புதுப்பிக்கப்பட்ட பொதுப் பேச்சுகளிலிருந்து பயனடைதல்
1 “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்,” என்று சொல்கிறது நீதிமொழிகள் 4:18. இவ்வார்த்தைகள் யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன நாளைய வரலாற்றைத் திருத்தமாக விவரிக்கின்றன.
2 இதற்கிசைய, கிறிஸ்தவ சபை பைபிள் போதகங்கள் பேரிலான தற்கால தகவல்களையும் காலத்திற்கேற்ற விளக்கங்களையும் தொடர்ந்து பெற்றுவருகிறது. (மத். 24:45-47) ஒருவேளை யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் கவனித்திருக்கும், இதற்கான உதாரணங்களை உங்களால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியலாம். பொதுப் பேச்சையும் உள்ளடக்கிய சபை கூட்டங்கள், அதிகரித்துவரும் சத்திய ஒளியை உடனுக்குடன் அறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
3 புதுப்பிக்கப்பட்ட பேச்சுக் குறிப்புத் தாள்கள்: சமீபத்தில் சங்கம் அநேக பேச்சுக் குறிப்புத் தாள்களைப் புதுப்பித்துள்ளது. அவற்றினுள் தற்போதைய தகவல்கள் கூட்டப்பட்டும், முக்கியக் குறிப்புகள் விளக்கப்பட்டும் இருக்கின்றன. இந்தத் தற்போதைய தகவல்களிலிருந்து சபை முழுமையாக பலனடைய வேண்டுமானால், பொதுப் பேச்சைக் கொடுக்கும் சகோதரர்கள் மிகச் சமீபத்திய பேச்சுக் குறிப்புத் தாள்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
4 பொதுப் பேச்சிலிருந்து மிகச் சிறந்த பலனைப் பெறும் நோக்கோடு, கொடுக்கப்படவிருக்கும் பொதுப் பேச்சின் தலைப்புகளைப்பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள். பொதுப் பேச்சிற்கு ஆஜராகும் முன்பு, தேவராஜ்ய பிரசுரங்களில் அந்த விஷயத்தின் பேரிலுள்ள மிகப் புதிய கருத்துக்களை ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சியுங்கள். பின்னர், பேச்சைக் கேட்கும்போது, இந்தத் தகவல்கள் எவ்வாறு பேச்சாக உருவாக்கப்படுகின்றன என்று எதிர்நோக்கியிருங்கள். இந்தச் சத்தியங்கள் வேறு ஏதாவது புதிய முறையில் அளிக்கப்படுமானால் அதை எதிர்கால உபயோகத்திற்காக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புதுப்பிக்கப்பட்ட பொதுப் பேச்சுகளிலிருந்து நீங்கள் அதிகளவு பயனடைவதை இது உறுதிப்படுத்துகிறது.
5 பொதுப் பேச்சுகள் கேட்பவர்களுக்கு அறிவூட்டுவதாகவும் கேட்பவர்களை உந்துவிப்பதாகவும் இருக்கவேண்டும்: இயேசு பேசியபோது, கேட்டுக்கொண்டிருந்தவர்களின் இருதயத்தைச் சென்றெட்டினார். இதுவரை கொடுக்கப்பட்ட பொதுப் பேச்சுகளிலேயே மிகப் பிரபலமான பேச்சாகிய, இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் முடிவில், மத்தேயு 7:29 சொல்லுகிறதுபோல, “ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”
6 இயேசுவின் முன்மாதிரியை மனதில் கொண்டவர்களாக, மூப்பர் குழுவினர் புதிய பொதுப் பேச்சாளர்களை அங்கீகரிக்கும்போது புத்திக்கூர்மையை உபயோகிக்கவேண்டும். நன்கு போதிக்கும் திறமையுள்ள, சங்கத்தின் பேச்சுக் குறிப்புத் தாளை நெருங்கப் பின்பற்றும், கேட்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் பேச்சாளர்களை மட்டுமே அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். பொதுப் பேச்சைக் கொடுக்கும் சிலாக்கியத்திற்காக நியமிக்கப்பட்ட சகோதரர்கள் தங்களுடைய பேச்சுத் திறமையை முன்னேற்றுவிக்க தொடர்ந்து முயற்சிக்கவேண்டும். மூப்பர்களிடமிருந்து வரும் எந்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
7 ஏசாயா 65:13, 14-ல் முன்னுரைக்கப்பட்டதுபோல, கடவுளுடைய ஜனங்களின் ஆவிக்குரிய செழுமை தொடர்ந்து மிகத் தெளிவாகிக் கொண்டிருக்கிறது. நாம் ‘யெகோவாவால் போதிக்கப்படும்,’ அநேக வழிகளில் பொதுப் பேச்சு ஏற்பாடானது, ஒரு வழியாக இருக்கிறது.—ஏசா. 54:13, NW.