நன்மை செய்யுங்கள், பகிர்ந்து வாழுங்கள்
1 தொற்காள் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டு வந்தாள்.” (அப். 9:36, 39) அவளுடைய தாராள மனப்பான்மையால் அவளைத் தெரிந்திருந்த எல்லாருக்கும் அவள் பிரியமானவளாக இருந்தாள், யெகோவா தேவனுக்கும் பிரியமானவளாக இருந்தாள். “நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை” என எபிரெயர் 13:16 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. இன்று நாம் எப்படி நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் முடியும்?
2 ஒருவழி, நம் “மதிப்புமிக்க பொருட்களைப்” பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்கள் பயனடைய உதவலாம். (நீதி. 3:9, NW) உலகளாவிய வேலைக்கு நாம் கொடுக்கும் நன்கொடை உலகெங்கும் ராஜ்ய மன்றங்களும், மாநாட்டு மன்றங்களும் கிளை அலுவலகங்களும் கட்டப்படுவதற்கு வழிசெய்கிறது. தேவராஜ்ய போதனையிலிருந்து பயனடையவும் உற்சாகமூட்டும் ஆன்மீக கூட்டுறவை அனுபவிக்கவும் நம் தாராள மனப்பான்மை லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது.
3 ஆறுதலை பகிர்ந்துகொள்ளுதல்: பேரழிவுகள் தாக்கும்போது சக விசுவாசிகளுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, “நன்மை செய்ய” யெகோவாவின் ஜனங்கள் தயாராக இருக்கிறார்கள். (கலா. 6:10) பிரான்சிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்துக்குப் பிறகு அதற்கு அருகே குடியிருந்த ஒரு தம்பதியர் இவ்வாறு சொன்னார்கள்: “உதவியளிக்க நம் கிறிஸ்தவ சகோதரர்கள் உடனே ஓடோடி வந்தார்கள். அவர்கள் எங்களுடைய அப்பார்ட்மென்டையும் எங்கள் கட்டடத்திலிருந்த மற்ற அப்பார்ட்மென்டுகளையும் சுத்தப்படுத்துவதில் உதவினார்கள். இத்தனை பேர் வந்து உதவி செய்வதைப் பார்த்து எங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.” இன்னொரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “மூப்பர்கள் எங்களுக்கு உதவ வந்தார்கள். எங்களை உற்சாகப்படுத்தினார்கள். சொல்லப்போனால், பொருள் உதவியைவிட அதுதான் முக்கியமாக எங்களுக்குத் தேவைப்பட்டது.”
4 அண்டை அயலில் உள்ளவர்களுக்கு பல விதங்களில் நாம் உதவலாம்; அதில் அதிக பயனுள்ள வழி, சத்தியத்தின் மதிப்புமிக்க அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகும்; யெகோவா தாமே வாக்குறுதி அளித்திருக்கும் “நித்திய ஜீவனை” பற்றிய ‘நம்பிக்கையும்’ அந்த அறிவில் உட்படுகிறது. (தீத். 1:1-3) உலக நிலைமைகளைக் குறித்தும் தங்கள் பாவ நிலையைக் குறித்தும் துக்கிப்பவர்களுக்கு பைபிளின் செய்தி உண்மையான ஆறுதலை அளிக்கிறது. (மத். 5:4) நமக்குச் சக்தி இருக்கும்போது நன்மை செய்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாழ்வோமாக.—நீதி. 3:27.