மற்றவர்கள்தாமே பயன்பெற அவர்களுக்கு உதவுங்கள்
1 நாம் அறியவேண்டியதை போதிப்பதாக யெகோவா நமக்கு வாக்களிக்கிறார். சங்கீதம் 32:8-ல் அவர் உறுதியளிக்கிறார்: “நான் உனக்கு போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” இந்த உறுதி நமக்கு பெரும் நன்மைபயக்குவதாய் இருக்கிறது. பைபிளிலிருந்து வருகிற ஞானமான அறிவுரைக்கு செவிசாய்ப்பதன் மூலம் மற்றவர்கள் எவ்வாறு தங்களுக்கு நன்மையைக் கொண்டுவரலாம் என்பதை சுயநலமில்லாமல் அவர்களுக்கு காண்பிக்க விரும்புகிறோம். (ஏசா. 48:17) நாம் சந்திக்கிற அனைவருக்கும் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிப்பதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் நாம் இதைச் செய்யலாம். நாம் பிரசங்கம் செய்கையில், பைபிள் அறிவைப் பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாதவர்களுக்கும் பைபிள் போதனைகளில் விசுவாசமில்லாதவர்களுக்கும்கூட பைபிளின் நடைமுறையான மதிப்பைக் காண்பிப்பதற்கான பல்வகைப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.
2 இன்று பரவலாக காணப்படும் விவாக பிரச்சினைகளின் காரணமாக, “என்றும் வாழலாம்” புத்தகத்திலிருந்து இந்தக் கருத்தை சிறப்பித்துக் காண்பிக்க நீங்கள் விரும்பலாம்:
◼ “நான் பேசியிருக்கிற ஆட்களில் அநேகர் திருமணத்தில் மகிழ்ச்சியில்லாமை, விவாகரத்து ஆகியவற்றில் பயங்கரமான அதிகரிப்பு இருப்பதைப் பற்றி அதிக கவலையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] அடிப்படையான காரணங்களைக் கண்டுணர அநேகர் தவறிவிட்டார்கள். அவர்கள் உண்மையான மனதுடன் முயற்சி செய்வார்களானால், தம்பதிகள் தங்களுடைய திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல், உண்மையான மகிழ்ச்சியையும் அவர்கள் காணமுடியும். பைபிளில் காணப்படுகிற ஆலோசனையைப் பொருத்திப் பயன்படுத்துவதில் இருக்கும் வெற்றிக்கான வழியை அநேகர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.” எபேசியர் 5:28, 29, 33-ஐ வாசியுங்கள். பக்கம் 243-க்குத் திருப்பி, 16, 17 பாராக்களைக் கலந்தாலோசியுங்கள்; பின்பு அந்தப் புத்தகத்தை அளியுங்கள்.
3 பிள்ளைகளுக்கு நற்பயனளிக்கும் நேரமும் பெற்றோர்களிடமிருந்து பயிற்றுவிப்பும் தேவை. “என்றும் வாழலாம்” புத்தகத்தை சிறப்பித்துக் காண்பிக்கையில், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நாமனைவருமே நம்முடைய இளைஞர்களின் எதிர்கால நலனைப்பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களுடைய அபிப்பிராயத்தில், பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தைக் கண்டடைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவக்கூடிய மிகச் சிறந்த வழி என்ன? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட பைபிள் நீதிமொழியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த அறிவுரையை செவிகொடுத்துக் கேளுங்கள். [நீதிமொழிகள் 22:6-ஐ வாசியுங்கள்.] நம் பிள்ளைகள் பள்ளியில் பெறும் போதனையிலிருந்து அதிகளவு பயனடைய முடியும் என்றாலும், மிகவும் மதிப்புவாய்ந்த பயிற்றுவிப்பு வீட்டில் அவர்களுடைய பெற்றோர்களால் அளிக்கப்படுகிறது. அதற்கு காலம், கவனிப்பு, அன்பு தேவைப்படுகிறது, ஆனால் செய்யும் முயற்சி அதிக பிரயோஜனமுள்ளது.” 245-ம் பக்கத்திற்குத் திருப்பி, 20, 21 பாராக்களை கலந்தாலோசியுங்கள்; அதன் பின்பு, குடும்ப கலந்தாலோசிப்புகளுக்காக அந்தப் புத்தகத்தை எவ்வாறு ஓர் ஆதாரமாக பயன்படுத்தலாம் என்பதை விளக்கிக் கூறுங்கள்.
4 இந்தப் பூமி எவ்வாறு ஒரு பரதீஸாக மாறும் என்பதை காண்பிப்பதன்மூலம் “என்றும் வாழலாம்” புத்தகத்தை அளிக்க நீங்கள் விரும்பலாம்:
◼ “எதிர்காலத்தில் உங்களுடைய வாழ்க்கை எதைப்போல இருக்கும் என்பதைப் பற்றி நீங்கள் அக்கறையுள்ளவர்களாக இருப்பீர்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன். அநேக மத சம்பந்தமான புத்தகங்கள் எதிர்காலத்தைப் பற்றி பேசுகின்றன. உதாரணமாக, பைபிளில், கடவுளுடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதற்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார். அது செய்யப்படும்போது இந்தப் பூமி எதைப்போல இருக்கும்? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] பரதீஸிய பூமியைப் பற்றிய ஓவியர் ஒருவருடைய படம் இங்கே காணப்படுகிறது. [12, 13-ம் பக்கங்களிலுள்ள விளக்கப்படத்தைச் சுட்டிக்காட்டுங்கள். அதன் பின்பு, ஏசாயா 11:6-9-ஐ வாசியுங்கள், இது 12-ம் பாராவில் அடங்கியுள்ளது.] இப்படிப்பட்ட ஓர் உலகிலே வாழ்வது அதிசயமாக இருக்கும் அல்லவா? நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும் இதுபோன்ற ஒரு பரதீஸில் எவ்வாறு வாழலாம் என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் காண்பிக்கும்.”
5 உங்களுடைய பிரசங்கத்தை முன்கூட்டியே தயார் செய்வதே, நீங்கள் வீடுகளில் பேசும்போது உங்களுடைய வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. நீங்கள் கதவைத் தட்டுவதற்கு முன்பாக, வேதப்பூர்வமான ஒரு கருத்தைப் பற்றி சொல்வதற்கு திட்டவட்டமான ஒன்றைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அதோடு, புத்தகத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், நீங்கள் அளிப்பதற்கு திட்டமிட்டிருக்கிற பத்திரிகையில் அல்லது துண்டுப்பிரதியில் உள்ள ஆவலைத்தூண்டும் ஓர் அம்சத்தைப் பற்றி மனதில் சுருக்கமான ஒரு குறிப்பை வைத்திருங்கள். செப்டம்பரில் ராஜ்ய சத்தியத்தின் விதைகளை விதைப்பதற்கு உங்களுக்கு இருக்கிற எல்லா சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். (பிர. 11:6) என்றும் நிலைத்திருக்கும் பலன்களை அறுவடை செய்ய மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்துகொண்டிருப்பீர்கள்.