ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்
1 சக விசுவாசிகளைப் பலப்படுத்துவதற்கு அப்போஸ்தலன் பவுல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். (அப்போஸ்தலர் 14:19-22) அவரைப் போலவே நாமும் நம்முடைய சகோதரர்கள் கஷ்டப்படும்போது அவர்கள்மேல் ஆழ்ந்த அக்கறை காட்டுகிறோம், அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். இதை மூப்பர்கள் மட்டுமல்ல, எல்லோருமே செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 15:1, 2) ‘தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்’ என்ற பைபிளின் அன்பான அறிவுரைக்கு இசைய நடக்க உதவும் இரண்டு வழிகளைக் கவனியுங்கள்.—1 தெ. 5:11, NW.
2 மற்றவர்களுடைய தேவைகளைப் பகுத்தறியுங்கள்: தொற்காள் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (அப். 9:36, 39) யாரெல்லாம் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்து, அவர்களுக்குத் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் அவள் செய்தாள். தொற்காள் நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரி அல்லவா! உங்களுடைய சபையில் உள்ள வயதான ஒருவரைக் கூட்டத்திற்கு உங்கள் வண்டியில் அழைத்துச்செல்ல வேண்டியிருக்கலாம். அல்லது ஒரு பயனியருக்கு வாரத்தில் ஒரு நாள் பிற்பகல் வேளையில் ஊழியம் செய்ய ஒருவர் தேவைப்படலாம். அவர்களுடைய தேவைகளை உணர்ந்து நடைமுறையான உதவிகளைச் செய்யும்போது, அவர்கள் எந்தளவிற்கு ஊக்கமடைவார்கள் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்!
3 ஆன்மீகக் கலந்துரையாடல்: நம்முடைய பேச்சிலும் மற்றவர்களை நாம் ஊக்கப்படுத்தலாம். (எபே. 4:29) அனுபவமுள்ள ஒரு மூப்பர் இவ்வாறு சொன்னார்: “மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டுமென்றால் நீங்கள் ஆன்மீகக் காரியங்களைப் பற்றி பேசுங்கள். ஊக்கமூட்டும் கலந்துரையாடலை ஆரம்பிக்க, ‘சத்தியத்தை நீங்கள் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?’ போன்ற நேரடியான கேள்விகளைக் கேளுங்கள்.” உங்கள் சபையிலுள்ள இளைஞர்களிடம் உள்ளப்பூர்வ அக்கறையைக் காட்டுங்கள். சோர்வடைந்தவர்களிடமும் கூச்ச சுபாவமுள்ளவர்களிடமும் நீங்களே போய்ப் பேசுங்கள். (நீதி. 12:25) சக விசுவாசிகளுடன் உலகப்பிரகாரமான பொழுதுபோக்குகளைப் பற்றியே சதா பேசிக்கொண்டு, ஆன்மீகக் காரியங்களைப் பற்றி பேசாமல் இருந்துவிடாதீர்கள்.—ரோ. 1:10-12.
4 மற்றவர்களை ஊக்கப்படுத்த நீங்கள் எதைப் பற்றி பேசலாம்? சமீபத்தில், யெகோவாமீது உங்களுக்கிருக்கும் போற்றுதலை இன்னும் அதிகமாக்கிய ஒரு பைபிள் நியமத்தை தனிப்பட்ட படிப்பின்போது நீங்கள் வாசித்தீர்களா? பொதுப் பேச்சில் அல்லது காவற்கோபுர படிப்பில் கேட்ட குறிப்புகள் உங்களை உந்துவித்ததா? விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஓர் அனுபவம் உங்கள் இருதயத்தைத் தொட்டதா? இதுபோன்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை நீங்கள் நெஞ்சார நேசித்தால், மற்றவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் எப்போதும் உங்களால் பேச முடியும்.—நீதி. 2:1; லூக். 6:45.
5 நடைமுறையான உதவிகள் செய்வதன் மூலமும் நம்முடைய நாவை ஞானமாகப் பயன்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக.—நீதி. 12:18.