நாம் ஏன் திரும்பத் திரும்ப சந்திக்கிறோம்
1 அநேக இடங்களில் நாம் நம்முடைய பிராந்தியங்களை அடிக்கடி செய்து முடித்துவிடுகிறோம். வீட்டுக்காரருக்கு ஆர்வமில்லை என்று சொன்ன பிறகும் நாம் திரும்ப திரும்ப அதே வீடுகளையே சென்று சந்திக்கிறோம். முன்பு நாம் சொன்னதை காதுகொடுத்துக் கேட்காதவர்களையும் நாம் ஏன் திரும்ப சந்திக்கிறோம்?
2 யெகோவாமீதும் ஜனங்கள்மீதும் அன்பு: ஊழியத்தை நாம் விடாமுயற்சியோடு செய்வதற்கான தலையாய காரணம் யெகோவாமீது நமக்கிருக்கும் அன்பு. நம்முடைய மகத்தான கடவுளைப்பற்றி தொடர்ந்து சொல்ல நம்முடைய இருதயம் நம்மைத் தூண்டுகிறது. (லூக். 6:45) யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பு அவருடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியவும் மற்றவர்கள் கீழ்ப்படிய உதவவும் நம்மை உந்துவிக்கிறது. (நீதி. 27:11; 1 யோ. 5:3) நாம் இந்த வேலையில் உண்மையோடு சகித்திருப்பது மக்களுடைய பிரதிபலிப்பைச் சார்ந்தில்லை. சொல்லப்போனால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்கூட துன்புறுத்துதல்களை அனுபவித்தபோதிலும் “இடைவிடாமல்” தொடர்ந்து பிரசங்கித்து வந்தார்கள். (அப். 5:42) எனவே ஜனங்கள் நாம் சொல்வதைக் காதுகொடுத்து கேட்காதபோது, அதைப்பார்த்து நாம் சோர்ந்து போவதற்கு பதிலாக தொடர்ந்து உறுதியாக நிலைநிற்கவும் யெகோவாமீது நமக்கு எந்தளவுக்கு ஆழமான அன்பும் பயபக்தியும் இருக்கிறது என்பதைச் செயலில் காட்டவும் முடிகிறது.
3 நாம் ஊழியத்தை விடாமுயற்சியோடு செய்வதற்கான மற்றொரு காரணம் அக்கம்பக்கத்தார்மீது நமக்கிருக்கும் அன்பு. (லூக். 10:27) ஒருவரும் அழியக்கூடாது என்றே யெகோவா விரும்புகிறார். (2 பே. 3:9) நாம் அடிக்கடி ஊழியம் செய்த பிராந்தியத்தில்கூட யெகோவாவைச் சேவிக்க விரும்பும் ஜனங்களை இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு குவாடலூப் என்ற இடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே 56 பேரில் ஒருவர் யெகோவாவின் சாட்சியாக இருந்தபோதிலும் கடந்த வருடம் 214 பேர் முழுக்காட்டுதல் எடுத்தார்கள். 22 பேருக்கு ஒருத்தர் என்ற கணக்கில் கிட்டத்தட்ட 20,000 பேர் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள்!
4 பிராந்தியத்தில் மாற்றங்கள்: நம்முடைய பிராந்தியத்தில் ஜனங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறார்கள். முன்பு ஆர்வம் காட்டாத ஒருவருடைய வீட்டை மீண்டும் சென்று சந்திக்கும்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறோரு நபரை நாம் சந்திக்கலாம். அவர் அதற்கு முன்பு நம்முடைய செய்தியைக் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். எனவே நாம் சொல்வதை ஆர்வத்தோடு கேட்கலாம். அல்லது அந்த இடத்திற்கு புதிதாக குடிமாறி வந்தவர்கள் ஆர்வம் காட்டலாம். சிறுவயதில் பைபிள் படிக்க பெற்றோர்களால் அனுமதிக்கப்படாத பிள்ளைகள், வளர்ந்து பெரியவர்களாகி சொந்த காலில் நிற்பவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் நாம் சொல்லும் ராஜ்ய நற்செய்தியை ஆர்வத்தோடு கேட்கலாம்.
5 ஜனங்களுடைய மனநிலையும் மாறுகிறது. அப்போஸ்தன் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் அவர் ‘தூஷிக்கிறவரும், துன்பப்படுத்துகிறவரும், கொடுமைசெய்கிறவருமாய்’ இருந்தார். (1 தீ. 1:13) அவரைப்போலவே இன்று யெகோவாவைச் சேவிக்கும் அநேகர் ஒருகாலத்தில் சத்தியத்தில் ஆர்வம் காட்டாதவர்கள்தான். அதிலும் சிலர் ஆரம்பத்தில் நற்செய்திக்கு கடும் எதிர்ப்புகூட தெரிவித்திருக்கலாம். உலக நிலைமைகள் மாற மாற நம்மை எதிர்த்தவர்கள் அல்லது அசட்டை செய்தவர்கள் நம்முடைய செய்திக்குச் செவிசாய்க்கலாம். சிலர் தங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் கோர சம்பவத்தைச் சந்தித்த பிறகு அதாவது குடும்பத்தில் யாராவது மரணமடைந்தோ, திடீரென்று வேலையை இழந்திருந்தோ, பணப் பிரச்சினையால் அல்லல்பட்டாலோ அல்லது கடுமையான வியாதியால் அவதிப்பட்டாலோ நாம் சொல்வதை மிகுந்த ஆர்வத்தோடு கேட்கலாம்.
6 இந்தப் பொல்லாத உலகத்திற்கான முடிவு நெருங்கிகொண்டே வருகிறது. ஆனால் பிரசங்க வேலையும் போதிக்கும் வேலையும் படுவேகமாக போய்கொண்டே இருக்கிறது. (ஏசா. 60:22) எனவே நாம் தொடர்ந்து உற்சாகத்தோடு பிரசங்கிப்போம்; நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள கடுமையாக உழைப்போம். நாம் பேசும் அடுத்த நபர் நாம் சொல்வதைக் காதுகொடுத்து கேட்கலாம். அதற்கு நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கவேண்டும்! ‘இப்படிச் செய்வதனால் நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ள முடியும்.’—1 தீ. 4:16.
[கேள்விகள்]
1. வெளி ஊழியம் சம்பந்தமாக என்ன கேள்வி எழும்புகிறது?
2. ஊழியத்தை நாம் விடாமுயற்சியோடு செய்வதற்கான தலையாய காரணம் என்ன?
3. ஜனங்கள்மீதுள்ள அன்பு பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய நமக்கு எப்படி உதவும்?
4. என்னென்ன வழிகளில் பிராந்தியங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்?
5. ஜனங்கள் நாம் சொல்வதை ஆர்வத்தோடு கேட்பதற்கு எது காரணமாக இருக்கலாம்?
6. நாம் ஏன் தொடர்ந்து உற்சாகத்தோடு பிரசங்கிக்க வேண்டும்?