நாம் ஏன் திரும்பத் திரும்ப செல்கிறோம்?
1 ஒருவேளை வெளி ஊழியத்திற்கு தயாராகும்போது இந்தக் கேள்வியை நீங்கள் உங்களிடமே எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஒரு வருடத்தில் எந்தளவு பிராந்தியத்தை முடிக்க முடியுமோ, அந்தளவு மாத்திரமே சங்கத்திடம் கேட்குமாறு இந்தியாவிலுள்ள சபைகளுக்கு இப்போது சொல்லப்படுவதன் காரணமாக, தொடர்ந்து புதுப் பிராந்தியங்களில் ஊழியம் செய்துவந்திருக்கும் சிலருக்கு, ஒவ்வொரு வருடமும் அதே பிராந்தியத்திற்கு செல்வது வித்தியாசமான உணர்வளிக்கலாம். திரும்பத் திரும்ப ஊழியம் செய்யப்பட்ட நம் பிராந்தியங்களின் சில பகுதிகளில், வீட்டுக்காரர்கள் நம்மை அடையாளங்கண்டுகொண்டு உடனடியாக நிராகரிக்கிறார்கள். சிலரே நல்ல விதத்தில் பிரதிபலிப்பார்கள். ஆனாலும், திரும்பத் திரும்பச் செல்வதற்கு அநேக பலமான காரணங்கள் இருக்கின்றன.
2 முதலாவதாக, முடிவு வரும்வரை நாம் ராஜ்ய செய்தியை தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டுமென கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (மத். 24:14; 28:19, 20) எவ்வளவு காலம் பிரசங்கிக்க வேண்டியிருக்குமோவென தீர்க்கதரிசியாகிய ஏசாயா நினைத்தார். அவர் பெற்ற பதில் ஏசாயா 6:11, 12-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கடவுளுடைய செய்தியை மக்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டுமென அவருக்கு சொல்லப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதேபோல் இன்றும், அநேகர் நம்மை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நமது பிராந்தியத்திலுள்ள மக்களை தொடர்ந்து சந்திக்கும்படி யெகோவா நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். (எசே. 3:10, 11) இது நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கும் ஒரு புனிதமான உத்தரவாதமாகும்.—1 கொ. 9:17.
3 நாம் திரும்பத் திரும்ப செல்வதற்கான மற்றொரு காரணம், யெகோவாவிற்கான நமது ஆழ்ந்த பயபக்தியைக் காண்பிப்பதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. (1 யோ. 5:3) அதுமட்டுமல்லாமல், சீக்கிரத்தில் மனிதவர்க்கம் அனுபவிக்கப்போகும் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்கையில், அன்பினால் நமது அயலாரை எச்சரிப்பதிலிருந்து நம்மைநாமே எப்படி தடை செய்ய முடியும்? (2 தீ. 4:2; யாக். 2:8) நமது வேலையை செய்துமுடிப்பதில் நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பது, இரட்சிப்பிற்குரிய கடவுளுடைய செய்திக்கு பிரதிபலிக்க தொடர்ச்சியான வாய்ப்புகளை அவர்களுக்கு அளிக்கிறது. ஆகவே தங்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்படவில்லை என அவர்கள் ஒருபோதும் சொல்ல முடியாது.—எசே. 5:13.
4 கூடுதலாக, சிலருக்கு எப்போது மனம் மாறும் என்பது நமக்கு தெரியவே தெரியாது. தனிப்பட்ட சூழ்நிலை, குடும்பத்தில் ஏதோவொரு சோக சம்பவம் அல்லது எதிர்காலத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியிருக்கும் உலக நிலைமைகள் போன்றவற்றால் அவர்கள் மனம் மாறியிருக்கலாம். பின், அவர்களிடம் நாம் சொல்லும் ஏதோவொரு காரியம் அவர்களை நல்ல விதத்தில் பிரதிபலிக்க தூண்டலாம். (பிர. 9:11; 1 கொ. 7:31) மேலும் மக்கள் இடம் மாறுகின்றனர். நம் பிராந்தியத்திற்கு புதிதாய் குடிவந்திருப்போர் நற்செய்திக்கு பிரதிபலிக்கலாம்—ஒருவேளை தனியாக வாழ்ந்துகொண்டு, தங்களது வாழ்க்கையின் நோக்கத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் நன்கு பிரதிபலிக்கலாம்.
5 இந்தியாவில் பிராந்தியத்திற்கு பஞ்சமே இல்லாததுபோல் சிலசமயம் தோன்றினாலும், இங்குகூட, பிரஸ்தாபிகள், எளிதில் மறுசந்திப்பு செய்ய முடியாதபடி அவர்களது வீடுகளிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் புதுப் பிராந்தியங்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதைக் காட்டிலும், ஒவ்வொரு வருடமும் ஒரே பிராந்தியத்தில் திரும்பத் திரும்ப ஊழியம் செய்து, மறுசந்திப்பு செய்வதில் சரியான கவனம் செலுத்தும்போது அதிக பலன் கிடைப்பதாக தெரியவந்திருக்கிறது. நாம் மக்களை அடிக்கடி சந்திக்கையில் குறைந்தபட்சமாக வருடத்திற்கு ஒரு முறையாவது சந்திக்கையில், அவருடைய வாழ்நாளில் ஒரே ஒருமுறை மாத்திரமே சந்திப்பதால் ஏற்படும் அபிப்பிராயத்தைக் காட்டிலும் வித்தியாசமான, மேம்பட்ட அபிப்பிராயத்தை இது அவர்களது மனதில் ஏற்படுத்தும். காலப்போக்கில் சபையிலுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சபையானது சங்கத்திடம் கூடுதலான பிராந்தியத்திற்காக கேட்கலாம்; ஆனாலும் ஒரு வருடத்தில் எவ்வளவு முடிக்க முடியுமோ அவ்வளவு மட்டுமே கேட்கலாம்.
6 நாம் திரும்பத் திரும்ப செல்வோமா? ஆம்! மக்களை திரும்பத் திரும்ப சந்திப்பதற்கு போதுமான தூண்டுதலை வேதவசனங்கள் அளிக்கின்றன. கடைசியில், பிரசங்க வேலை முடியும்போது, நாம் தொடர்ந்து முயற்சியெடுத்து பிரசங்கித்ததற்காக யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார். ராஜ்ய நற்செய்திக்கு சாதகமாக பிரதிபலித்தவர்களையும் அவர் ஆசீர்வதிப்பார்.—1 தீ. 4:16.