புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
யெகோவாவோடு சேர்ந்து நடப்பதில் என்ன நடைமுறையான பலன்களை இப்போது காண்கிறீர்கள்? ராஜ்ய அக்கறைகளுக்குப் பதிலாக மற்ற நாட்டங்களுக்கு முதலிடம் தருவதை எவ்வாறு தவிர்க்கலாம்? (மத். 6:33) தவறை சரியென காட்டும் இந்த உலகத்தில், எது சரி எது தவறு என புரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறீர்களா? (எபி. 5:14) இந்த விஷயங்கள் அனைத்தும் “கடவுளுடைய வழியில் நடந்து இப்போதே பயன்பெறுங்கள்” என்ற வட்டார மாநாட்டில் சிந்திக்கப்படும். இம்மாநாடு பிப்ரவரி 2000-லிருந்து ஆரம்பமாகும்.—சங். 128:1.
சனிக்கிழமையன்று, ஊழியக் கூட்டம் ஒன்று நடத்தப்படும். இது இந்த வட்டார மாநாட்டின் ஒரு புதிய அம்சம். இதைக் குறித்த கூடுதலான விவரங்களை வட்டார கண்காணி சபைகளுக்குத் தெரிவிப்பார். ஆகவே அனைவரும் நிகழ்ச்சியை முழுமையாய் அனுபவித்து மகிழலாம்.
“பயனியர்களே—உங்கள் நடையைக் குறித்து உஷாராயிருங்கள்” என்ற பகுதி, புத்திசாலித்தனமாகவும் வாழ்க்கையின் மற்ற தேவைகளை பாதிக்காமலும் பயனியர் ஊழியத்தை எப்படி செய்யலாம் என்பதை காண்பிக்கும். (எபே. 5:15-17) “பார்வைக்கு சரியென தோன்றுகிற வழிகளைக் குறித்து ஜாக்கிரதை” என்ற பேச்சு, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடவுளுக்குப் பிரியமாக எவ்வாறு நடந்துகொள்ளலாம் என காட்டும். “தீர்க்கதரிசன நிறைவேற்றம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது” என்ற பேச்சு, கடவுளுடைய வார்த்தை மீது நம் அன்பை பெருகச் செய்யும். “கடவுளுடைய வழிகள்—எந்தளவு பயன்மிக்கவை!” என்ற பொதுப் பேச்சு, யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களுக்கு இசைவாக நடப்பதால் இப்போது நாம் அடையும் நடைமுறையான பலன்களை வலியுறுத்தும்.
கடவுளது ஒப்புக்கொடுத்த ஊழியராக அவரது வழிகளில் நடக்க விரும்புவதை முழுக்காட்டுதல் மூலம் வெளிப்படையாக காட்ட விரும்புகிறீர்களா? நடத்தும் கண்காணியிடம் பேசுங்கள். தேவையான ஏற்பாடுகளைச் செய்ய இது உதவும்.
காலத்திற்கேற்ற இந்த வட்டார மாநாட்டை தவறவிடாதிருக்க உறுதியாயிருங்கள். இரண்டு நாள் நிகழ்ச்சிநிரல்களிலும் கலந்துகொள்ளுங்கள். ஏனெனில், “யெகோவாவிற்கு பயந்து அவர் வழிகளில் நடப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.”—சங். 128:1, NW.