பாராட்டு புத்துணர்ச்சியூட்டுகிறது
1 “நான் இன்னிக்கு நல்ல பிள்ளையா நடந்துக்கலையா?” இரவு படுக்கைக்கு சென்ற சிறுமி தேம்பியவாறே கேட்டாள். இந்தக் கேள்வி அவளுடைய அம்மாவை திடுக்கிட வைத்தது. அன்றைக்கு அவள் குறும்பு செய்யாமல் சமர்த்தாக நடந்துகொள்ள கடினமாக முயன்றதைப் பார்த்தும் அவளுடைய அம்மா வாய் திறந்து அவளை பாராட்டி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அந்த சிறுமி சிந்திய கண்ணீர், சிறியோர் பெரியோர் என்றில்லாமல் எல்லாருக்கும் பாராட்டு தேவை என்பதற்கு நினைப்பூட்டுதலாக அமைய வேண்டும். நம்மை சுற்றியிருப்பவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்காக அவர்களைப் பாராட்டுவதன் மூலம் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறோமா?—நீதி. 25:11.
2 சக கிறிஸ்தவர்களை நாம் பாராட்ட அநேக நல்ல காரணங்கள் உள்ளன. மூப்பர்கள், உதவி ஊழியர்கள், பயனியர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறார்கள். (1 தீ. 4:10; 5:17) கடவுள் பயமுள்ள பெற்றோர் யெகோவாவின் வழிகளில் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெரிதும் பாடுபடுகிறார்கள். (எபே. 6:4) “உலகத்தின் ஆவியை” எதிர்ப்பதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் கடினமாய் போராடுகிறார்கள். (1 கொ. 2:12; எபே. 2:1-3) இன்னும் சிலரோ, முதுமை, சுகவீனங்கள், அல்லது பிற பிரச்சினைகளின் மத்தியிலும் உண்மையுடன் யெகோவாவை சேவிக்கிறார்கள். (2 கொ. 12:7) இவர்கள் அனைவரும் நம் பாராட்டுக்கு உரியவர்கள். அவர்களது மெச்சத்தக்க முயற்சிகளை நாம் போற்றுகிறோமா?
3 தனிப்பட்ட விதத்திலும் குறிப்பாகவும்: மேடையிலிருந்து பாராட்டைப் பெறுகையில் நாம் அனைவரும் உண்மையிலேயே உச்சிகுளிர்ந்து போகிறோம். எனினும் தனிப்பட்ட விதமாக பாராட்டைப் பெறும்போதோ இன்னும் அதிக புத்துணர்ச்சி கிடைக்கும். உதாரணமாக, ரோமருக்கு பவுல் எழுதிய கடிதத்தில் 16-ம் அதிகாரத்தில் பெபேயாள், பிரிஸ்கில்லாள், ஆக்கில்லா, திரிபேனாள், திரிபோசாள், பெர்சியாள் போன்ற அநேகரை அவர் குறிப்பாக பெயர் சொல்லி பாராட்டினார். (ரோ. 16:1-4, 12) அவர் சொன்னவை அந்த விசுவாசிகளுக்கு எப்பேர்ப்பட்ட புத்துணர்ச்சி அளித்திருக்கும்! இத்தகைய பாராட்டு, நம் சகோதர சகோதரிகள் நமக்குத் தேவை என்பதை உறுதியளிக்கிறது, அத்துடன் ஒருவருக்கொருவர் நெருங்கி வர உதவுகிறது. சமீபத்தில் யாரையாவது தனிப்பட்ட விதத்தில் நீங்கள் பாராட்டினீர்களா?—எபே. 4:29.
4 இருதயத்திலிருந்து: உண்மையான புத்துணர்ச்சிக்கு உள்ளப்பூர்வமான பாராட்டு தேவை. உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாராட்டுகிறோமா அல்லது வெறுமனே ‘முகப்புகழ்ச்சி செய்கிறோமா’ என்பதை ஜனங்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். (நீதி. 28:23, பொ.மொ.) மற்றவர்களிடம் நல்லதை பார்ப்பதற்கு நம்மை பயிற்றுவித்துக் கொண்டால் நம் இருதயம் பாராட்டு தெரிவிக்க தூண்டப்படும். “ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” என்பதை அறிந்து, உள்ளப்பூர்வமான பாராட்டை தாராளமாக வழங்குவோமாக.—நீதி. 15:23.