‘சுடர்களைப் போலப் பிரகாசிக்கிறார்கள்’
1 இன்றைய உலகம் ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் இருண்டு கிடக்கிறது. ஆனாலும் உலகெங்கும் 234 நாடுகளில், மெய்க் கடவுளாகிய யெகோவாவை வணங்கும் சுமார் 60 லட்சம் பேர் ‘சுடர்களைப் போலப் பிரகாசிக்கிறார்கள்.’ (பிலி. 2:14) இது நம்மை தனியாக பிரித்துக் காட்டுகிறது. யெகோவாவிடமிருந்து வரும் மதிப்புமிக்க இந்த சத்திய ஒளியை நாம் எப்படி பிரதிபலிக்கலாம்?—2 கொ. 3:18.
2 நம் செயல்கள்: நம் நடத்தை மற்றவர்களின் கண்களுக்கு பளிச்சென தெரிகிறது. (1 பே. 2:12) வேலை பார்க்கும் இடத்தில் யெகோவாவின் சாட்சி ஒருவர் அன்பாக, ஒத்துழைப்பவராக இருப்பதையும் ஆபாசமான வார்த்தைகளை பேசாமல் அல்லது அசிங்கமான ஜோக்குகளுக்கு சிரிக்காமல் இருப்பதையும் ஒரு பெண் கவனித்தாள். ஆபாசமான விஷயங்களைப் பேசி அவருக்கு எரிச்சலூட்ட மற்றவர்கள் முயற்சி செய்த போதும், அவர் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்; அதே சமயத்தில் எது சரியோ அதை செய்வதில் உறுதி காட்டினார். இதைக் கண்ட அந்தப் பெண் என்ன செய்தாள்? “அவருடைய நடத்தை என்னை ரொம்பவே கவர்ந்தது. அதனால் பைபிளைப் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். கடவுளுடைய வார்த்தையை படித்து, முழுக்காட்டுதலும் பெற்றேன்” என்று அந்தப் பெண் கூறுகிறாள். “யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு அவருடைய நடத்தைதான் என்னைத் தூண்டியது” என்றும் அவள் கூறுகிறாள்.
3 அதிகாரிகளிடம் நம்முடைய மனப்பான்மை, உலக பழக்கவழக்கங்களின் பேரில் நம் நோக்குநிலை, ஆரோக்கியமான பேச்சு இவையெல்லாம் யெகோவாவின் சாட்சிகளை தனியாக பிரித்துக் காட்டுகின்றன; அவர்கள் பைபிளின் உயர்ந்த தராதரங்களின்படி வாழ்பவர்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய நற்செயல்கள் யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பதோடு, மற்றவர்களையும் அவருடைய வணக்கத்திடம் கவர்ந்திழுக்கின்றன.
4 நம் சொற்கள்: நம்முடைய சிறந்த நடத்தையை பார்ப்பவர்களுக்கு, நாம் ஏன் வித்தியாசமாக இருக்கிறோம் என்பது தெரியாதுதான். நம்முடைய மத நம்பிக்கைகளைப் பற்றி சொன்னால்தான் அது அவர்களுக்குப் புரியும். நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பது உங்களோடு வேலை பார்ப்பவர்களுக்கு அல்லது சக மாணவர்களுக்கு தெரியுமா? அவர்களிடம் சாதாரணமாக பேசும்போதே சாட்சி கொடுக்க நீங்கள் முயலுகிறீர்களா? தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘உங்கள் வெளிச்சத்தை மனுஷர் முன்பாகப் பிரகாசிக்கச் செய்வதே’ உங்கள் தீர்மானமாக இருக்கிறதா?—மத். 5:14-16.
5 சுடர்களைப் போல் பிரகாசிப்பவர்களாய் நம் பணியை செய்து முடிப்பதற்கு சுயதியாக மனப்பான்மை வேண்டும். உயிர்காக்கும் வேலையாகிய பிரசங்கித்து சீஷராக்கும் வேலையை நம்மால் முடிந்தளவுக்கு செய்வதற்கு, அற்பமான காரியங்களை விட்டுவிட முழு ஆத்துமாவோடுகூடிய மனநிலை நம்மைத் தூண்டும்.—2 கொ. 12:15.
6 நமது சொல்லாலும் செயலாலும் தொடர்ந்து சுடர்களைப் போலப் பிரகாசிப்போமாக. அப்போது யெகோவாவுக்கு மகிமையைச் சேர்ப்பதில் மற்றவர்களும் நம்முடன் சேர்ந்துகொள்ள தூண்டப்படலாம்.