உலகத்தில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிற இளைஞர்கள்
1 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று இயேசு தம் சீஷர்களிடம் கூறினார். (மத். 5:14, 16) மலை உச்சியில் உள்ள பட்டணம் சூரிய ஒளியில் பளிச்சென்று தெரிவது போல சீஷர்களும் பளிச்சென தனித்துத் தெரிவார்கள். இன்று, கிறிஸ்தவ இளைஞர்களாயிருக்கும் அநேகர் ‘சுடர்களைப் போல் பிரகாசிக்கிறார்கள்’; தங்கள் நன்னடத்தையாலும் வைராக்கியமான ஊழியத்தாலும் அவ்வாறு பிரகாசிக்கிறார்கள்.—பிலி. 2:14; மல். 3:18.
2 பள்ளியில்: நீங்கள் பள்ளியில் எப்படிச் சாட்சிகொடுக்கலாம்? போதைப்பொருள்கள், பரிணாமம், இயற்கைப் பேரழிவுகள் போன்ற விஷயங்களைக் குறித்து வகுப்பில் நடைபெறும் கலந்தாலோசிப்புகளை சில இளைஞர்கள் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். தீவிரவாதம் பற்றி ஒரு கட்டுரை எழுத ஒரு சகோதரிக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது; கடவுளுடைய ராஜ்யமே மனிதருக்கான நிஜ நம்பிக்கை என சாட்சி கொடுக்க அச்சந்தர்ப்பத்தை அவள் பயன்படுத்தினாள். நன்கு யோசித்து, அருமையாக எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை ஆசிரியரின் உள்ளத்தைக் கவர்ந்ததோடு, கூடுதலாகச் சாட்சி கொடுப்பதற்கும் வாய்ப்பளித்தது.
3 உங்கள் நடத்தையின் மூலமாகவும் அடக்கமான உடை மற்றும் எளிய தோற்றத்தின் மூலமாகவும் நீங்கள் சுடர்களைப் போல் பிரகாசிக்கலாம். (1 கொ. 4:9; 1 தீ. 2:9, 10) உங்களது நடை, உடை, பாவனை தனித்துத் தெரிவதை சக மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்கின்றனர்; எனவே, உங்கள் நன்னடத்தையினால் அவர்களில் சிலர் சத்தியத்தினிடம் கவரப்படுவார்கள், அப்போது பைபிள் சத்தியங்களைச் சொல்ல உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கலாம். (1 பே. 2:12; 3:1, 2) யெகோவாவுக்குப் பிரியமாக நடப்பது அத்தனை சுலபமல்ல, ஆனால் அவ்வாறு நடந்தீர்களென்றால் உங்களை அவர் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார். (1 பே. 3:16, 17; 4:14) நற்செய்தியினிடம் சக மாணவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுவதற்காக பைபிள் பிரசுரங்களை இடைவேளையின்போது நீங்கள் வாசிக்கலாம், அவற்றை மற்றவர்கள் பார்வையில் படும் விதத்திலும் வைக்கலாம்.
4 பள்ளியில் சுடர்களைப் போல் பிரகாசிப்பது, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, யெகோவாவுக்குச் சேவை செய்வதில் பெருமிதம்கொள்ள வைக்கிறது. (எரே. 9:24) உங்களுக்குப் பாதுகாப்பாகவும் அமைகிறது. ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “என்னுடைய நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதால், பைபிளுக்கு முரணான எந்தவொரு காரியத்தையும் செய்யச் சொல்லி மாணவர்கள் என்னைக் கட்டாயப்படுத்துவதில்லை, இது எனக்குக் கிடைக்கிற ஒரு பெரிய நன்மை.”
5 ஊழியத்தை விரிவாக்குதல்: தங்கள் ஊழியத்தை விரிவாக்குவதன் மூலமாகவும் அநேக இளைஞர்கள் சுடர்களைப் போல் பிரகாசிக்கின்றனர். ஒரு சகோதரர் உயர்நிலைக் கல்வியை முடித்த பிறகு, ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமாய் இருந்த இடத்தில் ஊழியம் செய்வதற்குச் சென்றார். ஒரே ஒரு மூப்பரைக் கொண்ட சிறிய சபையின் பாகமானார். “இங்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்” என்று அவருடைய நண்பருக்கு எழுதினார். “ஊழியத்திற்குப் போவது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? நாங்கள் சொல்கிற எல்லாவற்றையும் மக்கள் கேட்க விரும்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலேயும் 20 நிமிஷமாவது நாங்கள் பேசுகிறோம்” என்று அதில் சொன்னார், அதோடு, “என்னைப் போலவே ஒவ்வொரு இளைஞரும் ஊழியத்தில் ஈடுபட்டு, நான் அனுபவிக்கும் சந்தோஷத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். முழு ஆத்துமாவோடும் யெகோவாவுக்குச் சேவை செய்வதில் கிடைக்கிற சந்தோஷம் வேறெதிலும் கிடைக்காது” என்றும் குறிப்பிட்டார்.
6 இந்த உலகில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிற இளைஞர்களாகிய உங்களைக் குறித்து நாங்கள் எவ்வளவாய் பெருமைப்படுகிறோம்! (1 தெ. 2:20) உங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் யெகோவாவுக்குச் சேவை செய்கையில், ‘இம்மையிலே . . . நூறத்தனையாகவும், . . . மறுமையிலே நித்திய ஜீவனையும்’ கட்டாயம் பெறுவீர்கள்.—மாற். 10:29, 30; 12:30.
[கேள்விகள்]
1. கிறிஸ்தவர்கள் பளிச்சென தனித்துத் தெரிவார்கள் என்பதை பைபிள் எப்படிக் குறிப்பிடுகிறது, அது இன்று கிறிஸ்தவ இளைஞர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது?
2. ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் சாட்சிகொடுக்க உங்களுக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் உள்ளன?
3. நடத்தையின் மூலமாக பள்ளியில் நீங்கள் எப்படிச் சுடர்களைப் போல் பிரகாசிக்கலாம்?
4. பள்ளியில் சாட்சிகொடுப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
5. (அ) சில இளைஞர்கள் தங்கள் ஊழியத்தை எப்படி விரிவாக்குகின்றனர், (ஆ) உங்களுடைய ஆன்மீக இலக்குகள் யாவை?
6. எந்த விஷயத்தில் உங்கள் சபையிலுள்ள இளைஞர்களைக் குறித்து நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்?