பாராட்டத் தவறாதீர்கள்
‘எ ன்னுடைய முதலாளி என்னை பாராட்டவே மாட்டார்’ என்று யாராவது புலம்புவதைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்களும் அப்படி எப்போதாவது புலம்பியிருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் ஓர் இளைஞராக இருந்தால் உங்கள் பெற்றோரோ ஆசிரியரோ உங்களைப் பாராட்டுவதே இல்லை என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?
இப்படிப் புலம்புவதற்குச் சில சமயங்களில் நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஜெர்மன் நிபுணர் ஒருவர் சொல்கிறபடி, தங்கள் முதலாளிகள் தங்களைப் பாராட்டுவதில்லை என்பதைவிட, தங்கள்மீது அக்கறை காட்டுவதில்லை என்பதற்காகவே தொழிலாளிகள் பெரும்பாலும் வருத்தப்படுகிறார்கள். எப்படியும், ஏதோவொன்றில் குறைவு இருப்பது மட்டும் தெளிவாக உள்ளது. ஆனால், பரஸ்பர உறவை அனுபவித்து மகிழ பாராட்டுவதோடு தனிப்பட்ட அக்கறையையும் காட்ட வேண்டும். ஏனென்றால், இவை இரண்டுமே இன்றியமையாதவை.
வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் இதுவே உண்மை. கிறிஸ்தவ சபையில் ஒருவரையொருவர் பாராட்டி, எல்லாரிடமும் அன்புடன் பழகி, தனிப்பட்ட அக்கறை காட்டும் சூழல் நிலவுவது மற்றவர்களுக்குப் பளிச்சென தெரிய வேண்டும். சபையிலுள்ளவர்கள் பைபிளின் நியமங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். அதனாலேயே அவர்களால் இப்படிப்பட்ட அருமையான சூழலை உருவாக்கி, அதைக் காத்துக்கொள்ள முடிகிறது. நம்முடைய சபையில் அன்புக்குப் பஞ்சமே இல்லையென்றாலும், முன்னேற்றத்திற்கு முடிவே இல்லை. இதை நினைவில் வைத்துக்கொண்டு, பாராட்டுவதில் சிறந்த முன்மாதிரியாய் திகழ்ந்த மூன்று பேருடைய உதாரணங்களைச் சிந்திக்கலாம். கிறிஸ்தவ சபை பிறப்பதற்கு முன் வாழ்ந்த கடவுளுடைய ஊழியனான எலிகூ, அப்போஸ்தலன் பவுல், ஏன், இயேசுவும்கூட இதற்கு சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்.
தயவுடனும் மரியாதையுடனும் கொடுக்கப்பட்ட ஆலோசனை
யோபு, கடவுளோடு வைத்திருந்த பந்தத்தைக் குறித்து சமநிலையான கண்ணோட்டத்தைப் பெற எலிகூ மிகவும் உதவியாக இருந்தார். ஆபிரகாமின் தூரத்துச் சொந்தமாகக் கருதப்படும் இவர், யோபுவிடம் தயவையும் மரியாதையையும் காட்டினார். தான் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தார். யோபுவின் போலி நண்பர்கள் அவருடைய குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டினார்கள். மறுபட்சத்தில் எலிகூ வெறுமனே ஆலோசனை மட்டும் கூறாமல், யோபுவின் நீதியுள்ள நடத்தைக்காக அவரை அன்புடன் பாராட்டவும் செய்தார். யோபுவின் மற்ற நண்பர்களைப்போல் அல்லாமல் எலிகூ அவரைப் பெயர் சொல்லி அழைத்தார். இதிலிருந்து எலிகூ யோபுவிடம் ஒரு நண்பனைப் போல் தனிப்பட்ட அக்கறை காட்டியது தெரியவருகிறது. “யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்” என்று எலிகூ தயவுடன் கேட்டுக்கொண்டார். தன்னை யோபுவின் இடத்தில் வைத்து மரியாதைக்குரிய விதத்தில் இப்படியாகக் கூறினார்: “இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.” அவ்வாறு சொன்னபின், அவரைப் பாராட்டும்விதத்தில், “சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறு உத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு” என்றார்.—யோபு 33:1, 6, 32.
மற்றவர்களிடம் தயவுகாட்டி அவர்களை மரியாதையுடன் நடத்துவது ஒரு விதத்தில் அவர்களைப் பாராட்டுவதற்கு இணையாக இருக்கிறது. இப்படிச் செய்கையில், நாம் அந்த நபரிடம், ‘உங்களிடம் உண்மையிலேயே நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன, அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது’ என்று சொல்லாமல் சொல்கிறோம். இதன்மூலம், நாம் அந்த நபரை நேசிக்கிறோம் என்பதையும் அவர்மீது நமக்கு அக்கறை இருக்கிறது என்பதையும் காட்டுகிறோம்.
தயவுடன் நடந்துகொள்வது என்று சொல்கையில் வெறுமனே பாங்கான, பண்பான நடத்தையை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக நாம் காட்டும் தயவு மற்றவர்களுடைய மனதைத் தொட வேண்டுமென்றால் அது உண்மையாகவும் உள்ளப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். அவர்கள்மீது நமக்கு உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதை அது தெரிவிக்க வேண்டும்.
பாராட்டுவதன்மூலம் சாதுரியமாக நடந்துகொள்ளுதல்
மற்றவர்களைப் பாராட்டுவது, சாதுரியமாக நடந்துகொள்வதற்கு அடையாளமாய் இருக்கிறதென அப்போஸ்தலன் பவுல் எடுத்துக்காட்டினார். உதாரணத்திற்கு, தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது அவர் அத்தேனே பட்டணத்தில் பிரசங்கிக்கையில் கிரேக்க தத்துவமேதைகள் சிலருக்கு முன் கிறிஸ்தவத்தை ஆதரித்துப் பேசினார். சவாலான இந்தச் சூழ்நிலையை அவர் எவ்வாறு பக்குவமாகச் சமாளித்தார் என்பதைக் கவனியுங்கள். “எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள்.” (அப்போஸ்தலர் 17:18) இவர்கள் இப்படி ஏளனமாய்ப் பேசினபோதிலும் பவுல் கோபப்படாமல் சாந்தமாக இவ்வாறு பதிலளித்தார்: “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதா பக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.” அவர்களுடைய சிலை வழிபாட்டை கண்டிப்பதற்குப் பதிலாக அவர்கள் தேவ பக்தியுள்ளவர்களாய் இருப்பதற்காகப் பாராட்டினார்.—அப்போஸ்தலர் 17:22.
பவுல் முகஸ்துதிக்காக அப்படி சொன்னாரா? நிச்சயம் இல்லை. தனக்குச் செவிகொடுத்துக் கேட்பவர்களை நியாயந்தீர்க்க வேண்டியது தன் வேலை அல்ல என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல, தானும் ஒரு காலத்தில் சத்தியத்தை அறியாதிருந்ததை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். தன்னுடைய வேலை, மற்றவர்களை நியாயந்தீர்ப்பது அல்ல மாறாக கடவுளுடைய செய்தியை அவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டியதே என்பதை அவர் புரிந்திருந்தார். இன்று யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் கண்ணாரக் கண்டிருக்கும் உண்மையே, இவருடைய சொந்த அனுபவமாகவும் இருக்கிறது. அது என்னவெனில், பொய் மதத்தை நேர்மை மனதுடன் ஆதரித்துவந்த சிலர் காலப்போக்கில் உண்மை மதத்தை பலமாய் ஆதரிப்பவர்களாய் மாறியிருக்கிறார்கள்.
பவுலின் அணுகுமுறை மனதைத் தொடும் விதத்தில் இருந்தது, நல்ல பலன்களையும் அளித்தது. எப்படியெனில், ‘சிலர் அவரைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.’ (அப்போஸ்தலர் 17:34) அத்தேனியர்களுடைய நம்பிக்கை பொய்யாக இருந்தபோதிலும் பவுல் அவர்களைத் திருத்தமான அறிவு இல்லாததற்காகக் கண்டிக்காமல் அவர்களுடைய உள்ளார்ந்த விசுவாசத்தைப் பாராட்டியது எவ்வளவு ஞானமானச் செயல்! பொய் போதனைகளால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் நல்மனம் படைத்தவர்களாய் இருக்கிறார்கள்.
இரண்டாம் ஏரோது அகிரிப்பாவிடம் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக பவுல் அழைக்கப்பட்டபோதும் அவர் நயமாகப் பேசினார். ஏரோது தன்னுடைய தங்கையான பெர்னீக்கேயாளோடு முறை தகாத உறவு வைத்திருந்ததாக அறியப்பட்டார். இப்படிப்பட்ட உறவை கடவுளுடைய வார்த்தை கடுமையாகக் கண்டிக்கிறது. இருந்தாலும், பவுல் அவரைக் கண்டித்துப் பேசவில்லை. மாறாக, ஏரோதைப் பாராட்டுவதற்கு ஒரு நியாயமான காரணத்தை அவர் கண்டார். “அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக் குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்” என்று ஏரோதைப் பாராட்டினார்.—அப்போஸ்தலர் 26:1-3.
நாமும்கூட அதேபோல் மற்றவர்களிடம் சாதுரியமாக நடந்துகொள்வது எவ்வளவு ஞானமாக இருக்கும்! பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை, சக மாணவரை, சக பணியாளரைப் பாராட்டுவது நமக்கும் அவர்களுக்கும் இடையே சுமுகமான உறவை வளர்க்க உதவும். அவர்களும் நம்மிடத்தில் நன்றாக நடந்துகொள்வார்கள். மனதைத் தொடும் விதத்தில் நாம் உண்மையாகப் பாராட்டினால் என்ன பலன் கிடைக்கலாம்? நேர்மை உள்ளம் படைத்தவர்கள் தங்களுடைய தவறான நியாயவிவாதங்களையும் செயல்களையும் விட்டுவிட்டு திருத்தமான அறிவுக்கு ஏற்றபடி தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள சில சமயங்களில் நம்மால் ஊக்குவிக்க முடியும்.
பாராட்டுவதில் இயேசுவின் சிறந்த முன்மாதிரி
இயேசு மற்றவர்களைப் பாராட்டினார். உதாரணத்திற்கு, அவர் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குத் திரும்பிய பிறகு, கடவுளுடைய வழிநடத்துதலின்படி அப்போஸ்தலனாகிய யோவான்மூலம் ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளிடம் பேசினார். பாராட்டுக்குரியவர்களை அவர் பாராட்டத் தவறவில்லை. எபேசு, பெர்கமு, தியத்தீரா ஆகிய சபைகளுக்கு இப்படியாக எழுதினார்: “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும்,” “நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், . . . என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும்,” “உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.” கண்டிப்பான ஆலோசனை தேவைப்பட்ட சர்தை சபையிலும் பாராட்டுதலுக்கு உரிய சில நபர்கள் இருந்ததை இயேசு கவனித்தார். அவர்களைக் குறித்து அவர் இவ்வாறு கூறினார்: “ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.” (வெளிப்படுத்துதல் 2:2, 13, 19; 3:4) இயேசு என்னே ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார்!
நாம் இந்த விஷயத்தில் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். ஒருபோதும் சிலர் செய்த தவறுக்காக அனைவரையும் கண்டிக்கக்கூடாது. அதேபோல், தகுந்த பாராட்டுதலைக் கொடுக்காமல் வெறும் ஆலோசனையை மட்டும் கொடுக்கக்கூடாது. என்றாலும், கண்டிக்கும்போது மட்டுமே நாம் பாராட்டுதலை அளித்தால் சில வேளைகளில் அது செவிடர் காதில் சங்கு ஊதுவதுபோல் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. சாத்தியமான எல்லா சமயங்களிலும் தாராளமாகப் பாராட்டுங்கள்! அப்படிச் செய்து வந்தால், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கும்போது மற்றவர்கள் அதை உடனடியாக ஏற்றுக்கொள்வார்கள்.
சரியான பாராட்டுதலை அளிக்கும் மூப்பர்கள்
யெகோவாவின் சாட்சிகளின் ஐரோப்பிய கிளை அலுவலகம் ஒன்றில் சேவை செய்துவரும் கார்னீல்யா என்ற கிறிஸ்தவப் பெண்மணி, 1970-களின் ஆரம்ப வருடங்களில் பயணக் கண்காணி ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்வியை நினைவுகூருகிறார். தனிப்பட்ட படிப்பையும், பத்திரிகைகளை வாசிப்பதையும் ஒழுங்காக செய்ய முடிகிறதா என்று அந்தக் கண்காணி கேட்டதாக அந்தப் பெண்மணி கூறுகிறார். “என்னை நினைத்து எனக்கே கொஞ்சம் வெட்கமாய் இருந்தது” என்று அந்தப் பெண்மணி சொல்கிறார். தன்னால் எல்லா கட்டுரைகளையும் வாசிக்க முடிவதில்லை என்பதை அந்தச் சகோதரி ஒத்துக்கொண்டார். “இதைக் கேட்டு அவர் என்னை குறைகூறவில்லை. மாறாக நான் இந்தளவுக்காவது படிக்கிறேனே என்று என்னைப் பாராட்டினார். அவருடைய பாராட்டு என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தியது. அதுமுதல், ஒவ்வொரு இதழையும் ஒரு பக்கம் விடாமல் வாசிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இன்றுவரை வாசித்து வருகிறேன்” என்றார்.
ஐரோப்பிய கிளை அலுவலகம் ஒன்றில் சேவை செய்துவரும் ரே, தன்னுடைய பயனியர் ஊழியத்தின் முதல் நாளை இன்றும் நினைவில் வைத்திருக்கிறார். அவருடைய சபையின் நடத்தும் கண்காணிக்கு வேலை, வீடு, சபை என தலைக்குமேல் பொறுப்புகள். அன்று மாலை அவர் ராஜ்ய மன்றத்திற்குள் நுழைந்தவுடன் நேராக ரேயிடம் சென்று இவ்வாறு கேட்டார்: “உன் பயனியர் ஊழியத்தின் முதல் நாள் எப்படி இருந்தது?” அவர் இப்படிக் கேட்டு கிட்டத்தட்ட 60 வருடங்கள் உருண்டோடிவிட்டன, ரே இன்னமும் அந்த மூப்பர் அக்கறையாய் வந்து அப்படிக் கேட்டதை மறக்கவில்லை.
மற்றவர்களை நாம் கடமைக்குப் பாராட்டி புகழ் மழைப் பொழிவது நல்ல பலன்களைத் தராது. அதற்குப் பதிலாக அவர்கள் செய்த செயலுக்காக அன்பான, உள்ளார்ந்த பாராட்டுதலைத் தெரிவிக்கும்போது நினைத்துப் பார்க்காதளவு பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த இரண்டு உதாரணங்கள் காட்டுகின்றன. கிறிஸ்தவ சபையில் நம் சக விசுவாசிகளைப் பாராட்டுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, யெகோவாவைச் சேவிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதற்காக, நன்கு தயாரித்து வந்து பதில்கள் சொல்வதற்காக, மேடை ஏறி பேச்சுக் கொடுப்பதிலும் சபை கூட்டங்களில் நடிப்பு, பேட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்வதிலும் அவர்களுக்கு இருக்கும் பயத்தை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளுவதற்காக, பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் அவர்கள் வைராக்கியமாய் ஈடுபடுவதற்காக, ஆன்மீகக் காரியங்களையும் இலக்குகளையும் முதலிடத்தில் வைப்பதற்காக நாம் அவர்களைப் பாராட்டலாம். இவ்வாறு நாம் செய்கையில் நிறைய பலன்களை அடைவோம். அது நம்மைச் சந்தோஷப்படுத்துகிறது. நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருக்கவும் உதவுகிறது.—அப்போஸ்தலர் 20:35.
சபை மூப்பர்கள், சபையார் செய்யும் நற்காரியங்களுக்காக அவர்களைப் பாராட்டுவது நல்லது. ஆலோசனை தேவைப்படுகையில் அதை அவர்கள் அன்போடு அளிப்பார்கள். மறுபட்சத்தில், எதைச் செய்தாலும் அது நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கமாட்டார்கள், கொஞ்சம் அப்படி இப்படி ஆனாலும் அதை ஒரு பெரிய விஷயமாக ஆக்கமாட்டார்கள்.
எலிகூ காட்டிய மரியாதையையும் தயவையும், பவுலின் சாதுரியமான அணுகுமுறையையும், இயேசு காட்டிய கரிசனையையும் பின்பற்றுகிற கிறிஸ்தவ மூப்பர்கள் தங்களுடைய சபையிலுள்ள சகோதரர்களுக்கு உண்மையான உற்சாக ஊற்றாக இருப்பார்கள். பாராட்டுவது ஒருவரை இன்னும் முன்னேறுவதற்கு உற்சாகப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல சந்தோஷமான, பரஸ்பர நட்புறவையும் வளர்க்கிறது. இயேசு முழுக்காட்டுதல் எடுத்தபோது தம்முடைய பரலோகத் தகப்பன், “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று தம்மைப் பாராட்டியதைக் கேட்டு எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! (மாற்கு 1:11) நாமும் நம் சகோதரர்களை அர்த்தமுள்ள வார்த்தைகளால் மனதார பாராட்டுவதன்மூலம் அவர்களைச் சந்தோஷப்படுத்துவோமாக.
[பக்கம் 15-ன் படங்கள்]
சாதுரியமான அணுகுமுறை பவுலுக்கு நல்ல பலன்களைத் தேடித்தந்தது. நமக்கும் அதே பலன்கள் கிடைக்கலாம்
[பக்கம் 16-ன் படம்]
பாசத்துடனும் உள்ளப்பூர்வமாகவும் பாராட்டுகையில் அது நல்ல பலன்களை அளிக்கும்