1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மையடைவீர்—பகுதி 2
1 1943-ல், தேவராஜ்ய ஊழியப் பள்ளி தொடங்கின சற்று பின்னர், சொஸைட்டியின் ஒரு கிளை இவ்வாறு அறிக்கையிட்டது: “தாங்கள் மேடைப் பேச்சாளராகவே மாட்டோம் என்று நினைத்திருந்த பல சகோதரர்களுக்கு சிறிது காலத்திற்குள்ளே மேடையில் மிக திறமையுடன் பேசுவதற்கும், வெளி ஊழியத்தில் ஆற்றலுடன் பிரசங்கிப்பதற்கும் உதவியதன்மூலம் இந்த மிகச் சிறந்த ஏற்பாடு வெற்றியடைந்தது.” நம் எல்லாருக்கும் தேவையான, மிகச் சிறந்த பயிற்சியை இந்தப் பள்ளி தொடர்ந்து கொடுத்து வருகிறது.
2 பைபிள் வாசிப்பு: பேச்சு நியமிப்பு கொடுக்கப்பட்டவர்கள் மாத்திரமே பள்ளியிலிருந்து பயனடைவதில்லை. உண்மையிலே, நம் எல்லாருக்கும் ஒரு நியமிப்பு உண்டு—வாராந்தர பைபிள் படிப்பு. பைபிளில் எந்த அதிகாரங்களை ஒவ்வொரு வாரமும் படிக்க வேண்டும் என்று பள்ளி அட்டவணை காட்டுகிறது. பைபிளை தினந்தோறும் வாசிக்க வேண்டிய முக்கியத்துவத்தை அழுத்திக்காட்டவும் ஞாபகப்படுத்தவும் பல வேதவசனங்கள் உள்ளன. (யோசு. 1:8; சங். 1:2; அப். 17:11) நல்ல ஆவிக்குரிய சுகத்திற்கு பைபிள் வாசிப்பு இன்றியமையாதது; மனதையும் இருதயத்தையும் அது போஷிக்கிறது. நாம் ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் பைபிளைப் படித்தால், அட்டவணையை பின்பற்ற முடியும். வருட முடிவிலே, கடவுளுடைய வார்த்தையிலிருந்து 150 அதிகாரங்களுக்கும் மேலே படித்திருப்போம். ஒரு பைபிளை கையிருப்பில் வைத்திருந்தால், அதிலிருந்து சிலவற்றை ஒவ்வொரு நாளும் நாம் படிக்க இயலக்கூடும்.
3 போதகப் பேச்சு: போதகப் பேச்சைக் கொடுக்கும் சகோதரர் நல்ல போதனை முறைகளை அவசியமாகப் பயன்படுத்தினால்தான், புரிந்துகொள்ளுதலை அளித்து, யெகோவா, அவருடைய வார்த்தை, மற்றும் அவருடைய அமைப்பிற்கு போற்றுதலை கட்டியெழுப்பி, பற்றுமாறாத, வைராக்கியமான சேவைக்கு சகோதரர்களை உந்துவிக்க முடியும். மூப்பர்களும், உதவி ஊழியர்களும் நன்றாக தயார் செய்வதன்மூலமும், கருப்பொருளைச் சுற்றி தங்கள் பேச்சை ஒருமுகப்படுத்துவதன்மூலமும், திடநம்பிக்கையுடன் பேசுவதன்மூலமும், பொருளை உயிர்ப்புள்ளதாக செய்வதன்மூலமும் இதை நிறைவேற்ற முடியும். (எபி. 4:12) பேச்சாளர் தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பேச்சை முடிப்பது முக்கியம். “வேதவாக்கியங்கள் முழுவதும்” என்ற ஆங்கில புத்தகம் பைபிள் விஷயங்கள் நிறைந்ததாயும், ஆவிக்குரிய விதத்தில் நமக்கு பயனுள்ளதாயும் இருக்கிற, ஒழுங்குபடுத்தப்பட்ட உற்சாகமூட்டும் வேதவாக்கிய பொருட்களை அளிக்கிறது. அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகம் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் நவீன நாளைய சரித்திரத்தை உள்ளடக்கியும், விசுவாசம், வைராக்கியம், பக்தி மற்றும் அன்பை வெளிக்காட்டின உண்மையான மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் விவரிக்கிறது. நம்முடைய தேவராஜ்ய வரலாற்றைக் குறித்தும், நவீன காலங்களில் யெகோவா தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்த வழியைக் குறித்தும் தெரிந்துகொள்ள மிக அதிகம் இருக்கிறது. வணக்கத்தில் ஒன்றுபடுதல் புத்தகம் யெகோவாவின் ஆளுமையைப்பற்றி ஒரு ஆழமான உட்பார்வையைப் பெற்றிடவும், பைபிள் நியமங்களை தனிப்பட்டமுறையில் பொருத்துவதற்கும் நமக்கு உதவி செய்கிறது.
4 பைபிள் சிறப்புக் குறிப்புகள்: இந்த நியமிப்பு கொடுக்கப்பட்ட சகோதரர்கள், சபைக்கு பயனளிக்கும் விதத்தில் நடைமுறையில் பொருத்தக்கூடிய குறிப்பிட்ட வசனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நியமிக்கப்பட்ட அதிகாரங்களைப் படிப்பதையும், அதைப்பற்றி தியானிப்பதையும், அந்த வேதவசனங்களின் அர்த்தத்தை தெளிவாக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை ஆராய்வதையும் இது தேவைப்படுத்துகிறது. குறிப்பிட்ட பைபிள் வசனங்களைப் பற்றிய தகவலை கண்டுபிடிக்க, உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டக்ஸ்-ன் பின்பக்கத்திலுள்ள “வேதவசன பொருளடக்கம்” என்ற பகுதி உதவியாக இருக்கலாம். இந்தப் பகுதியை கையாளும் சகோதரர்கள் நல்ல பகுத்துணர்வை அப்பியாசித்து, சம்பந்தமில்லாத கூடுதல் தகவலை தவிர்க்க வேண்டும். நியாயமாக, ஆறு நிமிடத்திற்குள் முடிக்க முடிவதற்கும் மேலாக அவர்கள் பொருளைத் தயாரிக்கக்கூடாது.
5 தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து அனைவரும் பயனடையலாம். நம்முடைய பேச்சு மற்றும் போதனை திறமைகளை மேம்படுத்த அது உதவும். ‘நாம் தேறுகிறது யாவருக்கும் விளங்க’ இந்த ஏற்பாட்டை முழுமையாக பிரயோஜனப்படுத்திக்கொள்வது நமக்கு பயன்தரும்.—1 தீ. 4:15.