பழைய புத்தகங்களை நன்கு பயன்படுத்துவோமாக
1 பூமியில் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் உள்ள நூலகங்களில் லட்சோப லட்சம் பழைய புத்தகங்களை மனிதன் குவித்துவைத்துள்ளான். ஆனால் மனித இனத்திற்கு அவை என்ன நித்திய நன்மையைத் தந்திருக்கின்றன? (பிர. 12:12) கடவுளுடைய ராஜ்யத்திற்கும், அந்த ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு செய்யப்போகும் காரியங்களுக்கும் கவனத்தை ஒருமுகப்படுத்தும் பிரசுரங்களே மிக மிக மதிப்புவாய்ந்த பிரசுரங்கள். இத்தகைய பல்வகை புத்தகங்களை பெரும்பாலான சபைகள் கையிருப்பில் வைத்திருக்கின்றன. ஜனவரியில் இந்தப் பழைய புத்தகங்களை பொதுமக்களுக்கு நாம் வழங்குவோம்.
2 அவை உண்மையான மதிப்புடையவை: நம்முடைய புதிய பிரசுரங்களோடு ஒப்பிட இவையெல்லாம் காலாவதியானவை என நம்மில் சிலர் நினைக்கலாம்; ஆனால் அவற்றில் ஆவிக்குரிய சத்தியங்கள் பொதிந்துள்ளன என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். அவை விளக்கும் ராஜ்ய செய்தி இன்றும் மதிப்புடையது. அதற்கு செவிகொடுத்தால், உயிரை காக்கும். (யோவா. 17:3) ஆகவே, இந்தப் பழைய புத்தகங்களை நல்லவிதத்தில் பயன்படுத்திக்கொள்ள நாம் கூடுதலான முயற்சியெடுக்க வேண்டும்.
3 ஏராளமான உவாட்ச் டவர் பிரசுரங்களை தன்னுடைய பாட்டியிடமிருந்து பெற்ற ஒரு பெண்ணின் அனுபவம் அதன் உண்மையான மதிப்பை வலியுறுத்திக் காண்பிக்கிறது. அந்தப் பிரசுரங்களின் மதிப்பை பற்றி தெரியுமா என்று ஒரு சாட்சி அவரிடம் கேட்டார். அந்தப் பெண் பதிலளித்தார்: “அதனுடைய மதிப்பு எனக்குத் தெரியாது, ஆனால் அதை நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்?” அந்தப் பெண் ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு, சத்தியத்திற்குள் வந்தார்; அதன்பின்பு தன் பாட்டியின் நூலகத்தைப் பொக்கிஷமாக கருதினார். அந்தப் பழைய பிரசுரங்களின் தொகுப்பு எப்பேர்ப்பட்ட மதிப்புமிக்க சொத்தாக இருந்தது!
4 அவற்றை வலம்வரச் செய்யுங்கள்: இந்தப் பழைய புத்தகங்களை வீட்டுக்கு வீடு கொடுப்பதோடுகூட, நம்முடைய பிரசுரங்களை வாசித்து மகிழும் ஆட்களை நீங்கள் மீண்டும் சந்திக்கச் செல்லும்போதும் அவற்றை கொடுக்க மறவாதீர்கள். அதோடு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தா செய்திருக்கிறவர்களுக்கும் உங்களுடைய பத்திரிகை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும்கூட கொடுங்கள். உங்களுடன் பைபிள் படிப்பவர்களுக்கு, தெரிந்தெடுக்கப்பட்ட பழைய பிரசுரங்கள் சத்தியத்தைப் பற்றி விரிவாக புரிந்துகொள்வதற்கான பின்னணி அறிவைக் கொடுக்கும். இந்தப் பழைய புத்தகங்களில் ஏதாவது உங்களிடம் சொந்தமாக இல்லையென்றால் பெற்றுக்கொள்ளத் தவறாதீர்கள். இந்த முறையில், மதிப்புமிக்க தேவராஜ்ய நூலகத்தை நீங்கள் உருவாக்க முடியும்; அது உங்களுடைய தனிப்பட்ட படிப்பை சுவாரஸ்யமாக்கலாம்.
5 நம்முடைய பழைய புத்தகங்களை அலமாரியில் அலங்காரப் பொருளாக வைப்பதற்குப் பதிலாக, நாம் சந்திக்கிற ஆட்களை ‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளத்’ தூண்டுவதற்கு அவற்றை நன்கு பயன்படுத்துவோமாக.—பிர. 12:13.