“ஆயத்தமாயிருங்கள்”
1 இந்த ஒழுங்குமுறையின் முடிவு பற்றிய முக்கியமான தீர்க்கதரிசனத்தை இயேசு சொன்னபோது வாழ்க்கையின் அன்றாட கவலைகளில் மூழ்கிவிடாதிருக்கும்படி எச்சரித்தார். (மத். 24:36-39; லூக். 21:34, 35) எந்த நிமிடமும் மிகுந்த உபத்திரவம் வரலாம் என்பதால் இயேசுவின் பின்வரும் புத்திமதிக்கு செவிசாய்ப்பது மிக முக்கியம்: “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” (மத். 24:44) இப்படி ஆயத்தமாயிருக்க எது நமக்கு உதவும்?
2 கவலைகளையும் கவனச் சிதறல்களையும் எதிர்த்துப் போராடுதல்: நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ஆவிக்குரிய படுகுழிகளில் ஒன்று ‘லவுகீக கவலைகள்’ ஆகும். (லூக். 21:34) சில நாடுகளில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி வேகமாக உயருதல் ஆகியவை அடிப்படை வசதிகளைப் பெறுவதையே கஷ்டமாக்கிவிடுகின்றன. இன்னும் சில நாடுகளில் சொத்து சுகங்களை சேர்ப்பது சர்வசாதாரணமான விஷயம். பொருளாதார காரியங்களுக்காக அதிகம் கவலைப்பட ஆரம்பித்தால் ராஜ்ய மெய்மைகளின் மீதுள்ள கவனம் சிதறிவிடும் ஆபத்துள்ளது. (மத். 6:19-24, 31-33) கவனத்தை சிதறவிடாதிருக்க கிறிஸ்தவ கூட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எந்தக் கூட்டத்தையும் தவறவிடாதிருப்பதை உங்கள் இலக்காக ஆக்கியிருக்கிறீர்களா?—எபி. 10:24, 25.
3 இன்றைய உலகில் நம்முடைய பொன்னான நேரத்தை எளிதில் அபகரித்துக் கொள்ளும் கவனச் சிதறல்கள் ஏராளம் உள்ளன. இன்டர்நெட்டில் ‘பிரௌசிங்’ செய்வதற்கும், ஈ-மெயில் வாசிப்பதற்கும், அனுப்புவதற்கும் அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸ்களை விளையாடுவதற்கும் கம்ப்யூட்டரில் எக்கச்சக்கமான நேரத்தை செலவழித்தால் அதுவே கண்ணியாக மாறிவிடும். டிவி, சினிமா, ‘ஹாபிகள்,’ பிற புத்தகங்களைப் படிப்பது, விளையாட்டு போன்றவற்றில் கணக்குவழக்கில்லாமல் நேரத்தை விரயமாக்கினால் ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபட சிறிதளவு நேரமே அல்லது சக்தியே மிஞ்சும். பொழுதுபோக்கும் ஓய்வும் தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கின்றன; தனிப்பட்ட மற்றும் குடும்ப பைபிள் படிப்போ நிரந்தர பலன்களைக் கொடுக்கின்றன. (1 தீ. 4:7, 8) ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வார்த்தையை தியானிக்க நேரத்தை வாங்குகிறீர்களா?—எபே. 5:15-17, NW.
4 ‘இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு’ யெகோவாவின் அமைப்பு ஆவிக்குரிய அறிவுரைகளை வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! (லூக். 21:36) ‘இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாவதற்கு’ நம்முடைய விசுவாசம் காரணமாக இருக்கும்படி, இந்த ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு ‘ஆயத்தமாயிருப்போமாக.’—1 பே. 1:7.