கொஞ்ச நேரத்தை இதற்கு ஒதுக்க முடியுமா?
1 உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம், ‘மனுஷரைப் பிடிக்கும்’ வேலைக்கான அழைப்பை ஏற்றிருக்கிறோம். (மத். 4:19) மீன்கள் அகப்படுகிற நேரம் பார்த்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைப் போலவே, வீடுகளில் ஆட்கள் இருக்கும் நேரம் பார்த்துப் பிரசங்கிக்கச் சென்றால், இந்த ‘மீன்பிடி’ வேலையில் நாம் இன்னும் சிறந்த பலன்களைப் பெறலாம். அநேக தேசங்களில், வரப்போகிற மாதங்களிலே நீண்ட நேரத்திற்கு வெளிச்சம் இருக்கும். பிற்பகலிலும் மாலையிலும் நிறைய பேர் வீட்டில் இருப்பார்கள். அதுவும், ஜனங்கள் சற்று ஓய்வாக இருப்பதால், தங்கள் வீட்டிற்கு வருகிறவர்கள் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இருப்பார்கள். அவ்வேளைகளில் பிரசங்கிப்பதற்காக கொஞ்ச நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமா?—1 கொ. 9:23.
2 மாலை ஊழியம்: முன்கூட்டியே திட்டமிட்டு மாலை நேரங்களில் பிரசங்கிக்கச் செல்லும்போது, நிறைய ஆட்களிடம் நம்மால் நற்செய்தியைச் சொல்ல முடியும். (நீதி. 21:5) இளைஞர்கள், பள்ளி முடிந்தபின் பிரசங்க வேலையில் ஈடுபடலாம். வேலைக்குச் செல்பவர்கள், வேலை நேரம் முடிந்தபின் பிரசங்க வேலையில் ஈடுபடலாம். வாராந்தர புத்தகப் படிப்புத் தொகுதிகள் சில, புத்தகப் படிப்பிற்கு முன் ஒரு மணிநேரம் ஊழியம் செய்வதற்காக ஏற்பாடு செய்யலாம்.
3 பிற்பகலிலும் மாலையிலும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குச் செல்லும்போது, பொதுவாக வீட்டில் இல்லாதவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கலாம். அநேக பிராந்தியங்களில் மாலை நேரத்தின்போது தெரு ஊழியம் செய்யலாம், மற்ற விதங்களிலும் ஊழியம் செய்யலாம். மறுசந்திப்புகள் செய்வதற்கும் பைபிள் படிப்புகள் நடத்துவதற்கும் மிகச் சிறந்தது மாலை நேரமே என்பதை அநேகர் அனுபவத்தில் கண்டுள்ளார்கள்.
4 பகுத்துணர்வு தேவை: மாலை ஊழியத்தில் ஈடுபடும்போது பகுத்துணர்வைப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, வீட்டுக்காரர்கள் படுக்கப்போகிற நேரத்தில் அவர்களிடம் செல்லாமல், பொழுது சாயும்போதே ஊழியத்தை நிறுத்திக்கொள்வது நல்லது. (பிலி. 4:5, NW) கதவைத் தட்டும்போது, வீட்டுக்காரர்கள் உங்களைப் பார்க்க முடிந்த விதத்தில் நில்லுங்கள்; நீங்கள் யார் எவரென்று தெளிவாக அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் எதற்காக அவர்களைச் சந்திக்கிறீர்கள் என்பதைச் சட்டென்று சொல்லிவிடுங்கள். சில சமயங்களில் வீட்டிலுள்ளோர் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம்; அதுபோன்ற சந்தர்ப்பத்தில், பிறகு வருவதாகச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். எப்போதும் கரிசனையோடு நடந்துகொள்ளுங்கள்.—மத். 7:12.
5 ஆபத்தான சூழ்நிலைகளைக் குறித்தும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இருட்டப்போகிற வேளையில் அல்லது இருட்டிய பின், ஊழியம் செய்ய வேண்டியிருந்தால், இரண்டு பேராக அல்லது ஒரு தொகுதியாக வீடு திரும்புவது ஞானமான செயலாகும். வெளிச்சமுள்ள தெருக்களிலேயே பயணியுங்கள். பாதுகாப்பான இடங்களில் மட்டுமே ஊழியம் செய்யுங்கள். இருட்டின பிறகு பாதுகாப்பாய் இராத இடங்களில் ஊழியம் செய்வதைத் தவிருங்கள்.—நீதி. 22:3.
6 பிற்பகலிலும் மாலையிலும் ஊழியம் செய்வது, துணைப் பயனியராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்பவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய நமக்கு வாய்ப்பளிக்கலாம். (ரோ. 1:12, NW) ஆகவே, மாலை ஊழியத்தில் ஈடுபடுவதற்காக கொஞ்ச நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமா?
[கேள்விகள்]
1. பிற்பகலிலும் மாலையிலும் பிரசங்கிப்பதற்காக கொஞ்ச நேரத்தை நாம் ஏன் ஒதுக்க வேண்டும்?
2. என்னென்ன வழிகளில் நிறைய ஆட்களிடம் நாம் நற்செய்தியைச் சொல்லலாம்?
3. உங்கள் பிராந்தியத்தில் பிற்பகலிலும் மாலையிலும் எவ்வழிகளில் நீங்கள் ஊழியம் செய்யலாம்?
4. மாலை ஊழியத்தின்போது பகுத்துணர்வோடும் கரிசனையோடும் நடந்துகொள்வது ஏன் முக்கியம்?
5. பிரசங்கிக்கையில் வரும் ஆபத்துகளை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
6. பிற்பகலிலும் மாலையிலும் ஊழியம் செய்வதால் கூடுதலாக என்ன நன்மைகள் கிடைக்கின்றன?