருமுகப்படுத்த தவறுவதன்மூலம் நம்முடைய குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளை கவனிப்பதில் உறுதியற்றவர்களாகவும் நம்முடைய ஊழியத்தை நிறைவேற்றத் தவறுகிறவர்களாகவும் மாறிவிடலாம்.—1 தீ. 5:8; 2 தீ. 4:5.
4 இன்னும் சிலர் ஆவிக்குரிய விதமாக தூக்கத்தில் ஆழ்ந்துவிடும் அளவுக்கு தங்கள் ‘இருதயம் லவுகீக கவலைகளினால் பாரமடைய’ அனுமதிக்கின்றனர். (லூக். 21:34) சில சமயங்களில் உடல்நலப் பிரச்சினைகளினாலோ குடும்பத்தின் அழுத்த நிலைமைகளினாலோ கவலைப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அத்தகைய சொந்த அக்கறைகள் விரைந்து வந்துகொண்டிருக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் குறித்த விழிப்புணர்வைக் குறைத்துப்போட அனுமதிக்கக்கூடாது.—மாற். 13:33.
5 நம்மை கனவுலகில் சஞ்சரிக்க வைத்து, ஏதோ உலகியல் சார்ந்த கற்பனைகளைப் பின்தொடரச் செய்வதில் வெற்றியடைவதல்லாமல், வேறெதுவும் பிசாசை சந்தோஷமடையச் செய்யாது. நாம் ஆவிக்குரிய விதமாக தொடர்ந்து விழிப்புள்ளவர்களாக இருக்க போராட வேண்டும். ‘இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று’ நாம் அறிந்திருப்பதால் ‘விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்க’ வேண்டியது அவசியம். (1 தெ. 5:2, 6) நம்மில்தாமே மந்தநிலையின் அறிகுறிகளைக் கண்டால் “அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளி”விடவேண்டியது அவசரமானதாயிருக்கிறது.—ரோ. 13:11-13.
6 நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்க உதவும் காரியங்கள்: அத்தகைய காரியங்கள் யாவை? ஜெபம் அவசியம். நாம் இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும். (1 தெ. 5:17) கிறிஸ்தவ சபையுடன் நெருங்கியிருப்பது ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி’ செய்யும். (எபி. 10:24) ஒழுங்கான, நேர்மையான முறையில், நம்மைநாமே சோதித்துக்கொள்ளுதல் பலவீனத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்க உதவிசெய்யும். (2 கொ. 13:5) நல்ல தனிப்பட்ட படிப்புப் பழக்கங்கள் ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளில் தேறியிருக்கச்’ செய்யும். (1 தீ. 4:6) நாம் ஊக்கந்தளராதவர்களாய், ‘விழிப்புடனும் விசுவாசத்தில் நிலைத்தும்’ இருந்தால் கவனச்சிதறல்களை நம்மால் தவிர்க்கமுடியும் என உறுதியுடனிருக்கலாம்.—1 கொ. 16:13.