ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்?
1 நீங்கள் வசிக்குமிடத்தில் ராஜ்ய பிரசங்க வேலை பல காலமாக செய்யப்பட்டு வருகிறதா? (மத். 24:14) அப்படியென்றால், உங்களுடைய சபையின் பிராந்தியத்தில் போதுமான அளவு ஊழியம் செய்யப்பட்டுவிட்டதாக நீங்கள் உணரலாம். இப்போது அங்கிருக்கும் பெரும்பாலானோர் ராஜ்ய செய்திக்கு அக்கறை காண்பிக்காமல் இருக்கலாம். இருந்தாலும், ஏசாயா தீர்க்கதரிசனம் II-ம் புத்தகத்தில் பக்கம் 141-ல் இயேசுவின் உண்மையான சீஷர்களை பற்றி சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள்: ‘சில இடங்களில், உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன் ஊழியத்தில் கிடைக்காதது போல் தோன்றலாம். இருந்தாலும் அவர்கள் சகிக்கிறார்கள்’ என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்?
2 எரேமியாவை நினைத்துக்கொள்ளுங்கள்: நாம் பிரசங்க வேலையில் உண்மையோடு நிலைத்திருப்பது, ஜனங்கள் கேட்கிறார்களா இல்லையா என்பதை சார்ந்திருக்கக் கூடாது. சொற்பமானோரே எரேமியாவிற்கு செவிகொடுத்தனர், அநேகர் அவருடைய செய்தியை எதிர்த்தனர்; என்றாலும், அவர் 40 வருடங்களாக ஒரே பிராந்தியத்தில் பிரசங்கித்தார். எரேமியா ஏன் விடா முயற்சியோடு தொடர்ந்து பிரசங்கித்தார்? ஏனெனில், அது கடவுள் கொடுத்த வேலை; அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்திருந்ததாலும் தொடர்ந்து தைரியத்தோடு பிரசங்கிக்க தூண்டப்பட்டார்.—எரே. 1:17; 20:9.
3 நம் சூழ்நிலையும் அவ்வாறே உள்ளது. ‘அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், இயேசு நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.’ (அப். 10:42) நாம் பிரசங்கிக்கும் செய்தி, கேட்போருக்கு ஜீவனை அல்லது மரணத்தை அர்த்தப்படுத்துகிறது. நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதன் அடிப்படையிலேயே மக்கள் நியாயந்தீர்க்கப்படுவர். எனவே, நமக்கு கட்டளையிடப்பட்டதை செய்வதே நம் பொறுப்பாகும். ஜனங்கள் கேட்க மறுத்தாலும் நாம் செய்ய வேண்டிய வேலையை தொடர்ந்து செய்வது, அவர்கள் மீதுள்ள நம் அன்பின் ஆழத்தையும் யெகோவா மீதுள்ள நம் பக்தியின் ஆழத்தையும் வெளிக்காட்ட நமக்கு வாய்ப்பளிக்கும். அதுமட்டுமல்ல, வேறு நன்மைகளும் உள்ளன.
4 நமக்கும் நன்மை கிடைக்கிறது: பிராந்தியத்திலுள்ள ஜனங்களின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தாலும், கடவுளுடைய சித்தத்தை செய்வது நமக்கு மன சமாதானத்தையும், ஆத்ம திருப்தியையும், உள்ளான சந்தோஷத்தையும் தருகிறது; வேறு எதைச் செய்தாலும் இவை கிடைக்காது. (சங். 40:8) நம் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் பிறக்கிறது. ஊழியத்தில் எவ்வளவு அதிகமாக பங்குகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக கடவுளுடைய புதிய உலகில் வாழ்வதன் சந்தோஷத்திலும் நம்பிக்கையிலும் நம் மனமும் இருதயமும் ஊன்றிவிடுகின்றன. இந்த வேதப்பூர்வ வாக்குறுதிகளை தியானிப்பது நம் ஆவிக்குரிய தன்மையை முன்னேற்றுவித்து, யெகோவாவோடுள்ள நம் உறவை பலப்படுத்துகிறது.
5 நம் பிரசங்கத்தால் உடனடியாக பலன் கிடைக்கவில்லை என்றாலும் ஒருவருடைய இருதயத்தில் சத்தியத்தின் விதை விதைக்கப்படலாம்; யெகோவாவின் ஏற்ற சமயத்தில் அது துளிர்க்கலாம். (யோவா. 6:44; 1 கொ. 3:6) உள்ளூரில் அல்லது உலகமுழுவதிலும் யெகோவாவின் ஜனங்கள் எடுக்கும் முயற்சியால் ராஜ்யத்தை பற்றி இன்னும் எத்தனை பேர் அறிய வருவார்கள் என்பது நம்மில் யாருக்குமே தெரியாது.
6 எனவே, இயேசுவின் பின்வரும் அறிவுரைக்கு எப்போதையும்விட அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்: “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.” (மாற். 13:33, 37) ஆகவே, ராஜ்யத்தின் நற்செய்தியை நாம் அனைவரும் தொடர்ந்து பிரசங்கிப்போமாக; அவருடைய மகத்தான, பரிசுத்த பெயரை பரிசுத்தப்படுத்துவதில் பங்குகொள்வதன் மூலம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவோமாக.