‘ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!’
காலைமுதல் மாலைவரை நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டின்போது மேடையில் பேசப்பட்ட விஷயங்களை கிம் என்ற பெண்மணி கவனித்துக் கேட்டு குறிப்பும் எடுத்துக்கொண்டார். அதேசமயத்தில், தன் இரண்டரை வயது மகளையும் அமைதியாக உட்கார வைக்க அரும்பாடுபட்டார். மாநாடு முடிந்த பிறகு, கிம்முடைய அதே வரிசையில் உட்கார்ந்திருந்த மற்றொரு கிறிஸ்தவ சகோதரி கிம்மையும் அவருடைய கணவரையும் மனமார பாராட்டினார், எதற்காக? மாநாட்டின்போது அவர்கள் தங்களுடைய மகளைக் கவனித்துக்கொண்ட விதத்திற்காக! அந்தப் பாராட்டு கிம்மை ரொம்பவே நெகிழ வைத்ததால் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் அதை அவர் ஞாபகம் வைத்திருக்கிறார். “கூட்டங்களில் நான் ரொம்பவே சோர்வாக உணரும்போது அந்தச் சகோதரி சொன்னதை நினைத்துக்கொள்வேன். எங்களுடைய மகளைத் தொடர்ந்து நல்ல முறையில் வளர்ப்பதற்கு அவருடைய அன்பான வார்த்தைகள் என்னை இன்றும் உற்சாகப்படுத்தி வருகின்றன” என அவர் சொல்கிறார். ஆம், சரியான நேரத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் உற்சாகம் அளிக்கின்றன. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!”—நீதிமொழிகள் 15:23.
ஆனால், நம்மில் சிலருக்கு மற்றவர்களைப் பாராட்டுவது சவாலாக இருக்கலாம். சில சமயங்களில் நம்முடைய சொந்த குறைபாடுகளையே நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களைப் பாராட்டுவது மிகவும் கடினமாகிவிடலாம். அதைக் குறித்து ஒரு கிறிஸ்தவ சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்களை நான் பாராட்டும்போது சதுப்பு நிலத்தில் நிற்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. மற்றவர்களை ஒரு படி உயர்த்திப் பேசும்போதெல்லாம் நான் ஒரு படி கீழே இறங்குவதுபோல் உணருகிறேன்.” கூச்ச சுபாவம் உடையவராகவோ தன்னம்பிக்கை அற்றவராகவோ இருக்கும் ஒருவருக்கு அல்லது தன்னை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்று பயப்படும் ஒருவருக்கு மற்றவர்களைப் பாராட்டுவது கடினமாக இருக்கலாம். அதுபோக, சிறுவயது முதல் கொஞ்சம் பாராட்டையே பெற்று அல்லது பாராட்டப்படாமலேயே வளர்க்கப்பட்டவருக்கும் மற்றவர்களைப் பாராட்டிப் பேசுவது ரொம்பவே சிரமமாக இருக்கலாம்.
என்றாலும், பாராட்டிப் பேசுவது போற்றுபவருக்கும் சரி, போற்றப்படுபவருக்கும் சரி, நல்ல பலன்களைத் தரும். இதைத் தெரிந்துகொள்ளும்போது சரியான நேரத்தில் மற்றவர்களைப் பாராட்ட நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய நாம் தூண்டப்படலாம். (நீதிமொழிகள் 3:27) அப்படியென்றால், என்ன நல்ல பலன்கள் கிடைக்கும்? சிலவற்றை நாம் இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.
நல்ல பலன்கள்
உண்மையாகப் பாராட்டப்படுபவரின் மனதில் தன்னம்பிக்கை பிறக்கிறது. கிறிஸ்தவப் பெண்மணியான எலேன் ஒரு குடும்பத் தலைவி; அவர் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்கள் என்னைப் பாராட்டிப் பேசும்போது அவர்களுக்கு என்மேல் உறுதியான நம்பிக்கை இருக்கிறது என்றும் என்னை அவர்கள் மனதார நம்புகிறார்கள் என்றும் உணருகிறேன்.” ஆம், தன்னம்பிக்கையற்ற ஒருவர் பாராட்டப்படும்போது கஷ்டங்களைத் தைரியமாகச் சமாளிப்பதற்கும் அதன் மூலம் சந்தோஷத்தைப் பெறுவதற்கும் உதவிபெறுகிறார். முக்கியமாக இளைஞர்கள், உரிய பாராட்டைப் பெறும்போது பயன் அடைகிறார்கள். தன்னையே நொந்துகொண்டு சோர்வாக உணரும் ஒரு டீனேஜர் தன் மனதிலிருப்பதை இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவை எப்போதும் பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் ரொம்பவே முயற்சி செய்கிறேன், அப்படியும் சில சமயங்களில், நான் என்னதான் செய்தாலும் அது போதுமானதல்ல என்ற நினைப்பு வந்துவிடும். ஆனால், யாராவது என்னைப் பாராட்டும்போது, மனசுக்குள் சந்தோஷம் சிறகடிக்கும்.” ஆம், பைபிளின் பழமொழி உண்மையாகவே இருக்கிறது: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”—நீதிமொழிகள் 25:11.
பாராட்டப்படும்போது ஒருவர் தூண்டப்படுகிறார், ஊக்கமூட்டப்படுகிறார். முழுநேர ஊழியர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “என்னை மற்றவர்கள் பாராட்டும்போது நான் இன்னும் மும்முரமாக உழைத்து என் ஊழியத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற உற்சாகம் எனக்குள் பிறக்கிறது.” சபை கூட்டத்தில் தன் இரண்டு பிள்ளைகளும் பதில் சொன்னதற்காக மற்றவர்கள் வந்து பாராட்டியபோது இன்னும் நிறைய பதில்களைச் சொல்ல வேண்டுமென்ற ஆசை அவர்களுக்கு வந்ததாக ஒரு தாய் சொல்கிறார். ஆம், பாராட்டப்படும்போது சிறு பிள்ளைகள் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேற ஊக்கம் பெறுகிறார்கள். சொல்லப்போனால், பாராட்டப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்ற உறுதி நம் எல்லாருக்குமே அவசியம். கஷ்டங்களும் அழுத்தங்களும் நிறைந்த இவ்வுலகம் நம்மைச் சோர்வடைய வைத்து ஊக்கம் இழக்கச் செய்துவிடலாம். கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “சில சமயங்களில் நான் சோர்வாக உணரும்போது எனக்குக் கிடைக்கும் பாராட்டு என் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது போல இருக்கும்.” எலேனும் அவ்வாறே சொல்கிறார்: “யெகோவா என்னை மற்றவர்கள் மூலமாகப் பாராட்டுவது போல சில சமயங்களில் உணருகிறேன்.”
பாராட்டப்படுவது தாங்கள் வேண்டப்பட்டவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒருவரை நாம் உண்மையாகப் பாராட்டுவது எப்போதும் அவரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. அன்பான சூழலையும், பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்துகிறது; போற்றப்படுகிறோம் என்ற உறுதியையும் அவருக்கு அளிக்கிறது. சக கிறிஸ்தவர்களை நாம் உள்ளார நேசிக்கிறோம் என்பதற்கும், அவர்களைப் போற்றுகிறோம் என்பதற்கும் அது அத்தாட்சியாக இருக்கிறது. ஜோஸி என்ற தாய் இவ்வாறு சொல்கிறாள்: “முன்பு என் குடும்பம் மத ரீதியில் பிளவுபட்டிருந்தது. அப்போது நான் சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கை எடுக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் ஆன்மீக முதிர்ச்சியுள்ளவர்கள் என்னைப் பாராட்டியது சோர்ந்துவிடக்கூடாது என்ற என்னுடைய தீர்மானத்தில் உறுதியாயிருக்க உதவியது.” ஆம், ‘நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.’—எபேசியர் 4:25.
மற்றவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் நல்லதைக் காண நமக்கு உதவுகிறது. மற்றவர்களிடத்தில் நல்லதையே நாம் பார்க்கிறோம், குறைகளை அல்ல. கிறிஸ்தவ மூப்பரான டேவிட் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்கள் நமக்குச் செய்த உதவிகளுக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அப்படி இருப்பது இன்னும் அதிகமாக அவர்களைப் பாராட்ட நம்மைத் தூண்டும்.” யெகோவாவும் அவரது மகனும் ஆபூரண மனிதர்களை எவ்வளவாகப் பாராட்டிப் பேசுகிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்த்தால் நாமும் அப்படியே இருக்கத் தூண்டப்படுவோம்.—மத்தேயு 25:21-23; 1 கொரிந்தியர் 4:5.
பாராட்டுதலுக்குத் தகுந்தவர்கள்
யெகோவா தேவன், சிருஷ்டிகராக இருப்பதால் நம் புகழுக்குப் பாத்திரரான முதல் நபர் அவரே. (வெளிப்படுத்துதல் 4:11) யெகோவா தேவனுக்கு நாம் நம்பிக்கையூட்டவும் தேவையில்லை, தூண்டுவிக்கவும் தேவையில்லை. என்றாலும், அவருடைய மகத்துவத்தையும் அன்பான தயவையும் கண்டு நாம் அவரைப் புகழும்போது, அவர் நம்மிடம் நெருங்கி வருகிறார்; நாமும் அவரிடம் நெருங்கிச் செல்ல முடிகிறது. கடவுளைப் புகழ்வது நாம் சாதித்தவற்றைப் பற்றி சரியாக, நிதானத்துடன் நினைக்க உதவுகிறது. அதோடு நம்முடைய சாதனைகளுக்குக் காரணம் யெகோவாவே என்று உணர்ந்து அவருக்கு நன்றி சொல்லவும் தூண்டுகிறது. (எரேமியா 9:23, 24) தகுதிபெற்ற எல்லா மனிதர்களுக்கும் நித்தியமாக வாழும் பாக்கியத்தை யெகோவா அருளுகிறார். இதுவும்கூட அவரைப் புகழ்வதற்கு இன்னொரு காரணமாக அமைகிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) அக்காலத்தில் வாழ்ந்த தாவீது ராஜா, ‘தேவனுடைய நாமத்தை . . . துதித்து [அதாவது, புகழ்ந்து], அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்த’ ஆவலாய் இருந்தார். (சங்கீதம் 69:30) நாமும் அதைச் செய்யவே ஆவலாயிருப்போமாக.
சக வணக்கத்தாரும் நம்முடைய பாராட்டைப் பெறத் தகுந்தவர்களே. நாம் அப்படிப் பாராட்டும்போது ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனியுங்கள்’ என்ற கடவுளுடைய கட்டளைக்கு இசைய செயல்படுகிறோம். (எபிரெயர் 10:24) இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் நல்ல ஒரு முன்மாதிரி. அவர் ரோமிலிருந்த சபைக்கு இவ்வாறு எழுதினார்: “உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” (ரோமர் 1:8) யோவானும்கூட இதில் முன்மாதிரி வைக்கிறார். சக கிறிஸ்தவரான காயு ‘சத்தியத்தில் நடந்துகொண்டதில்’ சிறந்த முன்மாதிரி வகித்ததைக் குறித்து யோவான் பாராட்டினார்.—3 யோவான் 1-4.
இன்றும்கூட நம் சக கிறிஸ்தவர்களைப் பாராட்டுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. யாராவது கிறிஸ்துவின் குணத்தைப் பிரதிபலிப்பதில் மாதிரியாக இருந்தாலோ சபை கூட்டத்தில் நன்றாகப் பேச்சு கொடுத்தாலோ இருதயப்பூர்வமான பதில்களைச் சொன்னாலோ நாம் அவர்களைப் பாராட்டலாம்; அல்லது ஒரு சிறு பிள்ளை கூட்டத்தின்போது வசனங்களை எடுத்துப் பார்க்க மும்முரமாக முயற்சி செய்தால் அதையும் நாம் பாராட்டலாம். முன்பு குறிப்பிடப்பட்ட எலேன் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “நாம் எல்லாரும் வெவ்வேறு வரங்களைப் பெற்றிருக்கிறோம். மற்றவர்கள் செய்வதை நாம் அக்கறையுடன் கவனிக்கும்போது கடவுளுடைய மக்கள் பெற்றிருக்கும் பலவித வரங்களை பாராட்டுவதைக் காட்டுகிறோம்.”
குடும்பத்தில்
குடும்பத்தில் உள்ளவர்களைப் பாராட்டுவது பற்றி என்ன சொல்லலாம்? குடும்பத்தை ஆன்மீக ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஆதரிப்பதற்குக் கணவனும் மனைவியும் நேரம் செலவிடுகிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள், குடும்பத்தை அன்புடன் கவனிக்கிறார்கள். எனவே, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வது அவசியம்; பிள்ளைகளும்கூட தங்கள் பெற்றோர்களைப் பாராட்டுவது அவசியம். (எபேசியர் 5:33) உதாரணத்திற்கு, குணசாலியான ஸ்திரீயைப் பற்றி கடவுளுடைய வார்த்தை இவ்விதமாகச் சொல்கிறது: “அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் . . . அவளைப் புகழுகிறான்.”—நீதிமொழிகள் 31:10, 28, 29.
பிள்ளைகளும்கூட பாராட்டைப் பெறத் தகுதியானவர்களே. ஆனால் வருத்தகரமாக, சில பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என்று கட்டளையிடுகிறார்களே தவிர, பிள்ளைகள் கீழ்ப்படிந்து மரியாதையுடன் நடந்துகொள்ள முயற்சி செய்யும்போது அவர்களைப் பாராட்டுவதே கிடையாது. (லூக்கா 3:22) பிள்ளைகள் வளர்ந்து வரும் சமயத்தில் அவர்களைப் பாராட்டுவது அவசியம். ஏனென்றால், அது தாங்கள் வேண்டப்பட்டவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு அளிக்கும், அதிக பாதுகாப்பாகவும் உணரச்செய்யும்.
மற்றவர்களைப் பாராட்டுவதற்கு நம் பங்கில் முயற்சி தேவை என்பது உண்மைதான். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் நாம் நிறைய பலன்களை அறுப்போம். சொல்லப்போனால், பாராட்டைப் பெறத் தகுதியானவர்களை நாம் அதிகமதிகமாய்ப் பாராட்டும்போது, அதிகமதிகமாய் நாம் சந்தோஷப்படுவோம்.—அப்போஸ்தலர் 20:35.
சரியான உள்நோக்கத்துடன் பாராட்டைப் பெறுங்கள், அளியுங்கள்
மற்றவர்களால் பாராட்டப்படுவது சிலருக்கு ஒரு சவாலை முன்வைக்கலாம். (நீதிமொழிகள் 27:21) உதாரணத்திற்கு, பெருமை எனும் கண்ணியில் எளிதில் சிக்கிவிடுபவர்களின் மனதில் தானே உயர்ந்தவன் என்ற எண்ணத்தை அது துளிர்க்கச் செய்யலாம். (நீதிமொழிகள் 16:18) ஆகவே, நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அப்போஸ்தலன் பவுல் நடைமுறையான இந்த ஆலோசனையைத் தருகிறார்: “நான் சொல்லுகிறதாவது: உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.” (ரோமர் 12:3) மற்றவர்கள் தங்களைக் குறித்து அளவுக்கு மிஞ்சி நினைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு நாம் உதவ விரும்பினால் புத்திக்கூர்மை, அழகு ஆகிய காரணங்களுக்காக அவர்களைப் புகழாமல் இருப்பது நல்லது. அதற்குப் பதிலாக அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக நாம் அவர்களைப் புகழலாம்.
சரியான உள்நோக்கத்துடன் பாராட்டைப் பெறுவதும் அளிப்பதும் நமக்கு நல்ல பலன்களைத் தேடித்தரும். நாம் செய்யும் எந்தவொரு நல்ல காரியத்திற்கும் யெகோவாவே காரணம் என்று ஒப்புக்கொள்ள தூண்டப்படுவோம். பாராட்டப்படுவதால் எப்போதுமே நல்ல விதத்தில் நடந்துகொள்ள வேண்டுமென்ற ஊக்கமும் நமக்குக் கிடைக்கும்.
நம் அனைவராலும் கொடுக்க முடிந்த பரிசு, உண்மையான மனதுடன், தகுதியான விதத்தில் மற்றவர்களைப் பாராட்டுவதாகும். அதை ஞானமாகச் செய்யும்போது, நாம் நினைத்துப் பார்க்காத அளவில் அது அந்த நபரின் மனதை நெகிழச் செய்யலாம்.
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
அவருடைய நெஞ்சைத் தொட்ட கடிதம்
பனிக்காலத்தில், குளிர் பதம்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளன்று தன் மனைவியுடன் ஊழியம் செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது நடந்த சம்பவத்தை ஒரு பயணக் கண்காணி நினைவுகூருகிறார். அவர் சொல்வதாவது: “என் மனைவி குளிர் தாங்கமுடியாமல் ரொம்பவும் சோர்ந்துபோய் இருந்தாள். இனியும் தன்னால் பயண ஊழியத்தில் தொடர முடியாது என்று நினைப்பதாகச் சொன்னாள். ‘இப்படி ஒவ்வொரு இடமாகச் செல்வதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் தங்கி அங்குள்ள சபையில் முழுநேர ஊழியர்களாகச் சேவை செய்து, நாமே பைபிள் படிப்புகளை நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று சொன்னாள். அப்போதைக்கு நான் எந்தத் தீர்மானமும் எடுக்காமல், இந்த வாரம் போகட்டும், அதுக்கப்புறம் எப்படி இருக்கிறதென்று பார். ஒருவேளை அதன் பிறகும் அப்படியே நினைத்தால், நீ சொல்கிறபடியே செய்யலாம் என்றேன். அதே நாளில், நாங்கள் போஸ்ட் ஆபீஸுக்குப் போனபோது, கிளை அலுவலகத்திலிருந்து அவளுடைய பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. ஊழியத்தில் அவள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியும், வாராவாரம் ஒவ்வொரு வீட்டில் தங்கவேண்டியிருந்தாலும் அவள் சகிப்புத்தன்மையோடிருப்பதைப் பாராட்டியும் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த அவள் அப்படியே நெகிழ்ந்துபோனாள். அதன் பிறகு, பயண ஊழியத்தை விட்டுவிடுவதைப் பற்றி ஒருநாளும் அவள் பேசவில்லை. சொல்லப்போனால், அதை விட்டுவிடுவது பற்றி நான் யோசித்த சமயங்களிலெல்லாம் அவள்தான் என்னை ஊக்கப்படுத்தினாள்.” இந்தத் தம்பதி கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பயண ஊழியர்களாகச் சேவை செய்தார்கள்.
[பக்கம் 17-ன் படம்]
உங்களுடைய சபையில் பாராட்டைப் பெறத் தகுதியுள்ளவர்கள் யார்?
[பக்கம் 19-ன் படம்]
அன்பான கவனிப்பையும் பாராட்டையும் பெறுகிற பிள்ளைகள் நன்றாக வளருகிறார்கள்