கேள்விப் பெட்டி
◼ யெகோவாவின் சாட்சிகள் ரெக்கார்ட் செய்யப்பட்ட பேச்சுகளையோ அவற்றின் எழுத்துப் படிவங்களையோ மற்றவர்களுக்கு விநியோகிக்கலாமா?
பைபிள் பேச்சுகள் நம்மைப் பலப்படுத்துகின்றன, உற்சாகப்படுத்துகின்றன. (அப். 15:32) அப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்க முடியாமல் போனவர்களிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ள நாம் விரும்புவது இயல்பே. ரெக்கார்ட் செய்வதற்கு இப்போதெல்லாம் நிறையச் சாதனங்கள் இருப்பதால், ஒரு பேச்சை ரெக்கார்ட் செய்து மற்றவர்களுக்கு விநியோகிப்பது மிக எளிது. பல வருடங்களுக்கு முன் ரெக்கார்ட் செய்யப்பட்ட அநேக பேச்சுகளைக்கூட சிலர் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்; அவற்றைத் தங்களுடைய நண்பர்களும் கேட்டு மகிழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அவர்களுக்குக் கடனாகக் கொடுக்கிறார்கள் அல்லது அவர்களுக்கென்றே நகலெடுத்துக் கொடுக்கிறார்கள். இன்னும் சிலர், யார் வேண்டுமானாலும் ‘டௌன்லோட்’ செய்துகொள்வதற்கு வசதியாக புதுப் புது வெப் சைட்டுகளை உருவாக்கி அவற்றில் பேச்சுகளை ‘அப்லோட்’ செய்கிறார்கள்.
நமக்காக அல்லது நம் குடும்பத்தினருக்காகப் பேச்சுகளை ரெக்கார்ட் செய்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. சுகவீனத்தால் சபைக் கூட்டங்களுக்கு வரமுடியாதவர்களுக்காகப் பேச்சுகளை ரெக்கார்ட் செய்யும்படி மூப்பர்களே யாரிடமாவது சொல்லலாம். என்றாலும், ரெக்கார்ட் செய்யப்பட்ட பேச்சுகளையோ அவற்றின் எழுத்துப் படிவங்களையோ மற்றவர்களுக்கு விநியோகிப்பது சரியல்ல; அதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாக, சபையின் தேவைகளை மனதில் வைத்தே பேச்சுகள் கொடுக்கப்படுகின்றன; என்றாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பேச்சு கொடுக்கப்பட்டதென நமக்குத் தெரியாததால், அதன் பதிவைக் கேட்கையில் அதிலுள்ள சில குறிப்புகளை நாம் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. அதோடு, அந்தப் பேச்சு யாரால் கொடுக்கப்பட்டது, எப்போது கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் நமக்குத் தெரியாததால், அதிலுள்ளவை சமீபத்திய தகவலா, திருத்தமான தகவலா என்றும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. (லூக். 1:1-4) அதுமட்டுமல்ல, ரெக்கார்ட் செய்யப்பட்ட பேச்சுகளையோ அவற்றின் எழுத்துப் படிவங்களையோ மற்றவர்களுக்கு விநியோகிக்கும்போது, அப்பேச்சுகளைக் கொடுத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர சிலர் தூண்டப்படலாம்.—1 கொ. 3:5-7.
உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார், “போதுமான உணவை ஏற்ற வேளையில்” அளிப்பதற்காகக் கடினமாக உழைக்கிறார்கள். (லூக். 12:42) சபைகளில் கொடுக்கப்படுகிற பேச்சுகளும், jw.org வெப் சைட்டிலிருந்து ‘டௌன்லோட்’ செய்யப்படுகிற ஆடியோ பதிவுகளும் இந்த உணவில் அடங்கும். ஆகவே, விசுவாசத்தில் உறுதியாய் இருக்க நமக்குத் தேவையானவற்றை உண்மையும் விவேகமும் உள்ள அடிமையும் அதன் ஆளும் குழுவும் அளிக்கும் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—அப். 16:4, 5.