தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—பாராட்டுவதன் மூலம்
1 மனமார்ந்த பாராட்டு ஆட்களின் மனதை உற்சாகப்படுத்துகிறது, அவர்களைச் செயல்படத் தூண்டுகிறது, சந்தோஷத்தையும் தருகிறது. ஊழியத்தில் மனமார பாராட்டி ஒரு வார்த்தை சொல்வதும்கூட ஆட்களை செவிகொடுக்க வைப்பதற்கு உதவியிருப்பதை அநேக பிரஸ்தாபிகள் கண்டிருக்கிறார்கள். ஆட்களிடம் நற்செய்தியை சொல்லுகையில் அவர்களை நாம் எவ்விதத்தில் பாராட்டலாம்?
2 கூர்ந்து கவனியுங்கள்: மகிமைப்படுத்தப்பட்ட இயேசு, ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளின் நல்ல செயல்களைக் கவனித்தார். (வெளி. 2:2, 3, 13, 19; 3:8) அதேபோல, ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் நமக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், பாராட்டு தெரிவிக்க சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்போம். உதாரணமாக, ஒரு வீட்டின் முன்னாலுள்ள அழகிய தோட்டம், ஒரு தாயோ தகப்பனோ அவருடைய பிள்ளையிடம் காட்டுகிற கனிவான பாசம், வீட்டுக்காரரின் அன்பான புன்முறுவலும் வரவேற்பும் இவையெல்லாம் பாராட்டு தெரிவிக்க நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களை உடனடியாக கவனித்து அவற்றைப் பயன்படுத்துகிறீர்களா?
3 கூர்ந்து கேட்பவராக இருங்கள்: மற்றவர்களுக்கு பிரசங்கிக்கும்போது, அவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு உற்சாகப்படுத்துங்கள். பொருத்தமான கேள்விகள் கேட்பது இதற்கு உதவும். அவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அவர்களுக்கு மரியாதை காட்டுங்கள். (ரோ. 12:10) அப்படிச் செய்யும்போது மனமார்ந்த பாராட்டைத் தெரிவிப்பதற்கு ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பீர்கள், பிறகு பொதுவான விஷயத்தின் பேரில் உங்களால் பேச முடியும்.
4 பகுத்துணர்வோடு நடந்துகொள்ளுங்கள்: பைபிள் சத்தியத்திற்கு முரணாக இருக்கும் சிலவற்றை வீட்டுக்காரர் சொல்லும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அவர் சொன்னதை மறுப்பதற்குப் பதிலாக, நன்றி தெரிவியுங்கள், “இந்த விஷயத்தில் நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருப்பதை என்னால் புரிஞ்சுக்க முடியுது” என்று சொல்லி தொடர்ந்து பேசுங்கள். (கொலோ. 4:6) ஒரு நபர் வாக்குவாதம் செய்பவராக இருந்தாலும்கூட, அந்த விஷயத்தில் அவருக்கு இருக்கும் உண்மையான ஆர்வத்திற்காக பொதுவாக அவரைப் பாராட்டலாம். இதுபோன்ற சாந்தமான அணுகுமுறையால் நற்செய்தியை கடுமையாக எதிர்ப்பவரையும் இளக வைக்கலாம்.—நீதி. 25:15.
5 மற்றவர்களை ஊக்கமூட்டுவதற்கு, நம்முடைய பாராட்டு உள்ளப்பூர்வமானதாக இருப்பது அவசியம். இதுபோன்ற உற்சாகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது யெகோவாவை கனப்படுத்துகிறது. அதோடு, மற்றவர்களை ராஜ்ய செய்தியிடம் கவர்ந்திழுக்கிறது.