புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்
1 பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில காரியங்கள் “புரிந்துகொள்வதற்கு கடினமானது” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் ஒப்புக்கொண்டார். (2 பே. 3:16, NW) அநேகர் அவ்வாறு உணர்ந்திருக்கின்றனர். இருந்தபோதிலும், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்திலே அதனுடைய அடிப்படை போதகங்கள் பளிங்குபோல் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தையும் உங்களுடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தையும் சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்ள அக்கறை காண்பிப்போருக்கு நாம் எவ்வாறு உதவலாம்?
2 உங்களுடைய முதல் சந்திப்பில் யோவான் 17:3-ஐ கலந்தாலோசித்திருந்தீர்களென்றால், கூடுதலான அறிவை எடுத்துக்கொள்வதன் தேவையை இவ்வாறு சொல்வதன் மூலமாக நீங்கள் வலியுறுத்தலாம்:
◼ “சென்றமுறை நான் இங்கு வந்திருந்தபோது, கடவுளைக் குறித்த அறிவை எடுத்துக்கொள்வது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும் என்பதை யோவான் 17:3-ல் நாம் வாசித்தோம். ஆனால் இன்று நாம் வாழக்கூடிய உலகத்தைப் போன்ற ஒன்றில் என்றென்றுமாக வாழ நீங்கள் விரும்புவீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] அநேகர் விரும்பமாட்டார்கள். இந்தக் காரணத்திற்காக, கடவுள் வாக்களித்திருக்கிறதை கேட்கும்போது நாம் சந்தோஷப்படலாம்.” பக்கங்கள் 12 மற்றும் 13-ல் உள்ள பாரா 12-க்கு திருப்பி ஏசாயா 11:6-9-ஐ வாசியுங்கள். பின்பு, அந்தப் பக்கங்களில் உள்ள படத்தை பயன்படுத்தி, ‘முந்தினவைகள் ஒழிந்துபோகும்போது’ உலகம் எவ்வாறு இருக்குமென்பதை விளக்குங்கள். கூடுதலான கலந்தாலோசிப்பிற்காக மறுபடியும் வருவதாக சொல்லுங்கள்.
3 கடவுளுடைய ராஜ்யம் துன்பத்துக்கு ஒரு முடிவை கொண்டுவரும் என்பதைக் காண்பிக்க பக்கங்கள் 156-லிருந்து 162-வரையாக உள்ள படத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்களானால், புத்தகத்தை மறுபடியுமாக அந்தப் பக்கங்களுக்கு திருப்பி இவ்வாறு சொல்லலாம்:
◼ “கடவுளுடைய ராஜ்ய அரசாட்சியின்கீழ் ஜனங்கள் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களை இங்கே காட்டப்பட்டுள்ளதிலிருந்து நாம் கலந்தாலோசித்தோம். அந்த ராஜ்யத்தின்கீழ் வாழ விரும்பினால் நாம் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பக்கம் 250-ல் உள்ள 2-ஆம் பாராவுக்கு திருப்பி எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள். கடவுளை தேடவும் அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவரை வணங்கவும் உண்மைமனங்கொண்ட ஜனங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவிசெய்கின்றனர் என்பதை விளக்குங்கள்.
4 பேசுவதற்கு நேரமில்லாதளவுக்கு வேலையாயிருந்த ஒரு வீட்டுக்காரரிடம், “இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?” என்ற துண்டுப்பிரதியை நீங்கள் விட்டுவந்திருந்தால், இந்த அணுகுமுறையை பயன்படுத்தலாம்:
◼ “சமீபத்தில் உங்களை நான் சந்தித்தபோது, நீங்கள் கொஞ்சம் வேலையாயிருந்தீர்கள். இந்த அமைதியற்ற காலங்களிலிருந்து உலகம் தப்பிப்பிழைப்பதைக் குறித்து கேள்வியெழுப்பின ஒரு துண்டுப்பிரதியை நான் உங்களிடம் விட்டுச்சென்றேன். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற இந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வெளிப்படுத்துதல் 21:4-ஐ நாம் வாசித்தோம். [162-ம் பக்கத்திலிருந்து இதை வாசியுங்கள்.] ‘கண்ணீர் யாவையும் தேவன் துடைக்கும்போது’ எப்படியிருக்கும் என்பதை குறித்த ஒரு எண்ணத்தை இந்தப் படங்கள் [பக்கங்கள் 156-லிருந்து 162 வரையாக உள்ளவை] உங்களுக்கு கொடுக்கும். இந்த வாக்குறுதி வெகு சமீபத்திய எதிர்காலத்தில் நிறைவேறும் என்பதற்கு இந்தப் புத்தகம் நம்பத்தகுந்த ஆதாரத்தை அளிக்கிறது. நீங்கள் இதை வாசிக்க விரும்பினால், இந்தப் பிரதி உங்களுடையது.”
5 “உங்களுடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்” என்ற புத்தகம் அளிக்கப்பட்டிருந்தால் இந்த அணுகுமுறையை பயன்படுத்தி நீங்கள் மறுசந்திப்பு செய்யலாம்:
◼ “நான் உங்களை முதலில் சந்தித்தபோது, உங்களுடைய குடும்பத்தின்பேரில் உங்களுக்கிருந்த அக்கறையினால் கவரப்பட்டேன். துன்மார்க்கமான இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்துவருவதன் காரணமாக, எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து தயாரித்துக்கொண்டு வருவது குடும்பங்களுக்கு இன்றியமையாத ஒன்று. அதன் காரணமாக, நான் உங்களிடம் விட்டுச்சென்ற உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகம், வீட்டிலே ஒழுங்கான பைபிள் கலந்தாலோசிப்புகள் நடத்துவதை உறுதியாக சிபாரிசு செய்கிறது. [பக்கங்கள் 185-6-ல் உள்ள 10-வது பாராவை வாசியுங்கள்.] நீங்கள் அனுமதித்தால், கிட்டத்தட்ட 200 நாடுகளில் ஜனங்கள் எவ்வாறு குடும்பத் தொகுதிகளாக வீட்டில் பைபிளை கலந்தாலோசிக்கிறார்கள் என்பதை நடித்துக்காட்டுவதற்கு ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.” நேரம் அனுமதித்தால், பக்கம் 71-ல் உபதலைப்பின்கீழ் உள்ள தகவலை பயன்படுத்துங்கள்.
6 அக்கறை காண்பிக்கும் நபர்களை நீங்கள் சந்தித்தால், ஒரு படிப்பை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய நீங்கள் விரும்பக்கூடும். ‘பேதைகளை உணர்வுள்ளவர்களாக்குவதற்கு’ அவர்களுக்கு உதவிசெய்வதில் நீங்கள் நிச்சயமாகவே அதிக மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.—சங். 119:130.