நற்செய்தியை அறிவிப்பதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா?
1. நற்செய்தியை அறிவிப்பதற்கு நாம் தகுதியற்றவர்கள் என்று நாம் ஏன் நினைக்க வேண்டியதில்லை?
1 இப்படியொரு கேள்வி உங்கள் மனதில் எப்போதாவது எழுந்திருந்தால், கவலைப்பட வேண்டாம்! ஊழியராகத் தகுதி பெறுவதற்குப் பெரிய படிப்போ, விசேஷ திறமையோ தேவையில்லை. ஆரம்பகால சீடர்கள் சிலர், “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” எனக் கருதப்பட்டார்கள். இருந்தாலும், அவர்கள் நற்செய்தியைத் திறம்பட அறிவித்தார்கள்; ஏனென்றால், அவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றத் தீர்மானமாய் இருந்தார்கள்.—அப். 4:13; 1 பே. 2:21.
2. இயேசு போதித்த விதத்தை விவரியுங்கள்.
2 இயேசு போதித்த விதம்: அவருடைய போதனை எளிமையானதாகவும் நடைமுறையானதாகவும் புரிந்துகொள்வதற்குச் சுலபமானதாகவும் இருந்தது. அவர் பயன்படுத்திய கேள்விகள், உவமைகள், எளிய முன்னுரைகள் ஆகியவை கேட்போரின் கவனத்தை ஈர்த்தன. (மத். 6:26) அவர் மக்களிடம் உள்ளப்பூர்வமான அக்கறை காட்டினார். (மத். 14:14) அதுமட்டுமல்ல, ஊழியம் செய்வதற்குத் தம்மை யெகோவா நியமித்திருக்கிறார் என்பதையும், அதைச் செய்ய அவர் தமக்குப் பலமளித்திருக்கிறார் என்பதையும் அறிந்து நம்பிக்கையோடும் அதிகாரத்தோடும் பேசினார்.—லூக். 4:18.
3. ஊழியத்தைச் சிறப்பாகச் செய்ய நமக்கு யெகோவா எப்படி உதவுகிறார்?
3 யெகோவா நமக்கு உதவுகிறார்: நாம் பலன்தரும் விதத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு நம் மகத்தான போதகர் தம்முடைய வார்த்தையின் மூலமும் அமைப்பின் மூலமும் பயிற்சி அளிக்கிறார். (ஏசா. 54:13) இயேசு என்னென்ன முறைகளில் போதித்தார் என்பதை யெகோவா பைபிளில் பதிவு செய்து வைத்திருப்பதால், அவற்றை நம்மால் பகுத்தாராயவும் பின்பற்றவும் முடியும். யெகோவா தம்முடைய சக்தியை நமக்குத் தருகிறார்; சபைக் கூட்டங்கள் மூலமாக நம்மைப் பயிற்றுவிக்கிறார். (யோவா. 14:26) அதுமட்டுமல்ல, அனுபவமுள்ள பிரஸ்தாபிகளின் உதவியையும் அளிக்கிறார்; நாம் இன்னும் திறம்பட்டவர்களாக ஆவதற்கு அவர்கள் உதவுவார்கள்.
4. நற்செய்தியை அறிவிப்பதற்கு நாம் தகுதி பெற்றிருக்கிறோம் என ஏன் நம்பலாம்?
4 ‘கடவுளே நமக்குப் போதிய தகுதியை அளித்திருப்பதால்’ பிரசங்கிப்பதற்கு நாம் தகுதி பெற்றிருக்கிறோம் என உறுதியாய் நம்பலாம். (2 கொ. 3:5) நாம் யெகோவாவைச் சார்ந்திருந்து, உண்மைதவறாமல் அவருடைய அன்பான ஏற்பாடுகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அப்போது, “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு முழுமையான திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும்” பெற்றிருப்போம்.—2 தீ. 3:17.