நற்செயல்களால் யெகோவாவை போற்றிப் புகழுங்கள்
1 சீறிவரும் புயலில் நீங்கள் சிக்கித் தவிக்கும்போது அடைக்கலம் கிடைக்கையில் உங்களுக்கு எவ்வளவு நிம்மதி! அவ்வாறு நீங்கள் அடைக்கலம் புகுந்த வீடு கதகதப்பாகவும் பாதுகாப்பாகவும், அந்த வீட்டார் நன்கு உபசரிக்கும் பண்புள்ளவர்களாகவும் இருந்தால், நீங்கள் அங்கு அதிக மகிழ்ச்சியுடன் தங்குவீர்கள். ராஜ்ய பிரசங்க வேலையும் மக்களை சாத்தானிய உலகிலிருந்து காப்பாற்றி இப்படிப்பட்ட ஓர் வீட்டிற்குள்தான் வழிநடத்துகிறது. நம்முடைய அன்றாட நடத்தை, பாதுகாப்பளிக்கும் இந்த வீட்டுக்குள் மற்றவர்களை வரவேற்கும் விதமாக இருக்கிறதா? ஏனெனில், ஜனங்கள் ‘நம்முடைய நற்செயல்களைக் கண்டு விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ என இயேசு சொன்னார்.—மத். 5:16, பொ.மொ.
2 நம்முடைய நடத்தையின் மூலம் யெகோவாவிடமும் அவருடைய அமைப்பிடமும் மற்றவர்களை எப்படி கவர்ந்திழுக்கலாம்? லூக்கா 6:31-லும், 10:27-லும் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைய ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையை வடிவமைக்க இடமளிப்பதன் மூலம். சக மனிதரிடம் அன்பும் அக்கறையும் காட்டவும், ஈவிரக்கமோ அக்கறையோ இல்லாத இந்த உலகிலிருந்து மாறுபட்டவர்களாய் இருக்கவும் இது நம்மை தூண்டுவிக்கும்.
3 கடல் பயணம் ஒத்துக்கொள்ளாமல் ஓர் இளம் பெண் படகில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அதனால் தன் சிறு குழந்தையையும் கவனித்துக்கொள்ள அவளால் முடியவில்லை. அந்தப் படகில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு சகோதரி இதைப் பார்த்து, அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வந்தார். இதற்கு கைமாறாக என்ன செய்வதென்றே தெரியவில்லை என அந்தப் பெண் சொன்னபோது, ‘அடுத்த தடவை யெகோவாவின் சாட்சிகள் உங்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் சொல்வதை தயவுசெய்து காதுகொடுத்து கேளுங்கள், அது போதும்’ என அந்த சகோதரி பதிலளித்தார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்தாள். இப்போது அவளும் அவளுடைய கணவரும் சாட்சிகள். அவர்கள் ராஜ்ய செய்திக்கு செவிசாய்த்ததற்கு நற்செயல்களே காரணம்.
4 நம் வாழ்க்கையே உட்பட்டிருக்கிறது: அக்கம்பக்கத்தில், வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில், பொழுதுபோக்கு இடங்களில் நாம் நடந்துகொள்ளும் விதத்தை மற்றவர்கள் கவனிக்கின்றனர். நம்மையும் நம் மதத்தையும் எடைபோட இது அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எனவே, பின்வரும் கேள்விகளை நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னையும் என் குடும்பத்தையும் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தார் நினைக்கிறார்களா? எதையும் காலம் தாழ்த்தாமலும் கவனமாகவும் செய்பவர்கள் என சக பணியாளர்களும் பள்ளி சகாக்களும் கருதுகிறார்களா? அடக்கமாகவும் கண்ணியமாகவும் உடுத்தியிருப்பதாக மற்றவர்கள் காண்கிறார்களா?’ நம்முடைய நற்செயல்கள் யெகோவாவின் வணக்கத்தின் பக்கமாக மற்றவர்களை ஈர்க்கலாம்.
5 கேலி பேச்சுக்கு கிறிஸ்தவர்கள் ஆளாவார்கள் என பேதுரு எச்சரித்தார். (1 பே. 4:4) அதேசமயத்தில், மற்றவர்கள் நம்முடைய நடத்தையைக் கண்டு நம்மை குறைசொல்லுமளவுக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. (1 பே. 2:12) நம்முடைய அன்றாட நற்செயல்கள் கடவுளுக்குப் புகழ் சேர்த்தால், உயரமான இடத்தில் வைக்கப்பட்ட தீபமாக இருப்போம்; யெகோவா தரும் அடைக்கலத்தை நோக்கி வர நாம் மற்றவர்களுக்கு வழிகாட்டுவோம்.—மத். 5:14-16.