மாநாடுகள்—சந்தோஷத்துக்குரிய நேரங்கள்!
1 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகள் அதிக சந்தோஷத்துக்குரிய நேரங்கள். நூற்றுக்கும் அதிகமான வருடங்களாக, நம் அமைப்பில் ஏற்படுகிற அதிகரிப்புக்கு காரணமாய் இருந்திருக்கின்றன இந்த மாநாடுகள். மிகச் சிறிய தொடக்கங்களிலிருந்து, உலகெங்கிலும் நடந்துவரும் நம் வேலையில் யெகோவாவின் செழுமையான ஆசீர்வாதங்களை பார்த்திருக்கிறோம். நவீன காலங்களில், 1893-ல் இல்லினாய்ஸிலுள்ள சிகாகோவில் நடந்த முதல் மாநாட்டுக்கு வந்திருந்த 360 பேரில் 70 பேர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றனர். கடந்த வருடம் நடந்த “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாடுகளுக்கு உலகெங்கும் மொத்தம் 94,54,055 பேர் வந்திருந்தனர், 1,29,367 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். சந்தோஷப்பட எப்பேர்ப்பட்ட அருமையான காரணம்!
2 பைபிள் காலங்களிலிருந்தே, இப்படி கூடிவருவது யெகோவாவின் போதனையை அளிப்பதற்கு மிகச் சிறந்த வழியாக இருந்திருக்கிறது. எஸ்றா மற்றும் நெகேமியாவின் காலங்களில், “காலமே தொடங்கி மத்தியானமட்டும்” நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதை மக்கள் கேட்டார்கள். (நெ. 8:2, 3) அந்த சமயத்தில் நியாயப்பிரமாணத்தை இன்னும் நன்கு புரிந்துகொண்டதால் மக்கள் ‘மிகுந்த சந்தோஷத்தை’ அனுபவித்தனர். (நெ. 8:8, 12) “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாக யெகோவா “ஏற்றவேளையிலே” தரும் நல்ல போதனையையும் ஆவிக்குரிய உணவையும் பெற மாநாடுகள் சிறந்த வாய்ப்பை அளிப்பதால் நாமும் சந்தோஷப்படுகிறோம். (மத். 24:45) மனிதன் “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” பிழைப்பான் என்று இயேசு சொன்னதால், மாநாடுகள் நம் ஆவிக்குரிய நலனுக்கு அத்தியாவசியமானவை.—மத். 4:4.
3 மாநாட்டுக்கு செல்ல எடுக்கப்படும் எந்த முயற்சியும் தகும்: இந்த வருடத்தின் “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆஜராயிருப்பதை அனைவரும் தனிப்பட்ட இலக்காக வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சீக்கிரமாக வரவும் முடிவு ஜெபத்திற்கு நாமும் சேர்ந்து “ஆமென்!” சொல்லும்வரை இருக்கவும் திட்டமிட வேண்டும். இவ்வாறு செய்வதற்கு நம் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டி இருக்கலாம். மாநாட்டுக்கு வருவதற்காக வேலையிலிருந்து விடுப்பு எடுப்பதில் சில பிரச்சினைகள் இருக்கலாம். சூழ்நிலையைப் பொறுத்து செயல்படலாம் என்றிராமல் உறுதியாக தீர்மானிப்பது அவசியம். தங்குவதற்கு இடவசதி, போக்குவரத்து போன்றவை அவசியம் என்றால் முன்னதாகவே அவற்றிற்கான ஏற்பாடுகளை செய்துவிட வேண்டும். எடுக்கப்படும் எந்த முயற்சியும் தகுந்ததே!
4 யெகோவாவின் மக்கள் ஒரு மாநாட்டுக்கு செல்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை பணத்தால் அளவிடுவதில்லை. 1958-ல் நியூ யார்க் நகரில் யெகோவாவின் சாட்சிகளுடைய தெய்வீக சித்தம் சர்வதேச மாநாட்டுக்கு செல்ல தீர்மானமாய் இருந்த சிலருடைய உதாரணங்களை கவனியுங்கள். வாலண்டியர் சேவையில் உதவுவதற்காகவும் மாநாட்டில் ஆஜராவதற்காகவும் தன் கட்டுமான தொழிலை ஒரு சகோதரர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவிட்டார். வர்ஜின் தீவுகளிலிருந்த ஒரு சகோதரர், ஆறு அங்கத்தினரை உடைய தன் முழு குடும்பமும் மாநாட்டுக்கு செல்வதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை விற்றார். ஓரிளம் தம்பதி, இரண்டு மாதத்திலிருந்து ஏழு வயதுக்குட்பட்ட தங்கள் மூன்று பிள்ளைகளையும் மாநாட்டுக்கு கூட்டிச் செல்வதற்காக தங்கள் விசைப் படகை விற்றனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த அண்ணன் தம்பி மூவரிடம், வேலைக்கு வராவிட்டால், திரும்பி வருகையில் அந்த வேலை பறிபோகும் என சொல்லப்பட்டது. என்றாலும், மறக்க முடியாத அந்த மாநாட்டுக்கு செல்வதிலிருந்து இது அவர்களை தடுக்கவில்லை.
5 நம் ஊக்கமான முயற்சிக்கு யெகோவா பலனளிக்கிறார்: யெகோவா தம் மக்களின் முயற்சிகளை கவனித்து, ஆசீர்வதிக்கிறார். (எபி. 6:10) உதாரணமாக, 1950-ல் தேவராஜ்ய அதிகரிப்பு மாநாட்டில், “புதிய காரிய ஒழுங்குமுறைகள்” என்ற விசேஷ பேச்சை வந்திருந்தவர்கள் கேட்டனர். “புதிய பூமியின் எதிர்கால பிரபுக்கள் பலர் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதை அறிவதில் இந்த சர்வதேச மாநாட்டுக்கு வந்திருக்கும் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் அல்லவா?” என்று கேட்டு சகோதரர் ஃபிரெட்ரிக் ஃபிரான்ஸ் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டினார். சங்கீதம் 45:16-ஐப் பற்றிய இந்த தெளிவான புரிந்துகொள்ளுதல், 50-க்கும் அதிகமான வருடங்களுக்குப் பின்னும் நம்மை மகிழ்விக்கிறது.
6 கடந்த வருட மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டபின், ஒரு குடும்ப தலைவர் போற்றுதலுடன் இவ்வாறு எழுதினார்: “சகோதரர்களே, இந்த மாநாடு எந்தளவுக்கு உயிர்காக்கும் ஒன்றாக இருந்தது என்று நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டீர்கள். வேலை காரணமாக, குடும்பமாக நகரத்தில் குடியேறினோம்; ஆவிக்குரிய நிலையில் மிகவும் தடுமாறிவிட்டோம். . . . எங்கள் கிறிஸ்தவ பொறுப்புகளை அசட்டை செய்துவிட்டோம். கூட்டங்களுக்கு செல்வதையும் ஊழியத்தில் பங்கெடுப்பதையும் நிறுத்தியே விட்டோம். . . . இந்த மாநாடு எங்களுக்கு புது தெம்பளித்தது; நாங்கள் மீண்டும் ஆவிக்குரிய இலக்குகளை வைத்து, அவற்றை அடைவதற்காக காரியங்களை சரியாக ஒழுங்கமைத்து வருகிறோம்.”
7 நமக்கு தேவையான ஆவிக்குரிய உணவை யெகோவா அளித்து வருகிறார். நம் மாநாடுகளில் செழுமையான பந்தியை ஆயத்தம் செய்து வைக்கிறார். இந்த ஏற்பாட்டுக்கு நாம் போற்றுதலுள்ளவர்களாய் இருந்தால், அப்போஸ்தலன் பேதுரு சந்திக்கையில் கொர்நேலியு சொன்னதைப் போல சொல்வோம்: “தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம்.” (அப். 10:33) இந்த வருடத்தின் “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ‘தேவசமுகத்தில் கூடியிருப்பதை’ நம் இலக்காக்கி, சந்தோஷப்படுவோமாக!