உங்கள் சகாக்களின் செல்வாக்கும் பிரசங்க சிலாக்கியமும்
1 சகாக்களின் செல்வாக்கு, அது நல்லதோ கெட்டதோ, மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். யெகோவாவின் உடன் வணக்கத்தார் நம்மீது நல்ல செல்வாக்கு செலுத்துகின்றனர், அதனால் நற்காரியங்களைச் செய்ய நமக்குத் தூண்டுதல் கிடைக்கிறது. (எபி. 10:24, பொ.மொ.) அதே சமயத்தில் சத்தியத்தில் இல்லாத குடும்பத்தினர்கள், உடன் வேலை செய்பவர்கள், பள்ளியில் படிப்பவர்கள், அக்கம்பக்கத்தார், தெரிந்தவர்கள், பழகியவர்கள் ஆகியோர் கிறிஸ்தவ நியமங்களை மீறிநடக்க நம்மை வற்புறுத்தலாம். “கிறிஸ்துவுக்கேற்ற [நம்] நல்ல நடக்கையைத் தூஷிக்கிற” வகையில் அவர்கள் பேசலாம். (1 பே. 3:16) இப்படிப்பட்ட சகாக்களின் கெட்ட செல்வாக்கால் நமக்குத் தொல்லைகள் வந்தாலும் பிரசங்கிக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தில் எவ்வாறு உறுதியாக இருக்கலாம்?
2 குடும்பத்தினர்கள்: சில சமயங்களில், தன் மனைவி மக்கள் வெளி ஊழியத்திற்கு செல்வதை சாட்சியாக இல்லாதவர் விரும்பாதிருக்கலாம். இதுவே மெக்ஸிகோவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நிகழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் தாயும் ஏழு பிள்ளைகளும் சத்தியத்தைத் தழுவினர். சத்தியத்தை ஏற்காத தகப்பனோ, தன் குடும்பத்தார் பிரசங்கிப்பதற்கு வீடுவீடாக செல்வதையும் பைபிள் புத்தகங்களை கொடுப்பதையும் விரும்பவில்லை. அதை கௌரவ குறைவாக அவர் நினைத்ததே அதற்குக் காரணம். ஆதலால் ஆரம்பத்தில் ஊழியத்திற்கு முட்டுக்கட்டை வைத்தார். அவரது மனைவியும் பிள்ளைகளுமோ, யெகோவாவை சேவிக்கவும் ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ளவும் உறுதியோடு இருந்தனர். நாளடைவில், அவரது மனம் மாறியது. கடவுளுடைய ஏற்பாடாகிய பிரசங்க வேலை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தார்; அதனால் அவரும் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார். சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு 15 வருடங்கள் எடுத்தன. ஆனால், அவருடைய குடும்பத்தினர் மட்டும் பிரசங்க சிலாக்கியத்திற்கு அந்தளவு உறுதி காட்டவில்லை என்றால் அவர் இப்படி மாறியிருப்பாரா?—லூக். 1:74; 1 கொ. 7:16.
3 உடன் வேலை செய்பவர்கள்: உங்களோடு வேலை பார்ப்பவர்களிடம் சாட்சி கொடுக்க முயலுகையில் சிலர் அதில் ஆர்வம் காட்டாதிருக்கலாம். ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். ஒரு சமயம் அலுவலகத்தில் உலக முடிவைப் பற்றிய பேச்சு வந்தபோது, மத்தேயு 24-ம் அதிகாரத்தை வாசித்துப் பார்க்கும்படி மற்றவர்களிடம் சொன்னாள். அவர்களோ அவளை கேலி செய்தனர். என்றாலும் சில நாட்களுக்குப் பிறகு அவளுடன் வேலை பார்ப்பவர்களில் ஒருத்தி, தான் அந்த அதிகாரத்தை வாசித்துப் பார்த்ததாகவும் அதிலிருந்த விஷயங்கள் தனக்குப் பிடித்திருந்ததாகவும் கூறினாள். அவளிடம் ஒரு பிரசுரம் கொடுக்கப்பட்டது; அவளும் அவளது கணவனும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டனர். முதல் படிப்பு காலை இரண்டு மணி வரை நீடித்தது. மூன்றாவது படிப்பைத் தொடர்ந்து அவர்கள் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர். விரைவிலேயே புகையிலை உபயோகத்தை நிறுத்திவிட்டு ஊழியத்திற்குச் செல்ல ஆரம்பித்தனர். அந்தச் சகோதரி தன் நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்திருந்தால் இந்த பலன் கிடைத்திருக்குமா?
4 பள்ளியில் படிப்பவர்கள்: இளம் சாட்சிகளுக்கு பள்ளியில் சகாக்களிடமிருந்து தொல்லை வருவது சகஜம்; பிரசங்க வேலையில் ஈடுபட்டால் சக மாணவர்கள் மட்டம் தட்டி பேசுவார்கள் என பயப்படுவதும் சகஜம்தான். ஐக்கிய மாகாணங்களில் சாட்சியாக இருக்கும் டீனேஜ் பெண் சொன்னதாவது: “எங்கே என்னைக் கேலி செய்வார்களோ என நினைத்து மற்ற இளைஞர்களிடம் சாட்சிகொடுக்க எனக்குப் பயமாக இருந்தது.” ஆகவே பள்ளியிலும் சரி, ஊழியத்திலும் சரி, தன் பள்ளி சகாக்களிடம் சாட்சி கொடுக்கும் சந்தர்ப்பத்தையே அவள் தவிர்த்தாள். இப்படிப்பட்ட பயம் உங்களுக்கும் இருந்தால் அதை எப்படி சமாளிக்கலாம்? யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள், அவரது அங்கீகாரப் புன்னகையை நாடுங்கள். (நீதி. 29:25) ஊழியத்தில் திறமையுடன் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவதை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள். (2 தீ. 2:15) மேலே குறிப்பிடப்பட்ட பெண்ணும் அதைத்தான் செய்தாள். பள்ளியில் தன் சகாக்களிடம் சாட்சி கொடுப்பதற்கு ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்தாள். பள்ளியில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாட்சி கொடுக்க ஆரம்பித்தாள். இதனால் நல்ல பலன்கள் கிடைத்தன; விரைவில் தனக்கு தெரிந்த அனைவரிடமும் சத்தியத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டாள். “ஒளிமயமான எதிர்காலம் இருப்பது அந்த இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்; அவர்களுக்கு உதவத்தான் யெகோவா நம்மை உபயோகித்து வருகிறார்” என அவள் சொல்லி முடித்தாள்.
5 அக்கம்பக்கத்தார்: நாம் சாட்சிகளென்ற காரணத்தால் அக்கம்பக்கத்தாரும் அறிமுகமானவர்களும் நம்மை அலட்சியப்படுத்தலாம். அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் பயந்தால், ‘நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியத்தை அவர்கள் எப்படி அறிந்துகொள்வார்கள்? அவர்களது இதயத்தைத் தொட நான் என்ன செய்யலாம்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். முடியும்போதெல்லாம் அக்கம்பக்கத்தாரிடம் கொஞ்சம் கொஞ்சமாக சத்தியத்தைப் பேசினால் நல்ல பலன் கிடைப்பதாக ஒரு வட்டார கண்காணி குறிப்பிட்டார். நேர்மை நெஞ்சமுள்ளோரை கண்டுபிடிப்பதில் சோர்ந்துவிடாமல் இருக்க தேவையான மனவுறுதிக்கும் ஞானத்துக்கும் யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடுங்கள்.—பிலி. 4:13, பொ.மொ.
6 ஒருவேளை நம் சகாக்களின் தொல்லை தாங்காமல் அவர்கள் போக்கிலேயே நாமும் சென்றால்? அவர்களுக்கு சந்தோஷம்தான். ஆனால் அப்படி செய்வது, அவர்களுக்கு நன்மை தருமா, இல்லை நமக்குத்தான் நன்மை தருமா? இயேசுவையும் அவருடைய சொந்த ஜனங்களே எதிர்த்தனர். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்களின் ஏச்சுப் பேச்சுக்கள் எல்லாவற்றையும் அவர் சகித்தார். ஏனெனில், யெகோவா வகுத்த பாதையில் தாம் கடைசிவரை உண்மையாய் நடப்பதே அவர்களுக்கு உதவும் என்பதை அவர் அறிந்திருந்தார். இவ்வாறு, “பாவிகள், தமக்கு விரோதமாக பேசுகையில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக அவற்றையெல்லாம் சகித்தார்.” (எபி. 12:2, 3, NW) நாமும் அப்படியே சகிக்க வேண்டும். ராஜ்ய செய்தியை பிரசங்கிக்க உங்களுக்கிருக்கும் சிலாக்கியத்தை முடிந்த மட்டும் முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள தீர்மானமாய் இருங்கள். இவ்வாறு செய்வதால், ‘உங்களையும் உங்கள் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவீர்கள்.’—1 தீ. 4:16.