நீங்கள் கூச்ச சுபாவம் உடையவரா?
1 அம்மாவுக்கு பின்னாடியோ அல்லது அப்பாவுக்கு பின்னாடியோ மறைந்து நின்றுகொண்டு, அவ்வப்போது எட்டி எட்டிப்பார்க்கும் பிள்ளையை நாம் அனைவரும் அடிக்கடி பார்த்திருப்போம். இது இயற்கையே. ஏனென்றால், பிள்ளைகள் கூச்ச சுபாவம் உடையவர்கள். பெரியவர்களான பிறகும்கூட, அநேகர் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருக்கின்றனர். ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு இது ஒரு தடையாக உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் இதை எப்படி சமாளிக்கலாம்?
2 கூச்சத்தை சமாளித்தல்: வெளித்தோற்றத்தைவிட “இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே” மிக முக்கியம். (1 பே. 3:4) யெகோவாவிடமும் உங்கள் அயலாரிடமும் உள்ள உங்கள் அன்பை பலப்படுத்துங்கள். பிரசங்க வேலையை செய்வது, தன்னலமற்ற அன்பை காட்டும் மிகச் சிறந்த வழிகளுள் ஒன்று என்பதை முழுமையாக நம்புங்கள். தனிப்பட்ட படிப்பையும் கூட்டங்களுக்கு செல்வதையும் தவறாமல் செய்யுங்கள். இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள். குறிப்பாக என்ன உதவி தேவையோ அதைச் சொல்லி யெகோவாவிடம் ஜெபியுங்கள். யெகோவா மீது இருக்கும் உறுதியான விசுவாசமும் பற்றுதலும் நம்பிக்கையை வளர்க்கும். ‘திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமான தைரியத்தையும்’ கொடுக்கும்.—பிலி. 1:14.
3 அந்தளவுக்கெல்லாம் செய்ய முடியாது என்ற எண்ணத்தை மனதிலிருந்து அகற்றுங்கள். தீமோத்தேயுவும் இதற்காக முயற்சி செய்ய வேண்டியிருந்ததாக தோன்றுகிறது. ஏனென்றால், இது குறித்து பவுல் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினார். அவருடைய “இளமையைக் குறித்து ஒருவனும் . . . அசட்டை பண்ணாதபடிக்கு,” “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமு[ள்ள] . . . ஆவியையே கொடுத்திருக்கிறார்” என நினைப்பூட்டினார். (1 தீ. 4:12; 2 தீ. 1:7) கடவுளை முழுமையாக நம்பி செயல்பட்டதால் தீமோத்தேயுவை சிறந்த முறையில் யெகோவா பயன்படுத்தினார். அதேபோல, நீங்கள் செயல்பட்டால் உங்களையும் கடவுள் பயன்படுத்துவார்.—சங். 56:11.
4 ஒரு சகோதரி தன்னுடைய கூச்ச சுபாவத்தை எப்படி சமாளித்தார் என சற்று சிந்திப்போம். இந்த சகோதரியின் கணவன் சத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர். இவருடைய சுபாவத்தால் இந்த சகோதரி தன் கணவனுக்கு மிகவும் பயந்தார். ஆனால், மத்தேயு 10:37-ஐ மறுபடியும் மறுபடியும் ஆழ்ந்து யோசித்து, தைரியத்தை வளர்த்துக்கொண்டார். இவ்விதமாக கூச்ச சுபாவத்தை சமாளித்தார். அதோடு, ஊழியத்தில் பேசுவதும் சுலபமாகியது. இவ்வாறு அவர் உறுதியாக நிலைத்திருந்ததால், அவருடைய கணவன், தாய், சகோதரர்கள் எல்லாருமே சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்!
5 தயாரிப்பு அவசியம்: ஊழியத்திற்காக நீங்கள் நன்கு தயாரித்தீர்களென்றால், உங்களுடைய நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் அல்லது நம் ராஜ்ய ஊழியத்தின் பழைய பிரதிகளிலிருந்து எளிய முறையில் பேசுவதற்கான அளிப்புகளை தேர்ந்தெடுங்கள். அதை திரும்ப திரும்ப சொல்லிப் பழகுங்கள். அநாவசியமாக மனதில் கவலையை வளர்க்காமல், நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களோடு ஊழியம் செய்து தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஊழியத்தில் நீங்கள் சந்திப்பவர்களில் பலர் உங்களைப் போலவே கூச்ச சுபாவம் உடையவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். என்றாலும், ராஜ்ய செய்தி எல்லாருக்கும் சொல்லப்பட வேண்டும்.
6 நீங்கள் கூச்ச சுபாவம் உடையவராய் இருப்பதால், சோர்ந்து விடாதீர்கள். அதை சமாளிக்க முயற்சிகளை எடுத்தீர்களென்றால், நற்செய்தியை திறமையாக பிரசங்கிக்க யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவுவார். அப்போது, ஊழியத்தை நீங்கள் சந்தோஷமாக செய்ய முடியும்.—நீதி. 10:22.