பிரசங்கிக்க தகுதியானவர் யார்?
1 ஊழியம் என்று வந்துவிட்டால், நீங்கள் மோசேயை போல் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அவர் கூறினார்: “ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்கு பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல.” (யாத். 4:10) ஒருவேளை அவ்விதமாக நீங்கள் உணர்ந்தால், பிரசங்கிப்பதிலிருந்து பின்வாங்கும் மனச்சாய்வை பெறக்கூடும். இருப்பினும் இயேசு “ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், முழுமையான சாட்சிகொடுக்கவும் கட்டளையிட்டார்.” (அப். 10:42, NW) ஆகவே, எவ்வாறு நாம் நற்செய்திக்கு தகுதிபெற்ற பிரசங்கிப்பாளர்களாக ஆக முடியும்?
2 ஊழியத்திற்கு நம்மை தகுதியடையச்செய்வது உலகப்பிரகாரமான கல்வியின் அளவு அல்ல. பவுல் கூறினார், “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகர் அழைக்கப்படவில்லை,” மற்றும் “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.” (1 கொ. 1:26, NW; 3:19) இயேசு தம்முடைய அப்போஸ்தலரை தொழிலாளர் வர்க்கத்திலிருந்து—தொழிலின் அடிப்படையில் மீனவர்களாய் இருந்தவருள் குறைந்தது நால்வரையாவது—தேர்ந்தெடுத்தார். கர்வம்பிடித்த மதத்தலைவர்கள் அவர்களை “படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும்” வெறுப்போடு நோக்கினார்கள். உலகப்பிரகாரமான தராதரங்களால் தீர்க்கப்பட்டால், அந்த அப்போஸ்தலர் பிரசங்கிப்பதற்கு தகுதியற்றவர்களாக இருந்தார்கள். இருந்தும், பெந்தெகொஸ்தே நாளின்போது கொடுக்கப்பட்ட பேதுருவின் திறம்பட்ட பேச்சு, 3,000 பேரை முழுக்காட்டுதல் பெற தூண்டியதே!—அப். 2:14; 37-41; 4:13.
3 பிரசங்கிக்க யெகோவா நம்மை தகுதியடையச் செய்கிறார்: பவுல் அறிவித்தார்: “எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.” (2 கொ. 3:5) ஞானத்தின் ஊற்றுமூலராகிய யெகோவா, ராஜ்ய சத்தியத்தை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க லட்சக்கணக்கானோருக்கு கற்பித்திருக்கிறார். (ஏசா. 54:13) கடந்தாண்டு ஜீவனுள்ள ‘சிபார்சு கடிதங்களாக’ முழுக்காட்டப்பட்ட 3,38,491 பேர்களில் இந்த வேலையின் திறம்பட்ட விதத்தையும், பலன்தரும் தன்மையையும் காணலாம். (2 கொ. 3:1-3, தி.மொ.) யெகோவாவிடமிருந்து கற்ற காரியங்களைப்பற்றி மற்றவர்களுக்குத் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் பிரசங்கிக்க எல்லா காரணமும் நமக்கு இருக்கிறது.
4 கடவுளுடைய அமைப்பு, ஊழியர்களுக்காக ஒரு சர்வதேச பயிற்சி திட்டத்தை நிறுவியுள்ளது. நாம் பிரசங்கிக்க ‘தேறினவர்களாகவும், தகுதியுள்ளவர்களாகவும்’ ஆவதற்கு வேதவசனங்களின் வாயிலாகவும், திரளான பல்வேறு பைபிள் படிப்பு துணை நூல்கள் வாயிலாகவும் கல்வி புகட்டப்படுகிறோம் மற்றும் பயிற்றுவிக்கப்படுகிறோம். (2 தீ. 3:16, 17) சங்கத்தின் பிரசுரங்களில் காணப்படும் புலமையால் பலர் கவரப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு, சுவீடன் மொழி பத்திரிகை குறிப்பிட்டதாவது: “யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கும் விசுவாசத்திற்குப் பின்னால், குறிப்பிடத்தக்க விதத்தில் ஓர் உயர்தரமான, சர்வதேச கோணத்திலுள்ள பைபிள் அறிவு இருக்கிறது.”
5 வாராந்தர ஐந்து கூட்டங்களில் கொடுக்கப்படும் வழிநடத்துதலோடும், பைபிள் வாசிப்புக்கும் படிப்புக்குமான நமது திட்டத்தோடும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அளிக்கப்படும் அறிவுரையோடும், அனுபவமுள்ள ஊழியர்களாக இருக்கும் மற்றவர்களிடமிருந்து பெறும் தனிப்பட்ட உதவியோடும் எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவினுடைய பரிசுத்த ஆவியின் பக்கபலத்தோடும், பிரசங்கிக்க முழு தகுதியுள்ளவர்களாக யெகோவா நம்மை நோக்குகிறார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். “தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.”—2 கொ. 2:17.
6 கடவுள் தம்முடைய அமைப்பின் மூலம் அளித்திருக்கும் தேவராஜ்ய பயிற்றுவிப்பை முழுமையாக நாம் பிரயோஜனப்படுத்திக் கொள்வோமானால், பின்வாங்குவதற்கோ அல்லது பயப்படுவதற்கோ எந்தவொரு காரணமும் நமக்கு இருக்காது. யெகோவா நம் முயற்சிகளை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக, மற்றவர்களிடத்தில் நம்மால் மகிழ்ச்சிபொங்க பிரசங்கிக்க முடியும்.—1 கொ. 3:6.