நம்மையே மனப்பூர்வமாய் அளித்தல்
1 யெகோவாவின் ஜனங்கள் ‘தங்களையே மனப்பூர்வமாய் அளிப்பார்கள்,’ அதாவது, ‘உடனடியாக செயல்படும் வாலண்டியர்களாய்’ அளிப்பார்கள் என்பதாக சங்கீதக்காரன் தாவீது தீர்க்கதரிசனம் உரைத்தார். (சங். 110:3, NW அடிக்குறிப்பு) நம்முடைய உலகளாவிய சகோதர கூட்டுறவில் இது நிச்சயமாகவே நிறைவேறி வருகிறது. கடந்த நான்கு ஊழிய ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டின்போதும், ராஜ்ய நற்செய்தியைப் பரப்புவதற்காக யெகோவாவின் ஜனங்கள் நூறுகோடிக்கும் அதிகமான மணிநேரங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவிசெய்ய நம்மையே மனப்பூர்வமாய் அளிப்பதற்கு, பிரசங்கித்து சீஷராக்கும் வேலையோடுகூட, அநேக வழிகள் இருக்கின்றன.
2 நம்முடைய மனப்பூர்வமான தன்மையை நாம் காண்பிக்கக்கூடிய வழிகள்: சபையிலுள்ள சிலர் கூட்டங்களுக்கு வருவதற்கு உதவி தேவைப்படுகிறவர்களாய் இருக்கலாம். அவர்களை உங்களுடன் அழைத்துச்செல்வதற்கு ஏன் மனமுவந்து முன்வரக்கூடாது? வேறுசிலர் வியாதியாக இருக்கலாம், மோசமான உடல்நிலை மற்றும் வயோதிபத்தின் காரணமாக ஒன்றும் முடியாமல் இருக்கலாம், அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கலாம். அவர்களை சந்திப்பதற்கு அல்லது ஏதாவதொரு முறையில் உதவியாய் இருப்பதற்கு உங்களால் முன்வர முடியுமா? ஒரு தனிநபருக்கோ ஒரு குடும்பத்திற்கோ உற்சாகம் தேவைப்படலாம். உங்களுடைய குடும்பப் படிப்பில் இவர்களும் எப்பொழுதாவது சேர்ந்துகொள்ளும்படி அழைப்பதைக் குறித்து நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? ஒரு பயனியருக்கோ அல்லது பிரஸ்தாபிக்கோ ஊழியத்தில் ஒரு கூட்டாளி தேவைப்படலாம். ஊழியத்தில் அவர்களோடு சேர்ந்து வேலைசெய்வதற்கு ஏன் முன்வரக்கூடாது? உடன் விசுவாசிகளுக்கு மனப்பூர்வமாய் நன்மை செய்வதற்கு இவையெல்லாம் ஒருசில வழிகளாகும்.—கலா. 6:10.
3 மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கான தகுதிகளை அடைவதற்கு முயற்சி செய்வதன் மூலம் யெகோவாவின் அமைப்பில் பயன்படுத்தப்படுவதற்கு சகோதரர்கள் தங்கள் மனப்பூர்வமான தன்மையைக் காண்பிக்கலாம். (1 தீ. 3:2-10, 12, 13; தீத். 1:5-9) நாம் தொடர்ந்து எண்ணிக்கையில் வளருகையில், பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் சபையை மேய்ப்பதிலும் முன்நின்று வழிநடத்துவதற்கு தகுதிவாய்ந்த மனப்பூர்வமுள்ள சகோதரர்களுக்கான தேவை இருக்கிறது.—1 தீ. 3:1.
4 நம்மில் சிலர் அவ்வப்பொழுது துணைப் பயனியர் ஊழியம் செய்வதன் மூலம் அதிகளவில் யெகோவாவின் சேவைக்காக நம்மையே அளிக்க முன்வரலாம். அதோடுகூட, நம்முடைய அட்டவணையில் ஒருசில நியாயமான மாற்றங்களைச் செய்து, துணைப் பயனியர் சேவையை தொடர்ந்து செய்யலாம் அல்லது ஒழுங்கான பயனியர் சேவையில் தொடர்ந்து ஈடுபடலாம். உதவிக்கான தேவை அதிகமுள்ள பகுதிக்கு செல்லக்கூடிய சூழ்நிலைமைகள் நமக்கு இருக்கின்றனவா? பெத்தேலில் சேவை செய்வதற்கு நம்மால் முன்வர முடியுமா, இவ்வாறு உலகளாவிய வேலையின் வளர்ச்சிக்கு நேரடியாக நம்மால் உதவியளிக்க முடியுமா? ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், உலகமுழுவதும் கிளையலுவலக கட்டடங்கள் ஆகியவற்றை கட்டுவதில் பேரளவான வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன; இங்கு மனப்பூர்வமாய் சேவைசெய்வதற்கான தேவை அதிகமுள்ளது. இத்தகைய சிறந்த வேலைகளுக்காக தங்களையே மனமுவந்து அளிப்பவர்கள் அதிகமாக போற்றப்படுகிறார்கள், மேலும் அவர்கள் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்!—லூக். 6:38.
5 இவை கிளர்ச்சியூட்டும் காலங்கள். யெகோவா தம்முடைய ஆவியின் மூலம், அவருடைய மனப்பூர்வமான ஜனங்களைக் கொண்டு பூமியில் மலைக்கவைக்கும் வேலையைச் செய்துவருகிறார்! ராஜ்ய நடவடிக்கையில் அதிகமாக பங்குகொள்ளும்படி எப்பொழுதெல்லாம் யெகோவா தம்முடைய அமைப்பின் மூலம் அழைக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் நாம் இவ்வாறு நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது: ‘நான் இன்னும் என்னை மனப்பூர்வமாய் அளிக்க முன்வருகிறேனா?’ பின்பு நம்முடைய இருதயத்தையும் சூழ்நிலைமைகளையும் ஜெபசிந்தையுடன் ஆராய வேண்டும். பரிசுத்த சேவையில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு நம்முடைய தேவபக்தி நம்மை உந்துவித்து, இவ்விதமாய் யெகோவாவின் இருதயத்தை அதிகமாய் மகிழ்விக்கும்!—செப். 3:17.