1999-ம் ஆண்டுக்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் நிகழ்ச்சிநிரலிலிருந்து பயனடையுங்கள்
1 இயேசு மிகச் சிறந்த போதகர். ஜனங்கள், ‘அவர் போதிக்கும் முறையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார்கள்.’ (மாற். 1:22, NW) இயேசுவைப் போல் நம்மில் யாரும் பேசவும் முடியாது, கற்பிக்கவும் முடியாது; ஆனால் முயற்சி செய்தால் நம்மால் அவரைப் பின்பற்றமுடியும். (அப். 4:13) அதற்கு, நம்முடைய பேச்சுத் திறமையிலும் கற்பிக்கும் தன்மையிலும் முன்னேற்றம் செய்ய தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பங்குகொள்வது நமக்கு உதவும்.
2 ஆண்டு 1999-ல், பேச்சு எண் 1, 1997-ம் வருட காவற்கோபுர, விழித்தெழு! பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தயாரித்து கொடுக்கப்படும். பள்ளி நிகழ்ச்சிநிரலின்போது கேட்பதற்கு முன்பாகவே நாம் அவற்றை படித்துவிட்டு வந்திருந்தால், அது ஆவிக்குரிய காரியங்களை சிறந்த விதத்தில் புரிந்துகொள்ளும் நம் திறமையை முன்னேற்றுவிக்கும். இந்தப் போதனா பேச்சைக் கொடுப்பவர்கள், சொல்லப்படும் விஷயம் நடைமுறைக்கு எப்படி பொருந்தும் என குறிப்பிடுவதோடு ஆர்வத்தைத் தூண்டும் விதத்திலும் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் அதை அளிக்க வேண்டும். 3-வது பேச்சு, குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தின் அடிப்படையில் இருக்கும். 4-வது பேச்சு, பைபிள் கதாபாத்திரத்தைப் பற்றியதாய் இருக்கும். ஒருவேளை வெவ்வேறு பிரசுரங்கள் உபயோகிக்கப்படலாம். பேச்சுகளை நியமிப்பதற்கு முன்பு அப்பொருளுக்கு பள்ளிக் கண்காணி அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப மகிழ்ச்சி புத்தகத்திலிருந்து பேச்சு நியமிக்கப்படுகையில், மாணாக்கர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் நல்ல முன்மாதிரி வைப்பவர்களாய் இருக்க வேண்டியது அவசியம்.
3 புத்திமதிக்கு செவிசாய்த்து நன்கு தயாரியுங்கள்: பேசுவதும் கற்பிப்பதும் ஒருவித கலை என்றே சொல்லலாம்; அவற்றில் நாம் ஒவ்வொருவரும் திறம்பட்டவர்களாவதற்கு வாய்ப்பிருக்கிறது. (1 தீ. 4:13) எனவே, சொல்லப்படும் புத்திமதியை ஏற்க மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; அது ஒரு பொருட்டல்ல என்று அசட்டையாக இருக்கக்கூடாது. (நீதி. 12:15; 19:20) கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் பலன்தரத்தக்க விதத்தில் சத்தியத்தை பேச வேண்டுமானால், விஷயத்தை அப்படியே சொல்வது மட்டுமோ அல்லது வசனங்களை அலுப்புத்தட்டும் விதமாக வாசிப்பது மட்டுமோ போதாது. கேட்பவர்களின் இருதயத்தில் பதியுமாறும், அதற்கேற்ப செயல்படத் தூண்டுமாறும் பேச வேண்டும். நம்முடைய இருதயத்திலிருந்து பேச வேண்டும்; அது நம்பத்தக்க வகையில் இருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 2:37-ஐ ஒப்பிடுக.) தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பெறும் ஆலோசனை இதைச் செய்ய நமக்கு உறுதுணையாய் இருக்கும்.
4 உங்களுக்கு பேச்சு நியமிப்பு கிடைத்த உடனேயே, பள்ளி துணைநூலில் உள்ள நீங்கள் உழைக்க வேண்டிய பேச்சுப் பண்புகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள். நீங்கள் முன்பு பெற்ற ஆலோசனையைப் பொருத்த என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் சிந்தியுங்கள். நீங்கள் எந்தத் தலைப்பில் பேசப் போகிறீர்கள் என்றும் அதற்கு ‘செட்டிங்’ எவ்வாறு அமைக்கப் போகிறீர்கள் என்றும், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியிலுள்ள வசனங்களை எவ்வாறு பொருத்திக் காட்டப்போகிறீர்கள் என்றும் முன்கூட்டியே தியானியுங்கள். இந்தத் தகவலை கற்பிப்பதற்கும் செயல்பட தூண்டுவிப்பதற்கும் எந்தளவுக்கு நாம் சிறப்பாக உபயோகிக்கலாம் என்பதைக் குறித்து சிந்தியுங்கள்.—1 தீ. 4:15, 16.
5 நீங்கள் பள்ளியில் சேர்ந்துகொள்ள பயப்படுகிறீர்கள் என்றால் அதைக் குறித்து ஜெபியுங்கள்; பின்பு உங்கள் மனதில் எப்படி உணருகிறீர்கள் என்பதைக் குறித்து பள்ளிக் கண்காணியிடம் பேசுங்கள். 1999-ம் ஆண்டுக்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அளிக்கவிருக்கும் நிகழ்ச்சிநிரலை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதன்மூலம் எல்லாரும் பிரயோஜனமடையலாம்.