நன்னடத்தையால் சாட்சி கொடுத்தல்
1 இன்று இருக்கும் கட்டுப்பாடில்லாத சமுதாயத்தில் அநேக இளைஞர்கள் போதை மருந்துகள், ஒழுக்கக்கேடு, கலகம், வன்முறை போன்றவற்றில் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கின்றனர். அதற்கு முற்றிலும் மாறாக கிறிஸ்தவ சபையில் உள்ள இளைஞர்களின் முன்மாதிரியான நடத்தை, கவனிப்பதற்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும் யெகோவாவின் பார்வையில் அழகானதாகவும் இருக்கின்றது. இது மற்றவர்கள் சத்தியத்திற்குள் கவர்ந்திழுக்கப்பட ஒரு பலமான சாட்சியாக அமைகிறது.—1 பே. 2:12.
2 கிறிஸ்தவ இளைஞர்களின் நல்ல நடத்தை கவனிப்பவர்களிடம் சாதகமான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அநேக அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பள்ளி ஆசிரியை ஒருவர் சாட்சியாயிருந்த தன் மாணவி ஒருத்தியைப் பற்றி வகுப்பில் உள்ள அனைவரிடமும் குறிப்பிட்டு பேசும்போது அந்த இளம் பெண்ணின் கடவுளாகிய யெகோவாவே உண்மையான கடவுள் என்று சொன்னார். அந்தப் பெண் எப்போதுமே மரியாதையாக நடந்து வந்ததால் இதை அவர் குறிப்பிட்டார். இன்னொரு ஆசிரியர் இவ்விதம் சங்கத்திற்கு எழுதினார்: “உங்கள் மதத்தில் உள்ள அருமையான இளைஞர்களுக்காக உங்களைப் பாராட்டுகிறேன். . . . உங்கள் இளைஞர்கள் நிச்சயமாகவே அருமையான முன்மாதிரியான நடத்தை உள்ளவர்கள். அவர்கள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள், சாந்தமாக இருக்கிறார்கள், அடக்கமான உடையணிகிறார்கள். அவர்கள் பைபிளை கரைத்துக் குடித்திருக்கிறார்கள்! மதம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!”
3 தன்னுடைய வகுப்பில் இருக்கும் ஏழு வயது மாணவனுடைய நன்னடத்தையால் ஒரு ஆசிரியை மனங்கவரப்பட்டார். சாந்தமான, விரும்பத்தக்க குணங்கள் அவனுக்கு இருந்தமையால் அவன் மற்றவர்களிடமிருந்து மிக வித்தியாசமானவனாக இருந்தான். தன்னுடைய மத நம்பிக்கைகளைக் குறித்து பொறுப்புணர்ச்சியுடன் அவன் நடந்துகொண்டான்; அவனுடைய நம்பிக்கைகள் வித்தியாசமாக இருந்ததற்காக அவன் வெட்கப்படவில்லை; இதைப் போன்ற அவனுடைய குணங்களால் அவர் வெகுவாக கவரப்பட்டார். அவனுடைய மனசாட்சி நன்கு பயிற்றுவிக்கப்பட்டதாக இருந்ததால் ‘எது சரி எது தவறு என்பதை தெளிவாக’ அவனால் கண்டுணர்ந்துகொள்ள முடிந்தது என்பதை அந்த ஆசிரியையால் புரிந்துகொள்ள முடிந்தது. (எபி. 5:14, NW) பின்னர் அந்த மாணவனின் தாய் அந்த ஆசிரியையை சந்தித்தார்; ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த ஆசிரியை முழுக்காட்டப்பட்டார், பின்னர் ஒழுங்கான பயனியராக ஆனார்!
4 தன்னுடைய பள்ளியில் படித்த ஒரு இளம் சாட்சி பெண்ணின் நடத்தையால் ஒரு இளைஞன் கவரப்பட்டான். அவள் நிச்சயமாகவே மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவளாக, பண்புள்ளவளாக, படிப்பில் சுட்டியாக இருந்தாள். அடக்கமான உடை உடுத்தினாள்; அவள் மற்ற பெண்களைப்போல் இளைஞர்களிடம் சரசம் செய்யவில்லை. அவள் பைபிள் நியமங்களின்படி வாழ்ந்தாள் என்பதை அந்த இளைஞனால் உணரமுடிந்தது. அந்த இளைஞன் அவளுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி கேட்டு, தான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் குறித்து ஆச்சரியப்பட்டான். இதன் விளைவாக பைபிளை அவன் படிக்க ஆரம்பித்து, விரைவிலேயே முழுக்காட்டுதல் பெற்று பயனியர் ஊழியம் செய்து பின்னர் பெத்தேல் ஊழியன் ஆனான்.
5 மற்றவர்களுக்கு நல்ல சாட்சிகொடுக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு இளம் கிறிஸ்தவராக நீங்கள் இருந்தால், எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் நடத்தையில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த உலகத்தின் கட்டுப்பாடற்ற மனப்போக்குகள், நோக்குநிலைகள் அல்லது வாழ்க்கை பாணிகள் போன்றவற்றிடம் மனம்சாய்ந்து படிப்படியாக உங்கள் கவனத்தை இழந்து விடாதீர்கள். உங்கள் பேச்சு, உடை, சிகையலங்காரம் ஆகியவற்றில் வெளி ஊழியத்தின்போதோ அல்லது சபைக் கூட்டங்களின் போதோ மட்டுமல்லாமல் பள்ளியிலும் பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும் ஓர் உயர்ந்த முன்மாதிரியாக திகழுங்கள். (1 தீ. 4:12) நல்நடத்தை மூலம், ‘உங்கள் ஒளியை பிரகாசிக்க செய்கையில்’ அதை கவனித்ததன் விளைவாக யாராவது சத்தியத்தை கற்றுக்கொள்ள கவரப்பட்டால் நீங்கள் உண்மையில் பெரு மகிழ்ச்சி அடைவீர்கள்.—மத். 5:16, NW.