‘இப்பொழுதே மகத்தான சிருஷ்டிகரை நினைக்க’ இளைஞருக்கு உதவுதல்
1 பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையான வசனங்களின் ஆலோசனையைக் ‘கேட்பது’ போதுமானதல்ல. முழுமையாக பயனடைவதற்கு, என்ன எழுதப்பட்டுள்ளதோ அதை ஒருவர் ‘கைக்கொள்ள’ வேண்டும். (வெளி. 1:3) பிரசுரங்களை அளிப்பது வெறுமனே சீஷராக்குவதற்கான முதற்படியாகும். கேட்க மனவிருப்பமுள்ளவர்களாயிருக்கிற அக்கறையுள்ள ஆட்களை ஒருமுறை கண்டுபிடித்தவுடன், இன்னும் அதிகத்தைக் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய நாம் உடனடியாக மீண்டும் செல்ல வேண்டும். ‘இப்பொழுதே தங்களுடைய மகத்தான சிருஷ்டிகரை நினைத்து,’ அதன்மூலம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள இளைஞருக்கும் மற்றவர்களுக்கும் நாம் உதவிசெய்வது அவசியம். (பிர. 12:1, NW) நம்முடைய மறுசந்திப்பில் நாம் எதைப்பற்றி பேசலாம்?
2 உங்களுடைய முதல் சந்திப்பில் இன்று இளைஞர் எதிர்ப்படுகிற பிரச்சினைகளைப் பற்றி பேசியிருந்தால், உங்களுடைய சம்பாஷணையை இம்முறையில் நீங்கள் தொடங்கலாம்:
◼“இன்றைய உலகில் இளைஞர் சகிக்கவேண்டிய நிலைமைகள் சிலவற்றை பற்றி இதற்கு முன்பு நாம் பேசினோம். இளைஞர் உட்பட, எல்லார்மீதும் யெகோவா அக்கறையுள்ளவராக இருப்பதால், அவருடைய வார்த்தையாகிய பைபிளில் வழிகாட்டு குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது, அநேக இளைஞர் அகப்பட்டுக்கொள்ளும் கண்ணிகளைத் தவிர்த்து வாழ்க்கையை அவர்கள் அனுபவித்து மகிழ உதவிசெய்யக்கூடும்.” இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தின் பொருளடக்க அட்டவணையைத் திறந்து காண்பித்து, பட்டியலிடப்பட்டுள்ள பொருள்களில் எது அவருடைய அக்கறையைக் கவருகிறது என்பதை வீட்டுக்காரரிடம் கேளுங்கள். உதாரணமாக, போதை மருந்துகள் என்ற பொருளை அவர் தெரிவு செய்வாராகில், பக்கம் 272-ல் உள்ள 34-ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள். பின்வரும் சில உபதலைப்புகளான: “போதை மருந்துகள் வளர்ச்சியைத் தடுக்கிறது,” “போதை மருந்துகள் என் உடல்நலத்தை பாழாக்குமா?” “போதை மருந்துகள்—பைபிளின் கருத்து,” என்பதற்கும் “முடியாது என்று நீங்கள் சொல்லலாம்!” என்ற உபதலைப்பின்கீழள்ள நடைமுறை ஆலோசனைக்கும் அவருடைய கவனத்தைத் திருப்புங்கள். அதிகாரத்தின் கடைசியிலுள்ள “கலந்துபேசுவதற்கான கேள்விகள்,” விஷயத்தை வாசகர் மறுபார்வை செய்வதற்கும் முக்கியக் குறிப்புகளைக் கிரகித்துக்கொள்வதற்கும் எவ்வாறு உதவிசெய்கிறது என்பதைக் காண்பியுங்கள். தவறாமல் சந்தித்து, இந்த முறையில் அவருடன் சேர்ந்து முழுப் புத்தகத்தையும் வாசியுங்கள்.
3 முதல் சந்திப்பில் நல்லாலோசனைக்கான ஊற்றுமூலத்தைப் பற்றி கலந்துபேசியிருந்தால், இந்தக் கேள்வியைக் கேட்பதன்மூலம் தொடருவதற்கு நீங்கள் தீர்மானிக்கலாம்:
◼“பள்ளி பாடங்களில் இளைஞர் கல்வியறிவு பெறுவது போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள். எரேமியா 10:23-ஐ வாசியுங்கள்.] உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, மேலான ஊற்றுமூலத்திலிருந்து வருகிற பயிற்சி அவசியமானது. கடவுளுடைய உதவியில்லாமல் வாழ்வதற்கான முயற்சிகள் நம்முடைய பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாய் இருக்கின்றன. கடவுளுடைய வார்த்தை மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கை நடத்துவதற்கு ஆலோசனைக்கான நம்பத்தக்க, காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ஊற்றுமூலமாக இருக்கிறது.” பக்கங்கள் 316 மற்றும் 317-ல் உள்ள பெட்டியை சுட்டிக்காட்டி, பைபிளின் நியமங்களை மதிக்கிற ஆட்களுடன் கூட்டுறவுகொண்டு படிப்பது வாழ்க்கையை அனுபவித்து மகிழுவதற்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்குமான படிகளாக இருக்கின்றன, இதைச் செய்வதற்கு, கூட்டங்கள் பைபிள் அடிப்படையிலான அறிவுரையின் நிலையான ஊற்றுமூலமாக இருக்கின்றன என்பதைக் காண்பியுங்கள்.
4 வேதப்பூர்வ கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு இதை முயற்சிசெய்ய நீங்கள் விரும்பலாம்:
◼இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் பக்கம் 318-ல் உள்ள விளக்கப்படங்களைக் காண்பித்து இவ்வாறு விளக்குங்கள்: “நம்முடைய படைப்பாளருடன் ஒரு நெருங்கிய உறவை வளர்ப்பது நாம் நித்திய நன்மைகளையடைவதை நிச்சயப்படுத்தக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நெருங்கிய உறவை அமைத்துக்கொள்வதற்கு ஒருவர் என்ன செய்வது அவசியம்? ஒரு படியானது தவறாமல் கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையைப் படிப்பதாகும்.” பக்கம் 308-ல் உள்ள உபதலைப்பைக் கலந்தாலோசித்து, மேலுமாக கற்றுக்கொள்வதற்கு நம்முடைய பைபிள் படிப்பு திட்டத்தை அனுகூலப்படுத்திக்கொள்ளும்படி வீட்டுக்காரருக்கு அழைப்புக் கொடுங்கள்.
5 நம்முடைய நோக்கம் பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதாக இருப்பதால், நாம் திறம்பட மறுசந்திப்புகளைச் செய்வது அவசியமாகும். அவற்றிற்காக நேரத்தைத் திட்டமிட்டு, நன்கு தயார்செய்யுங்கள். இந்த முறையில் நாம் நேர்மை இருதயமுள்ளோருக்கு உண்மையில் உதவிசெய்ய முடியும்.—வெளி. 22:6, 7.