“அள்ளி வழங்க ஆயத்தமாக இருங்கள்”
1 பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தீமோத்தேயுவிற்கு அப்போஸ்தலன் பவுல் ஒரு கடிதம் எழுதினார். “நன்மை செய்யுங்கள், நற்செயல்கள் எனும் செல்வத்தைச் சேர்த்து வையுங்கள், உங்களிடம் உள்ளதை அள்ளி வழங்க ஆயத்தமாக இருங்கள்” என்று சொல்லி உடன் வணக்கத்தாரை உற்சாகப்படுத்தினார். (1 தீ. 6:18, NW) இவர்களுக்கு மட்டும் அல்ல. எபிரேய கிறிஸ்தவர்களுக்கும் எழுதினார்: “நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்.” (எபி. 13:16) ஆனால் எதற்காக இவ்வாறு எழுதினார்? ஏனென்றால், “எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்” என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.—ரோ. 2:10.
2 அள்ளி வழங்குவதில் யெகோவா தேவன் ஓர் சிறந்த முன்மாதிரி. அனைத்தையும் சிருஷ்டித்த அவரே அனைத்திற்கும் சொந்தக்காரர். (வெளி. 4:11) அவர் சிருஷ்டித்தவற்றை நமக்காகவும் நம் சந்தோஷத்திற்காகவும் அள்ளி வழங்குகிறார். இதற்காக நாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஆனால் கடவுள் செய்திருக்கும் நன்மைகளை துளிக்கூட நினைத்து பார்க்காத மக்களே ஏராளமாக உள்ளனர். இவர்கள் நன்றிகெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அள்ளி வழங்குவதை யெகோவா நிறுத்திக்கொள்வதில்லை. மனிதர் உயிர் வாழ்வதற்காக உன்னத தேவன் எல்லாவற்றையும் தாராளமாக கொடுத்து வருகிறார். அவற்றை எல்லாரும் அனுபவிக்கும்படி அனுமதிக்கிறார். (மத். 5:45) அவருடைய தாராள குணத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது! நாம் என்றென்றும் உயிர் வாழ்வதற்காக தம்முடைய பாசமிக்க சொந்த மகனையே பலியாக கொடுத்தார். அவர் நம்மிடம் காட்டியிருக்கும் இந்த ஈடிணையற்ற அன்பிற்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா? சக மனிதர்களிடம் தாராள குணத்துடன் நடந்துகொள்வதன் வாயிலாகவே அவருக்கு நன்றி செலுத்தலாம்.—2 கொ. 5:14, 15.
3 மற்றவர்களுக்கு என்ன கொடுக்கலாம்? நம்மிடமுள்ள எல்லா ஆஸ்திகளையும் அவருக்கு பிரியமான விதத்திலேயே பயன்படுத்த வேண்டும். உலகளாவிய பிரசங்கிப்பு வேலைக்கு பொருள் உதவி செய்யலாம். அதோடு ஆன்மீக விஷயங்களிலும் நம்முடைய முழு ஒத்துழைப்பை கொடுக்கலாம். நற்செய்தியே நம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆஸ்தி. ஏனென்றால், “அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை.” (ரோ. 1:16, பொ.மொ.) ஒவ்வொரு மாதமும், பிரசங்கிப்பு மற்றும் போதிக்கும் வேலையில் நம்முடைய நேரத்தையும் மற்ற செல்வங்களையும் தாராளமாக பயன்படுத்துவதன் மூலம் நற்செய்தி என்னும் ஆவிக்குரிய ஆஸ்தியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். இதனால் அவர்களும் நித்திய வாழ்க்கையை பெற்றுக்கொள்ள உதவி செய்யலாம்.
4 ஏழை எளியோருக்கு நாம் உதவிசெய்தால் யெகோவா மிகவும் மகிழ்வார். அதற்காக நம்மை தாராளமாக ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். அதோடு, செல்வத்தை வீணாக பூட்டி வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர் இவ்வாறு சொல்கிறார்: “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.” (நீதி. 11:4; 19:17) பிரசங்கிப்பு வேலையில் முழுமையாக பங்குகொள்வதும் பொருளாதார விதத்தில் அதை ஆதரிப்பதும், நம்மிடம் உள்ளதை எல்லாம் அள்ளி வழங்க ஆயத்தமாக இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்கு சிறந்த வழிகள்!