உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 7/12 பக். 20-21
  • ஏன் பாராட்ட வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் பாராட்ட வேண்டும்?
  • விழித்தெழு!—2012
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நல்ல குணங்களைக் கவனியுங்கள்
  • நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்
  • பாராட்டுக்கு ஈடு ஏது!
  • ‘ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பாராட்டத் தவறாதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—பாராட்டுவதன் மூலம்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • பாராட்டு புத்துணர்ச்சியூட்டுகிறது
    நம் ராஜ்ய ஊழியம்—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—2012
g 7/12 பக். 20-21

பைபிளின் கருத்து

ஏன் பாராட்ட வேண்டும்?

“ரா ப்பகலா உழைக்கிறேன், ஆனா, முதலாளி ஒருநாள்கூட பாராட்டினதே இல்லை” என்று வேலையாட்கள் நொந்துகொள்கிறார்கள். “அவர்/அவள் என்னை ஒரு பொருட்டா நினைக்கிறதே இல்லை” என்று நிறைய தம்பதிகள் புலம்புகிறார்கள். “எவ்ளோ நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டாலும் அப்பா-அம்மா குறை சொல்லிக்கிட்டே இருக்காங்க” என்று பிள்ளைகள் அலுத்துக்கொள்கிறார்கள். இப்படி நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். அவ்வப்போது மற்றவர்களை மனமார பாராட்டினால் இந்த எல்லா கவலைகளும் காணாமல் போய்விடும்.

“பாராட்டுவதா, அப்படினா என்ன?” என்று கேட்கும் அளவுக்கு இன்றைய நிலைமை இருக்கிறது. ஏன்? ‘கடைசி நாட்களில், சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்கள் வரும். . . . மனிதர்கள் சுயநலக்காரர்களாக, . . . நன்றிகெட்டவர்களாக’ இருப்பார்கள் என்று பைபிளில் முன்னரே எழுதப்பட்டிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1, 2.

உங்களை யாராவது மனமார பாராட்டியிருக்கிறார்களா? அது உங்கள் மனதிற்கு எவ்வளவு சந்தோஷமாக, தெம்பாக இருந்திருக்கும்! “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:23) பாராட்டும் பண்பைப் பழக்கமாக்கிக்கொள்ள பைபிள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

நல்ல குணங்களைக் கவனியுங்கள்

கடவுள் நம்மேல் உண்மையிலேயே அக்கறை வைத்திருக்கிறார். அதனால், நம்முடைய நல்ல குணங்களையும் செயல்களையும் கவனித்து, மெச்சிப் பாராட்டுகிறார். “கர்த்தருடைய கண்கள் பூமியில் உள்ள அனைவர் மீதும் சுற்றிவரும். தனக்கு உண்மையானவர்களை அவர் தேடி அவர்களைப் பலமுள்ளவர் ஆக்குவார்” என்று பைபிள் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. (2 நாளாகமம் 16:9, ஈஸி டு ரீட் வர்ஷன்) நாம் கடவுள்மேல் அன்பு காட்டினால்... அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தால்... அது அவருடைய கண்ணில் படாமல் போகாது.

யெகோவா தேவன் நம்முடைய குறைகளையே பார்த்துக்கொண்டிருப்பதில்லை. அப்படிப் பார்த்தால், யாருமே உயிரோடு இருக்க முடியாது. (சங்கீதம் 130:3) ஒரு சுரங்கத் தொழிலாளி கற்குவியல்களுக்கிடையே ரத்தினக்கல்லை நிதானமாகத் தேடுவார். ஒரு ரத்தினக்கல்லைக் கண்டுபிடித்ததும் அவர் முகம் சந்தோஷத்தில் பிரகாசிக்கும். தீட்டப்படாத அந்த ரத்தினக்கல் பார்ப்பதற்கு மதிப்புள்ளதாகத் தெரியாது, ஆனால், அந்தச் சுரங்கத் தொழிலாளிக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியும். அதேபோல, யெகோவாவும் நம் இருதயத்திலுள்ள பொக்கிஷம் போன்ற குணங்களைத்தான் தேடுகிறார், தவறுகளைப் பார்ப்பதில்லை. நல்ல குணங்கள் பார்வையில் பட்டவுடன் அவர் முகம் பூரிப்பில் பூக்கும். அந்தக் குணங்களைப் பட்டைத் தீட்டினால் அவற்றின் மதிப்பு இன்னும் கூடி வைரக்கற்களாக ஜொலிக்கும் என்று அவருக்குத் தெரியும். ஆம், யெகோவாவுக்கு உண்மையுள்ள பக்தியுள்ள நபராக ஜொலிப்போம்!

யெகோவாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளலாம். பொதுவாக மற்றவர்களுடைய கெட்ட குணங்கள்தான் நமக்குப் பளிச்சென தெரியும். ஆனால், யெகோவா பார்ப்பதுபோல நாமும் பார்த்தால், அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கண்டுபிடிக்கலாம். (சங்கீதம் 103:8-11, 17, 18) அந்த அருமையான குணங்களுக்காக அவர்களைப் பாராட்டலாம். அதனால் என்ன பலன் கிடைக்கும்? நம்முடைய வார்த்தைகள் அவர்களுக்கு உற்சாக ‘டானிக்’ போல இருக்கும், நல்லதைச் செய்ய இன்னும் முயற்சி செய்வார்கள். அதோடு, மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தியதால் நம் மனதிலும் சந்தோஷம் ததும்பும்.—அப்போஸ்தலர் 20:35.

நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்

இயேசு மற்றவர்களுடைய நல்ல செயல்களைக் கவனித்து அடிக்கடி பாராட்டியிருக்கிறார். ஒருமுறை, அவர்மேல் நம்பிக்கை வைத்திருந்த ஒரு பெண் தன் வியாதியிலிருந்து குணமடைய விரும்பினாள். ஆனால், மற்றவர்களுக்குப் பயப்பட்டதால், யாருக்கும் தெரியாமல் நைசாக இயேசுவின் ஆடையைத் தொட்டுவிட்டாள். அப்போது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது” என்று சொன்னார்.—மாற்கு 5:34.

இன்னொரு சந்தர்ப்பத்தில், இயேசு ஆலயத்தில் கற்பித்துக்கொண்டிருந்தார். அங்கு, நிறைய பணக்காரர்கள் காணிக்கைப் பெட்டிகளில் காணிக்கைகளைப் போட்டதைப் பார்த்தார். அப்போது, ஓர் ஏழை விதவை “மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை” போட்டாள். மற்றவர்களெல்லாரும் அவளைவிட அதிகமாகப் போட்டிருந்தார்கள். ஆனால், ஏழை விதவை மனதார காணிக்கை போட்டதால் இயேசு பாராட்டினார். “இந்த ஏழை விதவைதான் மற்ற எல்லாரையும்விட அதிகமாகப் போட்டாள். ஏனென்றால், அவர்கள் எல்லாரும் தங்களுடைய தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் போட்டார்கள்; இவளோ தனக்குத் தேவையிருந்தும், தன் பிழைப்புக்கு வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்” என்றார்.—லூக்கா 21:1-4.

நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்? மற்றவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதைப் பார்க்கும்போது பாராட்ட வேண்டும். பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்: “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.”—நீதிமொழிகள் 3:27.

பாராட்டுக்கு ஈடு ஏது!

நன்றிகெட்ட இந்த உலகத்தில் நாம் எல்லாருமே பாசத்துக்காக, பாராட்டுக்காக ஏங்குகிறோம். மற்றவர்களை மனதார பாராட்டும்போது, அவர்களுக்குப் புதுத்தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். அவர்களை நெஞ்சாரப் புகழும்போது, நல்ல காரியங்களை அதிகமாகச் செய்வார்கள்.—நீதிமொழிகள் 31:28, 29.

‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்புங்கள்’ என்று பைபிள் நமக்கு அறிவுரை தருகிறது. (எபிரெயர் 10:24) எனவே, மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டுங்கள்... அவர்களுடைய நல்ல குணங்களைக் கவனியுங்கள்... நல்ல செயல்களைப் பாராட்டுங்கள். எல்லாருமே அப்படிச் செய்தால் இந்தப் பூமி புதுப்பொலிவு பெறும்! ஆம், பாராட்டுக்கு ஈடிணை ஏது! (g12-E 04)

உங்கள் பதில்?

● மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களை ஏன் பாராட்ட வேண்டும்?—நீதிமொழிகள் 15:23.

● யெகோவா நம் இருதயத்தை ஆராயும்போது எதைத் தேடுகிறார்?—2 நாளாகமம் 16:9, ERV.

● எப்போது பாராட்ட வேண்டும்? —நீதிமொழிகள் 3:27.

[பக்கம் 21-ன் படம்]

மற்றவர்களுடைய நல்ல செயல்களைக் கவனித்து பாராட்டுகிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்