குடும்ப அங்கத்தினர் முழுமையாய் ஒத்துழைப்பது எப்படி—சபை கூட்டங்களில்
1 சபை கூட்டங்களில் கூடி வரவேண்டும் என்ற கட்டளைக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் கீழ்ப்படிய வேண்டும். (எபி. 10:24, 25) நல்ல ஒத்துழைப்பு இருந்தால், கூட்டங்களுக்காக தயார் செய்வதில், ஆஜராவதில், பங்குகொள்வதில் அனைவருமே பலனடையலாம். ஒவ்வொரு குடும்பத்தின் சூழ்நிலையும் வேறுபடுகிறது; ஆனாலும் ஆவிக்குரிய விஷயங்களில் முழு குடும்பமும் பங்குகொள்ள கிறிஸ்தவ கணவன், கிறிஸ்தவ மனைவி அல்லது ஓர் ஒற்றைப் பெற்றோர் செய்யக்கூடிய காரியங்கள் இருக்கின்றன. அவர்களுடைய வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் சரி, அவர்களுடைய வயது என்னவாக இருந்தாலும் சரி இதைச் செய்யலாம்.—நீதி. 1:8.
2 நேரமெடுத்து தயாரியுங்கள்: சபை கூட்டங்களுக்காக ஒவ்வொருவரும் நன்றாக தயாரித்திருக்கிறார்களா என்பதை கவனிக்க குடும்ப அங்கத்தினர்கள் ஒத்துழைக்கலாம். அநேக குடும்பங்களில், வாரா வாரம் நாம் படிக்கும் காவற்கோபுர கட்டுரையை ஒன்றாக சேர்ந்து தயாரிக்கின்றனர். சிலர் சபை புத்தக படிப்பிற்காக தயாரிக்கின்றனர் அல்லது வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை குடும்பமாக சேர்ந்து வாசிக்கின்றனர். இதன் பிரதான நோக்கம், கூட்டங்களுக்கு செல்வதற்கு முன்பாகவே முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்வது. இவ்வாறு செய்தால், கூட்டங்களில் கேட்கும்போது எல்லாருமே இன்னுமதிக பயனடையலாம்; சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பங்குகொள்ளவும் தயாராக இருப்பர்.—1 தீ. 4:15.
3 பங்குகொள்ள திட்டமிடுங்கள்: கூட்டங்களில் பதில் சொல்வதன் மூலம் மற்றவர்கள் முன்பாக தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவதை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் குறிக்கோளாக வைக்கவேண்டும். (எபி. 10:23) இதைச் செய்ய குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு உதவியோ உற்சாகமோ தேவையா? தேவராஜ்ய ஊழியப் பள்ளி நியமிப்புகளை தயாரிக்க ஒவ்வொருவருக்கும் என்ன உதவி தேவை? கணவன்மார்கள், தாமாகவே முன்வந்து, பொருத்தமான ஓர் உதாரணத்தை அல்லது நடைமுறைக்கு உதவும் பேச்சு அமைப்பை பேச்சில் உபயோகிக்க தங்கள் மனைவிகளுக்கு ஆலோசனை கொடுக்கும்போது அதைப் பெரிதும் அவர்கள் போற்றுகின்றனர். சிறு பிள்ளைகளுக்காக தாங்கள் பேச்சை தயாரித்து தரவேண்டும் என பெற்றோர் உணரவேண்டியதில்லை. அவ்வாறு செய்தால் குழந்தைகளின் படைப்புத்திறன் மந்தமாகலாம். மாறாக, பெற்றோர் தங்கள் இளம் பிள்ளைகளுக்கு உதவலாம்; அவர்கள் சப்தமாக பழகிப் பார்க்கும்போது கவனிக்கலாம்.—எபே. 6:4.
4 ஆஜராக ஒழுங்கமையுங்கள்: ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டத்திற்காக டிரெஸ் செய்து, ரெடியாவதற்கு சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். வீட்டு வேலைகள் காரணமாக தாமதமாகி விடாதபடி குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் அதில் ஒத்துழைக்கலாம்.—குடும்ப மகிழ்ச்சி புத்தகம், பக்கம் 112 மற்றும் இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம், பக்கங்கள் 316-17-ல் உள்ள ஆலோசனைகளைக் காண்க.
5 “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என பைபிள் காலத்தில் வாழ்ந்த யோசுவா சொன்ன வார்த்தைகளை பெற்றோரும் பிள்ளைகளும் தியானிப்பது நல்லது. பின்னர், சபை கூட்டங்களில் முழு பங்கு வகிப்பதற்கு ஒத்துழைக்க தீர்மானமுள்ளவர்களாய் இருங்கள்.—யோசு. 24:15.