மாலைநேர ஊழியத்தில் கலந்துகொள்ள முடியுமா?
1. ஒரு புத்தகம் சொல்கிறபடி பவுல் எந்தச் சமயத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்?
1 அப்போஸ்தலன் பவுல் வழக்கமாக “மாலை 4 மணியிலிருந்து இரவு வெகுநேரம் வரை” வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார் என பைபிள் காலங்களில் அனுதின வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. பவுல் வழக்கமாக இப்படித்தான் செய்தார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. இருந்தாலும், “நற்செய்திக்காக” எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். (1 கொ. 9:19-23) எனவே, எந்தச் சமயத்தில் அதிகமான ஆட்களைச் சந்திக்க முடியுமோ அந்தச் சமயத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய பவுல் நிச்சயம் தன் அட்டவணையில் மாற்றங்களைச் செய்திருப்பார்.
2. மாலைநேரத்தில் ஊழியம் செய்வது ஏன் சிறந்தது?
2 பொதுவாக பிரஸ்தாபிகள் வார நாட்களில் வீட்டுக்கு வீடு ஊழியத்தை காலையில்தான் செய்கிறார்கள். ஆனால், உங்கள் பிராந்தியத்தில் ஊழியம் செய்ய அதுதான் சிறந்த நேரமா? ஒரு பயனியர் தன்னுடைய பிராந்தியத்தைப் பற்றி சொல்கிறார்: “காலையில யாருமே வீட்டுல இருக்கிறதில்ல. சாயங்காலந்தான் நிறைய பேரு இருக்காங்க.” முக்கியமாக ஆண்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்க மாலைநேர ஊழியம் அல்லது மதிய ஊழியம் சிறந்த வாய்ப்பளிக்கும். பொதுவாக அந்தச் சமயத்தில் மக்கள் சாவகாசமாக இருப்பார்கள், நாம் சொல்வதைக் கேட்கவும் தயாராக இருப்பார்கள். இப்படிச் செய்வது பயனளிக்குமென்றால், மூப்பர்கள் மாலைநேரத்தில் வெளி ஊழியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. மாலைநேரத்தில் ஊழியம் செய்யும்போது எப்படி விவேகமாக நடந்துகொள்ளலாம்?
3 விவேகமாக நடந்துகொள்ளுங்கள்: மாலைநேர ஊழியம் செய்யும்போது விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, வீட்டுக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலோ வேறு ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தாலோ பிறகு வருவதாகச் சொல்லிவிட்டு வாருங்கள். இருட்டிவிட்டால், வீட்டுக்காரர் உங்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்த இடத்தில் நின்று பேசுங்கள்; உங்களைச் சட்டென அறிமுகப்படுத்திக்கொண்டு, எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். இரண்டு பேராகவோ தொகுதியாகவோ (இரண்டு பேர் ஒரு வீட்டில் பேசும்போது, மற்றவர்கள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் நிற்கலாம்) ஊழியம் செய்வது ஞானமானது. அதேசமயம், ஆள்நடமாட்டம் இருக்கும் வெளிச்சமான தெருக்களில் செய்யுங்கள். வீட்டுக்காரர் தூங்கப்போகும் நேரத்தில் போய் தொந்தரவு செய்யாதீர்கள். (2 கொ. 6:3) இருட்டிய பிறகு அந்தப் பகுதியில் இருப்பது ஆபத்தானது என்றால் இருட்டுவதற்கு முன்பே ஊழியத்தை முடித்துக்கொள்ளுங்கள்.—நீதி. 22:3.
4. மாலைநேரத்தில் ஊழியம் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
4 ஆசீர்வாதங்கள்: பிரசங்கிக்கப் போகும்போது ஆட்கள் வீட்டில் இருந்தால் அது அதிக சந்தோஷத்தைத் தரும். எந்தளவுக்கு அதிகமாக சாட்சி கொடுக்கிறோமோ அந்தளவுக்கு ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைந்து, மீட்புப் பெற’ மற்றவர்களுக்கு உதவ முடியும். (1 தீ. 2:3, 4) மாலைநேரத்தில் ஊழியம் செய்வதற்காக உங்கள் அட்டவணையில் மாற்றம் செய்ய முடியுமா?