சாயங்கால சாட்சிகொடுத்தலை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?
1 நம்முடைய வேலையில் பலனுண்டாகச் செய்வோராக இருப்பதில் நாம் எல்லாரும் இன்பத்தைக் கண்டடைகிறோம். மறுபட்சத்தில், நன்மையான பலன்களை நாம் காணமுடியாதிருக்கையில், வேலை சலிப்பூட்டுவதாகவும் நிறைவேற்றமில்லாததாகவும் ஆகிவிடக்கூடும். அர்த்தமுள்ள உழைப்பு நமக்கு நற்பயனளிக்கிறது, ஆசீர்வாதமாகவும் உள்ளது. (பிரசங்கி 3:10-13-ஐ ஒப்பிடுக.) இந்த நியமத்தை நம் பிரசங்க ஊழியத்துக்கு நாம் பொருத்திப் பயன்படுத்தலாம். நாம் வீடுவீடாகச் சென்று, பைபிளைப்பற்றி ஆட்களிடம் உரையாட முடிகையில், ஆவிக்குரியப் பிரகாரமாக புதுக்கிளர்ச்சி ஊட்டப்பட்டவர்களாக நாம் வீட்டுக்குத் திரும்புவதை அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறோம். நாம் உண்மையில் ஒன்றை நிறைவேற்றினதாக உணருகிறோம்.
2 சில பகுதிகளில், நாளின் குறிப்பிட்ட சில மணிநேரங்களின்போது ஆட்களை வீட்டில் காண்பது வெகு கடினமாகிவிட்டிருக்கிறது. சில இடங்களில், காலை நேரத்தில் நாம் செல்கையில் 50 சதத்துக்கு மேற்பட்ட ஆட்கள் வீட்டில் இருப்பதில்லை என்று அறிக்கைகள் காட்டுகின்றன. சாயங்கால ஊழியத்துக்காக ஏற்பாடுகள் செய்வதன்மூலம் இந்தப் பிரச்சினையைப் பல சபைகள் கையாண்டிருக்கின்றன, நல்ல பலனையும் கண்டிருக்கின்றன. நாளின் பிற்பகுதியில் தாங்கள் சென்று சந்திக்கையில், அதிகப்படியான ஆட்கள் வீட்டில் இருக்கின்றனர், பொதுவில் மேலுமதிகமாக, அமர்ந்து ராஜ்ய செய்திக்குச் செவிகொடுத்துக் கேட்க மனமுள்ளோராயும் இருக்கின்றனர். உங்கள் பிராந்தியத்தில் சாயங்கால சாட்சிகொடுத்தலை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?—மாற்கு 1:32-34-ஐ ஒப்பிடுக.
3 மூப்பர்களே சாயங்கால ஊழியத்துக்காக ஏற்பாடு செய்யுங்கள்: சில பகுதிகளில் பிந்திய பிற்பகலில் அல்லது சாயங்கால தொடக்கத்தில் வெளி ஊழியத்துக்கான கூட்டங்கள் நல்ல முறையில் ஆதரிக்கப்பட்டிருக்கின்றன. பிற்பகலில் பள்ளியிலிருந்து வருகிற இளம் பிரஸ்தாபிகளுக்கும், அதன்பின் தங்கள் உலகப்பிரகாரமான வேலை முடிந்து வரும் பெரியோருக்கும் கவனம் செலுத்தலாம். வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்துக்குச் செல்ல முடியாத சில பிரஸ்தாபிகள், பிரசங்க ஊழியத்தில் தாங்கள் தவறாமல் பங்குகொள்ள, வாரநாட்களின்போது சாயங்கால ஊழியம் தங்களுக்கு நடைமுறைக்குரிய வழியாக இருப்பதாய்க் காண்கின்றனர்.
4 சாயங்கால ஊழியத்தின்போது நீங்கள் ஈடுபடக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் உள்ளன. பத்திரிகைகளைப் பயன்படுத்தி நீங்கள் வீடுவீடாகச் சாட்சி கொடுக்கலாம் அல்லது அந்த மாதத்திற்கான பிரசுர அளிப்பைப் பயன்படுத்தலாம். நாளின் காலை நேரத்தில் பிரஸ்தாபிகள் சென்றபோது அல்லது வார இறுதி நாட்களில், வீட்டில் இராத ஆட்களைச் சந்திப்பதற்குச் சாயங்காலம் உகந்த நேரமாயுள்ளது. வேலையிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும் ஆட்களைச் சந்திக்க அனுமதிப்பதாய், தெருவில் சாட்சி கொடுப்பதற்கும் நல்ல பிராந்தியம் இருக்கலாம். அக்கறை காட்டினவர்களிடம் மறுசந்திப்புகள் செய்வதற்கும் சாயங்காலம் மிகச் சிறந்த நேரமாயிருப்பதாகப் பலர் காண்கின்றனர்.
5 எச்சரிக்கையாயும் விவேகமாயும் இருங்கள்: அந்திவேளையில் அல்லது இருட்டிய பின்பு வெளியில் செல்வது சில பகுதிகளில் ஆபத்தாக இருக்கலாம். இருவராக அல்லது தொகுதிகளாக நல்ல விளக்கொளியுள்ள வீதிகளில் செல்வதும், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்ற ஏதாவது உறுதியிருக்கிற வீடுகளை அல்லது அடுக்கக கட்டடங்களை மாத்திரமே சந்திப்பதும் ஞானமாயிருக்கும். நீங்கள் கதவைத் தட்டுகையில், உங்களைப் பார்க்கக்கூடிய இடத்தில் நின்று, நீங்கள் யார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். பகுத்தறிந்துகொள்பவராக இருங்கள். குடும்பம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது போன்ற பொருத்தமற்ற வேளையில் நீங்கள் வந்துவிட்டதாகக் கண்டால், மற்றொரு சமயம் வருவதாகக் கூறுங்கள். பிந்திய நேரத்தில், இரவு தூங்குவதற்காக வீட்டிலுள்ளவர்கள் தயாராகிக்கொண்டிருக்கையில், சந்திப்புகளைச் செய்வதைப் பார்க்கிலும், உங்கள் ஊழியத்தைப் பொதுவாக சாயங்கால தொடக்க மணிநேரங்களுக்குத் திட்டமிட்டுக்கொள்வது மிக நல்லது.
6 கோடைக்கால நீண்ட சாயங்காலங்கள், முக்கியமாய் சாயங்கால ஊழியத்துக்குப் பொருத்தமானவை. கடவுளுக்கு “இரவும் பகலும் பரிசுத்த சேவையை” நாம் செய்கையில், நம்முடைய முயற்சிகளை யெகோவா நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார்.—வெளி. 7:15, NW.