பைபிளின் மதிப்பை மற்றவர்கள் போற்ற உதவுங்கள்
1 இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எது தேவையாயிருந்ததோ அதை அளித்தார். லூக்கா 24:45 பின்வருமாறு அறிவிக்கிறது: “வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்[தார்].” தம்முடைய பிதாவின் அங்கீகாரத்தை உடையவர்களாய் அவர்கள் இருக்கவேண்டுமானால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படித்து அதைப் புரிந்துகொள்ளவேண்டியது அவர்களுக்கு அத்தியாவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங். 1:1, 2) நம்முடைய பிரசங்க ஊழியமும் அதே நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. ‘இயேசு கட்டளையிட்ட யாவையும் மக்கள் கைக்கொள்ளும்படி உபதேசம்பண்ணுவதற்கு’ பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே நம்முடைய இலக்காகும். (மத். 28:20) இதை மனதில் கொண்டவர்களாக, நீங்கள் மறுசந்திப்புகள் செய்கையில் எது உதவியாக இருக்கலாம் என்பதன் பேரில் சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
2 நீங்கள் ஆரம்பத்தில் “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?” என்ற புத்தகத்தைக் கலந்தாலோசித்திருந்தால் இவ்விதமாக உங்கள் கலந்தாலோசிப்பைத் தொடரலாம்:
◼ “பைபிள் புத்திமதியின் நடைமுறையான மதிப்பை விளக்குகிற வேறொன்றைக் காட்ட நான் விரும்புகிறேன். மற்றவர்களோடு நல்லமுறையில் ஒத்துப்போவதை அநேக ஆட்கள் கடினமாகக் காண்கின்றனர். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? [பதிலளித்தபின், பக்கங்கள் 167-8-லுள்ள பாரா 15-க்குத் திருப்பி மத்தேயு 7:12-ஐ வாசியுங்கள். பாரா 16-ல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.] இது பைபிளில் காணப்படும் ஞானத்திற்கான மற்றொரு உதாரணமாயிருக்கிறது. மறுமுறை உங்களை நான் சந்திக்கையில், திருமணமான தம்பதிகள் தங்கள் உறவில் அதிக மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கு உதவ பைபிள் கொடுக்கும் புத்திமதியை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.” பக்கம் 170-2-லுள்ள, ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்காக பைபிள் எதை சிபாரிசு செய்கிறது என்பதைக் கலந்தாலோசிப்பதற்கு மறுமுறை செல்ல ஏற்பாடுகளை செய்யுங்கள்.
3 பைபிளில் அக்கறைகாட்டிய ஒருவரிடம் நீங்கள் பேசியிருந்தால், ஒரு படிப்பை ஆரம்பிப்பதற்கு ஒருவேளை இந்த அணுகுமுறை பலனளிப்பதாய் இருக்கலாம்:
◼ “வாழ்வதற்கு சமாதானமும் பாதுகாப்பும் உள்ள ஒரு உலகத்தைக் கொண்டிருக்க விரும்புவதாக நீங்கள் சம்பாஷிக்கிற அனைவரும் உங்களிடம் சொல்வார்கள் என்பது உண்மையே. அதைத்தான் எல்லாரும் விரும்புகிறார்கள் என்றால், ஏன் இந்தளவுக்குக் குழப்பமும் வன்முறையும் நிரம்பிய ஓர் உலகத்தை நாம் கொண்டிருக்கிறோம்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] அந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் பைபிளில் எங்கே கண்டுபிடிக்கலாம் என்பதை புதிய உலக மொழிபெயர்ப்பு உங்களுக்குக் காட்டுகிறது.” பக்கம் 1659-ற்குத் திருப்பி, “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்,” என்பதில் எண் 43அ, “உலக வேதனைக்கு யார் காரணம்” என்பதைக் காட்டுங்கள். 2 கொரிந்தியர் 4:4-ஐ வாசியுங்கள். கடவுள் எவ்வாறு பிசாசை அழித்து நிலையான சமாதானமும் மகிழ்ச்சியுமுள்ள ஓர் உலகத்தைக் கொண்டுவருவார் என்பதை விளக்குங்கள். வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள். அதன்பின் இவ்வாறு சொல்லலாம்: “மறுமுறை உங்களை சந்திக்கையில் வேதனையற்ற ஓர் உலகத்தை நீங்கள் ஏன் எதிர்பார்க்கலாம் என்பதை விளக்குகின்ற சில வேதவசனங்களை உங்களுக்குக் காட்டவிரும்புகிறேன்.”
4 வீட்டுக்காரர் பழைய 192-பக்க பதிப்புகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டிருந்தார் என்றால் மறுமுறை சந்திக்கையில் இதை நீங்கள் சொல்லலாம்:
◼ “நாம் கடந்தமுறை பேசுகையில் பைபிளை வாசிப்பது ஏன் பயனுள்ளது என்பதற்கான சில காரணங்களைக் கலந்தாலோசித்தோம். இதை உள்ளார்ந்த முயற்சியுடன் இன்னும் அதிகமாக செய்வது, நமக்காக கடவுள் எதை வைத்திருக்கிறார் என்பதைப் போற்றுவதற்கு நமக்கு உதவும். [யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.] கடவுள் எதை வாக்களித்திருக்கிறார் மற்றும் நாம் எவ்வாறு அவரைப் பிரியப்படுத்தலாம் என்பதை அதிகமாகக் கற்றறிய ஆயிரக்கணக்கானோருக்கு உதவியிருக்கிற ஒரு படிப்புத் திட்டத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.” வீட்டுக்காரர் ஏற்றுக்கொண்டிருக்கிற புத்தகம் எதுவானாலும் அதிலுள்ள அதிகாரங்களின் தலைப்பை மறுபார்வை செய்து நாம் எவ்வாறு ஒரு பைபிள் படிப்பு நடத்துகிறோம் என்பதை நடித்துக்காட்டவும்.
5 கடவுளுடைய வார்த்தையின் மேம்பட்ட மதிப்பைப் போற்ற உண்மை மனமுள்ள ஆட்களுக்கு நீங்கள் உதவமுடியுமென்றால் மிகச் சிறந்த வழியில் அவர்களுக்கு உதவியிருக்கிறீர்கள். அதைப் படிப்பதன்மூலம் அவர்கள் கற்றுக்கொள்ளும் ஞானம் “ஜீவவிருட்சம்” போன்றது, அது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.—நீதி. 3:18.